பொன்மணி வைரமுத்து

 


வீட்டில் மூத்தப்பெண் என்பதால், எனக்கு என் தங்கைகளைவிடக் கட்டுப்பாடுகள் அதிகம். கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டு என்று நான் வீடு திரும்ப சற்றுத் தாமதமானாலும் திட்டுவார்கள். வீட்டில் அவர்கள் என்மீது கொண்ட சிறப்பு அக்கறைக்கும், கவலைக்கும் வேறொரு காரணம் இருந்தது! அது... 'எனக்கு உறவிலோ என் இனத்திலோ திருமணம் நடக்காது!’ என்று என் ஜாதகத்தை வைத்து என் தாத்தா குமாரசாமி உடையார் என்னைப் பற்றி சொன்ன ஜோதிடம்தான்!

பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராக இருந்த அப்பா தா.கு.முருகேசனுக்கு கவிதை, கதை, இலக்கியம் இவற்றில் ஆர்வம் அதிகம். என் கவிதை ஆர்வத்தைத் தூண்டுவிடுவதற்காக பச்சையப்பன் கல்லூரியில் தன் மாணவர்களாக இருந்தவர்கள் எழுதிய படைப்புகளையெல்லாம் எடுத்துவந்து படிக்கத் தருவார். அதுபோலத்தான் அவர் 'வைகறை மேகங்கள்’ என்ற கவிதை நூலையும் என்னிடம் தந்தார்.
அது ஒரு முகூர்த்த நேரம் என்று நினைக்கிறேன். என் கவிஞரை, என் எதிர்காலக் கணவரை நான் அறியாமலிருந்த அந்தச் சந்தர்ப்பத்தில், அவரின் முதல் வடிவமாக வந்து என்னை சிலிர்க்க வைத்தது அந்தப் பெட்டகம்! பெயர், வைரமுத்து என்று நவரத்தினங்களை ஞாபகப்படுத்தியது. புத்தகத்தின் பின் அட்டையில் 'இந்தப் புத்தகப் பூமியைப் படைத்தவன்’ என்று வாசகத்துக்கு மேல் கவிஞருடைய சிரித்த முகம். அந்த கவிதையின் சந்தங்களும் அணுகுமுறையும் சொல்லழகும் என்னை அப்படியே கொள்ளை கொண்டன! அந்தச் சிலிர்ப்புக் குறையாத நிலையில் அப்படியே அந்தக் கவிஞருக்கு ஒரு கடிதமும் எழுதினேன்.
சீக்கிரத்திலேயே அவர் முகத்தை பாரதியார் சங்கத்தில் நடந்த ஒரு கவிதைப் போட்டியின்போது நேரில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது! அறிமுகம் செய்து வைக்காமல் பேசும் பழக்கம் எனக்கு இல்லை என்பதாலும், அவருக்கு என்னை யாரென்று அடையாளம் தெரியாததாலும் அன்று நாங்கள் பேசிக் கொள்ளவில்லை.
ஆனால், அதற்கடுத்த சில நாட்களிலேயே ஒரு வானொலி நிகழ்ச்சிக்கு வந்தபோது, என் கையெழுத்தை வைத்து என்னை அடையாளம் தெரிந்துகொண்டார் அவர்.
சில நாட்களிலேயே என் தந்தைக்கு உடல்நலமில்லாத ஒரு சந்தர்ப்பத்தில், அவர் என் வீடு தேடி வந்தார். இந்த முறை என் தந்தையே எங்களிருவரையும் முறைப்படி அறிமுகம் செய்து வைத்ததால், நாங்கள் பேசத் தொடங்கினோம். எங்கள் நட்புப் பறவைக்கு பச்சையப்பன் கல்லூரி நூலகத்திலும் வானொலி நிலையத்திலும் ஒவ்வொரு சிறகாய் முளைத்துக் கொண்டிருந்தன.
என்னை அவர்பால் ஈர்த்த விஷயங்களில் முக்கியமானது, கம்பீரமான அந்தக் காந்தக் குரல்! நாங்கள் பேசிக்கொள்ள ஆரம்பித்தபின், அந்தக் குரலை மனசுக்குள் வாங்கிக் கொள்வதில் ஒரு தனி சுகம் எனக்கு!
எங்கள் பெயர் ஒற்றுமை.. கவிதையில் ஆர்வம், ரசனை என்று எல்லாம் ஒன்றாக இருந்ததை நாங்கள் உணரத் தொடங்கியபோதுதான் எங்களுக்குள் அன்பு மலரத் தொடங்கியது. எங்களுக்குள் வயது வேறுபாடுகூடப் பெரிதாக இல்லை. அவரைவிடப் பத்துமாதங்களே நான் சிறியவள்.
