தோழர் நல்ல கண்ணு பிறந்தநாள் இன்று
தோழர் நல்ல கண்ணு பிறந்தநாள் இன்று
கவுன்சிலர் பதவியில் இருப்பவர்கூட, கோடிக்கணக்கில் சொத்துகளைச் சேர்த்திருக்கும்போது, பணத்தில் பற்றில்லாமல் வாழ்க்கையை நடத்திகொண்டிருப்பவர். மகளின் காதுகுத்து விழாவில்கூட, `எங்கே தோடு’ என்று கேட்டபோது, நண்பர் சிவசுப்பிரமணியத்துடன் கடைக்குப்போய் ‘கவரிங் தோடு’ வாங்கிக்கொண்டு வந்து, 'இதைக் குத்துங்கள், போதும்' என்றவர். அவரது 80-வது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு கோடி ரூபாய் வசூலித்துக் கொடுத்தது, கட்சி. அதைக் கட்சிக்கே திருப்பிக் கொடுத்துவிட்டார், நல்ல இதயம் படைத்த நல்லகண்ணு. கட்சியில் மாநிலப் பொறுப்புகளை வகித்தவர், தனக்கென இதுவரை ஒரு வீட்டைக்கூடக் கட்டிக்கொண்டதில்லை. காரில் செல்வதைக்கூடத் தவிர்த்தவர். சி.ஐ.டி நகரில் இருந்த வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் 2007 முதல் வசித்துவந்தவரை, `இலவசமாகத் தங்கிக்கொள்ளுங்கள்’ என்று கூற, அதை மறுத்து, 4,500 ரூபாய் வாடகை கொடுத்து வசித்தவர். இன்று கே.கே.நகரில் மற்றொரு வாடகை வீட்டில் இருக்கிறார். தமிழக அரசு ‘அம்பேத்கர் விருது’ கொடுத்து ஒரு லட்சம் ரூபாயை வழங்கியபோதும், பாதியைக் கட்சிக்கும் மீதியை விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் கொடுத்துவிட்டார்.
பொருளாதாரத்தைச் சேர்ப்பதில் நாட்டமில்லாமல், பொதுநலனுடனே வாழ்பவருடன் 58 வருடங்கள் இணைந்து குடும்ப வாழ்க்கையை நடத்தியிருக்கிறார், துணைவியார் ரஞ்சிதம் அம்மாள். அவரது இறப்பின்போது, ``என்னை, என்னைவிட முழுசா புரிஞ்சிகிட்டவ என் மனைவி. அரசியல் வாழ்க்கை, போராட்டம், காசு, பணம் சேர்க்கத் துடிக்காத மனசுனு என் போக்குக்கு என்னை விட்டவ. சுத்தி எத்தனையோ பேர் இருந்தாலும், எனக்குனு யாரும் இல்லைங்கிறதை உணரவெச்சிட்டே இருக்கு, அவளோட பிரிவு. நான் சம்பாதிச்சுது என்னனு எல்லாருக்கும் தெரியும். வெளியே போகும்போது செலவுக்கு அவகிட்டதான் காசு வாங்கிட்டுப் போவேன். கொஞ்சம் நிலம் இருந்து அதுல அரிசி வரும். மத்தபடி 'அது இல்ல... இது இல்ல'னு எதுவும் எங்கிட்ட சொல்லாம, அவளே சமாளிச்சு குடும்பத்தைக் கொண்டு போனா. என் பிறந்தநாளுக்கு துணிமணி எடுத்துக் கொடுப்பா. அவளுக்கு, நான் வீட்டுல இருந்தாலே பரிசுதானு சொல்லுவா” என நெகிழ்ந்தார். அவருக்கான ஒரே ஆறுதலாய் இருந்தவர் ரஞ்சிதம். இன்று அவரும் இல்லாமல் தனிமையில் உழன்றுகொண்டிருக்கிறார், நல்லகண்ணு. ரஞ்சிதத்தின் பிரிவைப்போல அவருக்கு மற்றொன்றும் இன்றுவரை வேதனைத் தந்துகொண்டிருக்கிறது. அது, கம்யூனிஸ்ட் இயக்கங்களின் பிளவு. நெஞ்சையே பிளந்த பிளவு அது. "இடதுசாரி இயக்கங்கள் ஒன்றாக இணையவேண்டும். அதுதான் இந்தியாவின் தேவை” என்று வேதனையுடன் கூறியிருந்தார்.
நன்றி: விகடன்
Comments