கோதுமை மாவில் செய்யக்கூடியஇடியாப்பம்
கோதுமை மாவில் செய்யக்கூடிய இந்த இடியாப்த்தை ஒருமுறை செய்து பாருங்கள்
கோதுமை மாவை வைத்து சற்று வித்தியாசமான செய்யக்கூடிய ஒரு உணவை பற்றி தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அவ்வாறு ஒரே மாதிரி உணவை தினமும் சாப்பிடாமல் சற்று வித்தியாசமாக செய்து கொடுத்தால் வீட்டில் உள்ள அனைவரும் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள். எனவே உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கும் கோதுமை மாவை வைத்து சுவையான இடியாப்பத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள்
தேவையான பொருட்கள்: கோதுமை மாவு – ஒரு கப், உப்பு – அரை ஸ்பூன், எண்ணெய் – 2 ஸ்பூன்.
செய்முறை: முதலில் ஒரு கப் கோதுமை மாவை அளந்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை அழுத்தமாக தட்டி தட்டி அழுத்தி எடுக்க கூடாது. சாதாரணமாக ஒரு கப் கோதுமை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதன் மீது ஒரு கடாயை வைத்து, அதில் எடுத்து வைத்துள்ள கோதுமை மாவை சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வறுத்த கோதுமை மாவினை ஒரு தட்டுக்கு மாற்றி ஆற வைக்க வேண்டும்.
பின்னர் அதே கடாயில் கோதுமை மாவை அளந்து அதே கப்பில் ஒரு கப் தண்ணீர் எடுத்து கடாயில் ஊற்றி கொதிக்க விடவேண்டும்.பிறகு அதனுடன் ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக் கலந்து விட வேண்டும். பின்னர் தண்ணீர் நன்றாக கொதித்ததும் அடுப்பை அனைத்துவிட வேண்டும். கொதித்த தண்ணீரை கோதுமை மாவுடன் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கரண்டியைப் பயன்படுத்தி பிசைந்து விட வேண்டும்.
பிறகு ஒரு பத்து நிமிடம் கோதுமை மாவை தட்டு போட்டு மூடி வைக்கவேண்டும். பத்து நிமிடம் கழித்து முடியை திறந்து கோதுமை மாவை நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு முறுக்கு உரலை எடுத்துக் கொண்டு அதனுள் இடியாப்ப அச்சை போட்டு கொள்ள வேண்டும். முறுக்கு உரலில் உட்பகுதியில் மாவு ஒட்டாமல் இருக்க லேசாக எண்ணெய் தடவி கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு இட்லி பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அடுப்பின் மீது வைத்து விட்டு, இட்லி தட்டில் லேசாக எண்ணெய் தடவி கொள்ள வேண்டும். பிறகு கோதுமை மாவை சிறிய உருண்டையாக எடுத்து முறுக்கு உரலில் சேர்த்து, இட்லி தட்டில் பிழிந்து விட வேண்டும்.
இவ்வாறு ஒவ்வொரு இட்லி தட்டிலும் இடியாப்பத்தை பிழிந்து கொண்டு, இட்லி பாத்திரத்தில் வைத்து, 7 நிமிடம் வேக வைத்து எடுத்தால் சுவையான கோதுமை மாவு இடியாப்பம் தயாராகிவிடும். இதனுடன் துருவிய தேங்காய், சர்க்கரை சேர்த்தும் சாப்பிடலாம். அல்லது தக்காளி சட்னி, தேங்காய் சட்னி இவற்றில் எதை வேண்டுமானாலும் சேர்த்து சாப்பிட மிகவும் அருமையான சுவையில் இருக்கும்.
Comments