பஞ்சு போன்ற சுவையான ரவா இட்லியை சுலபமாக வீட்டிலேயே செய்திட
பஞ்சு போன்ற சுவையான ரவா இட்லியை சுலபமாக வீட்டிலேயே செய்திட
வழக்கமான இட்லி, தோசை என்று சமைத்து கொடுக்காமல் அதே இட்லியை சற்று வித்தியாசமான முறையில் சுவையாக செய்து கொடுத்து பாருங்கள். நான்கு இட்லி சாப்பிடுபவர்கள் கூட இன்னும் இரண்டு இட்லி வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும். இதனுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட வெங்காய சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி, தேங்காய் சட்னி இவற்றில் எதை வேண்டுமானாலும் சேர்த்து தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். இதனை செய்வதற்கு நேரமும் மிகவும் குறைந்த அளவு தான் தேவைப்படும். இந்த ரவா இட்லி செய்வதற்கு சேர்க்கப்படும் பொருட்களும் வீட்டில் எப்பொழுதும் பயன்படுத்தும் பொருட்கள் தான்
தேவையான பொருட்கள்: ரவை – ஒரு கப், தயிர் – முக்கால் கப், நெய் – ஒன்றரை ஸ்பூன், முந்திரி பருப்பு – 10, உளுத்தம்பருப்பு – ஒரு ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, கறிவேப்பிலை – ஒரு கொத்து, இஞ்சி சிறிய துண்டு – 1, சோடா உப்பு – கால் ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், கொத்தமல்லி தழை – ஒரு கொத்து.
செய்முறை: முதலில் கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயை அடுப்பின் மீது வைத்து, ஒன்றரை ஸ்பூன் நெய் ஊற்ற வேண்டும். நெய் நன்றாக உருகியதும் முந்திரி பருப்புகளை நெய்யில் சேர்த்து பொன்னிறமாக வறுத்து கண்டு, ஒரு தட்டில் மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதே கடாயில் அரை ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். இவற்றுடன் ஒரு கப் ரவை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து சிறிது நேரம் வறுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, அதனுடன் முக்கால் கப் தயிர் மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து அதனுடன் ஒரு கொத்து கொத்தமல்லி தழையை நறுக்கி சேர்த்து, அனைத்தையும் ஒன்றாக கலந்து விடவேண்டும். பிறகு இவற்றை 15 நிமிடம் அப்படியே ஊற வைக்க வேண்டும்.
15 நிமிடத்திற்க்கு பிறகு மாவு நன்றாக ஊறிய பின்னர் கெட்டியாகிவிடும். இவற்றுடன் மீண்டும் கால் கப் தண்ணீர் சேர்த்து, அதனுடன் ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் கால் ஸ்பூன் சோடா உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு, மாவினை இட்லி தட்டில் ஊற்றி, இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின்னர் இட்லி வெந்ததும் அதனை ஒரு தட்டில் வைத்து அதனுடன் ஏதேனும் சட்னி வைத்து பரிமாறி கொடுக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான ரவா இட்லி தயாராகிவிட்டது.
Comments