திருப்பதியில் ஜன., 13ல் சொர்க்கவாசல் திறப்பு: 10 நாட்கள் திறந்திருக்கும்
திருப்பதியில் ஜன., 13ல் சொர்க்கவாசல் திறப்பு: 10 நாட்கள் திறந்திருக்கும்
திருப்பதி : திருமலை ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜன., 13லிருந்து 22 வரை 10 நாட்கள் சொர்க்க வாசல் திறக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி திருமலையில் நேற்று அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அவர் கூறியதாவது: ஜன., 13-ம் தேதி வைகுண்ட ஏகாதசி தினம். இதற்காக 13-ம் தேதியிலிருந்து 22-ஆம் தேதி வரை சொர்க்க வாசல் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். ஜன., 13ம் தேதி அதிகாலை 2:00 மணிக்குப் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு முக்கிய பிரமுகர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்த 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட், இலவச தரிசனம், கல்யாண உற்ஸவம், ஆர்ஜித பிரம்மோற்ஸவம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் பெற்ற பக்தர்கள் காலை 9:00 மணி முதல் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். தினமும் 45 ஆயிரம் பக்தர்களை ஏழுமலையான் தரிசனத்திற்கு அனுமதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காய்ச்சல், உடல்வலி, சளி உள்ளிட்ட அறிகுறி உள்ளவர்கள் தரிசனத்திற்கு வரவேண்டாம்.
ஏழுமலையான் தரிசனத்திற்கு வரக்கூடிய பக்தர்கள் கட்டாயம் இரண்டு டோஸ் தடுப்பு ஊசி போட்டதற்கான சான்றிதழ் அல்லது 48 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட நெகடிவ் சான்றிதழ் இருந்தால் எடுத்து வர வேண்டும்.ஜனவரி 1 மற்றும் வைகுண்ட ஏகாதசி நடக்கக்கூடிய 13ம் தேதி முதல் 22-ம் தேதி வரை சென்னையில் உள்ள தகவல் மையத்தில் தினசரி 30 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Comments