நாங்கள் இருவருமே பல இலக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாகப் பங்கேற்கும் வாய்ப்புத் தொடர்ந்து வாய்த்தது... எங்கள் இருவரையும் ஒன்றாகச் சேர்த்துப் பார்க்கும் சிலர் கண்களில் கேள்விக்குறியும் கூடவே எழும்பும்! ஒரு வானொலி நிகழ்ச்சியில் எங்களைப் பற்றித் துருவித் துருவி கேட்டுத் தெரிந்துகொண்ட கவியரசி சௌந்திரா கைலாசம்தான் எங்கள் திருமணம் பற்றிக் கேள்விப்பட்டவுடன் என் கணவர் மூலம் எனக்கொரு புடவையும் பரிசாகத் தந்து வாழ்த்தினார். எங்கள் வாழ்வில் மிக முக்கியமான கட்டங்களில் உதவி தேவைப்பட்டபோதெல்லாம் வந்து உதவியவர் அவர்.
கட்டுப்பெட்டியாக வளர்க்கப்பட்ட ஒரு பெண் தன் காதலை வீட்டில் சொன்னால் என்ன நடக்கும்...? எதிர்பார்த்தபடியே எங்கள் வீட்டில் அணுகுண்டுகள் வெடித்தன... முக்கியமாய் என் அம்மாவால் இந்த விஷயத்தை ஜீரணிக்கவே முடியவில்லை...! கவிஞரின் கிராமமும் பொக்ரான் போலானது!
வீட்டில் எனக்கடுத்து தேன்மொழி, முல்லை, தாமரை என்று இன்னும் மூன்று பெண்கள் இருந்தார்கள். பெரியவளே இதுபோல் ஜாதி விட்டு ஜாதி கல்யாணம் செய்தால், மற்ற பெண்களுக்கெல்லாம் எப்படி கல்யாணமாகும் என்பதே என்னைப் பெற்றவர்களுக்கு கவலை! அவர் கிராமத்திலோ, ''ஊரிலேயே, கல்லூரி போய் படித்த ஒரே பையனுக்கு காரும் கிலோ கணக்கில் நகையுமாய் பெண்கள் காத்திருக்க, யாரையோ போய் எந்த செலவுமில்லாமல் மகன் பண்ணிக் கொள்கிறானே’ என்ற கவலை!
எங்கள் ரிஜிஸ்தர் திருமணம் நடந்தபோது ஆசீர்வாதம் செய்ய உறவுகளில் யார் கையும் நீளவில்லை...
திருவல்லிக்கேணியின் தக்கூடிக்கான் பகதூர் தெருவில் ஒரு சின்ன போர்ஷனில்தான் எங்கள் குடித்தனம் ஆரம்பமாயிற்று... அப்போது இவர் சட்டத்துறையில் மொழி பெயர்ப்பாளராக வேலை பார்த்து வந்தார். ஆரவாரமில்லாத அமைதியான ஆனால், இனிமையான இல்லற வாழ்க்கை!
வீட்டுக்குள் எங்கள் விளையாட்டும்கூட கவிதை சார்ந்தே இருக்கும்... 'வெண்பா’வுக்கான கடைசி அடியை நான் தர, இவர் நிமிஷத்துக்கு ஒரு வெண்பா என்ற கணக்கில் சொல்லுவார். கவிதைகளில் வெண்பா எழுதுவது மட்டும் கொஞ்சம் கடினம்.. அதற்கு கடுமையான இலக்கணம் இருக்கிறது!
முதல் மூன்றாண்டுகளுக்கு வீட்டில் ஒரு மின்விசிறிகூட இல்லை. நானாக விரும்பிச் செய்துகொண்ட திருமணம் என்பதால், என் பிறந்த வீட்டிலிருந்து ஒரு ஸ்பூனைக் கூடக் கொண்டு வரவில்லை.
சிக்கனமான இருந்தாலும், எங்கள் வாழ்க்கையின் வறுமையை ஒரு வேலை வேண்டும் என்றெண்ணித் தான் மீனாட்சிக் கல்லூரியில் தமிழ்த்துறையின் துணைப் பேராசிரியையாக சேர்ந்தேன்!
அதன் பிறகு, அங்கு நான் பணிபுரிந்த அந்த இருபதாண்டுகளும் இனிமையானவை. கல்லூரியில் சேர்ந்த புதிதில் நல்ல சேலைகளாய் நான்கு மட்டுமே எனக்கு இருந்தன. அதையே திருப்பித் திருப்பி கட்டிக்கொண்டு போவேன்.
பொன்மணி வைரமுத்து
நன்றி: விகடன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி