மொறுமொறுவென ஹோட்டல் தோசை

 தோசைக்கு மாவை இப்படி அரைத்தால் போதும். 

மொறுமொறுவென ஹோட்டல் தோசை




மொறுமொறு தோசை சாப்பிட வேண்டும் என்பதற்காகவே ஹோட்டலுக்கு சென்று ஸ்பெஷல் தோசை ஆர்டர் செய்து சாப்பிடுவார்கள். ஹோட்டலில் கிடைக்கக்கூடிய அதேபோல் தோசையை நம் வீட்டில் செய்தால் எப்படி இருக்கும். ஆசை தீர ஒன்றுக்கு மேற்பட்ட தோசைகளை சாப்பிட்டு மகிழ்ச்சி அடையலாம். உங்க வீட்டிலேயும் ஒரு முறை இந்த அளவுகளில் பொருட்களைப் போட்டு மாவை அரைத்து தோசை செய்து பாருங்கள். மொறு மொறு தோசை அப்படியே உடையும்.



2 டம்ளர் பச்சரிசி, 1 டம்ளர் புழுங்கலரிசி, 2 டேபிள்ஸ்பூன்  கடலைப்பருப்பு, 1/2 டேபிள்ஸ்பூன் வெந்தயம், 1/2 கப் உளுந்து. புழுங்கல் அரிசியை எதில் அளந்து இருக்கிறீர்களோ அதே கப்பில் மற்ற பொருட்களையும் அளந்து எடுத்துக் கொள்ளுங்கள். நம்முடைய வீட்டில் அளப்பதற்கு ஆழாக்கு அல்லது டம்ளர் வைத்திருப்போம் அல்லவா. அதில் அளந்து கொண்டால் சரியாக இருக்கும்.


மேல் சொன்ன எல்லா பொருட்களையும் ஒன்றாக ஒரே பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி முதலில் நன்றாக கழுவி விட வேண்டும். அதன் பின்பு நல்ல தண்ணீரை ஊற்றி குறைந்தது 4 மணி நேரம் ஊற வைக்கலாம். அதிகபட்சம் ஒரு இரவு முழுவதும் ஊற வைத்துக் கொள்ளலாம். ஊறிய இந்த மாவை மிக்ஸியில் அல்லது கிரைண்டரில் போட்டு 90 சதவிகிதம் அரைக்கவேண்டும். ரொம்பவும் கொரகொரப்பாக ஆட்டி விட கூடாது. ரொம்பவும் மொழுமொழுவெனவும் ஆட்டி விடக் கூடாது.


அரைத்த மாவில் உப்பு போட்டு கையைக் கொண்டு கரைத்து ஒரு மூடி போட்டு எட்டு மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். மாவு நன்றாக புளித்து வந்தவுடன் தோசைக்கல்லில் எப்போதும்போல மெல்லிசாக தோசை வார்த்து விட்டு சிவந்து வரும் போது எண்ணெய் அல்லது நெய் தடவி திருப்பிப் போடாமல் ஒரே ஒரு பக்கம் மட்டும் மிதமான தீயில் சிவக்க வைத்து எடுத்தால் ஹோட்டல் செயலில் மொறு மொறு தோசை தயார். (மாவை தண்ணீர் ஊற்றி சரியான பக்குவத்தில் கரைத்து அதன் பின்பு தோசை வார்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.)


சாதாரணமாக இட்லி மாவில் கடலை பருப்பு சேர்க்க மாட்டோம். அதேசமயம் பச்சரிசியும் சேர்க்க மாட்டோம். இட்லி மாவில் தோசை ஊற்றுவதற்கும், தனியாக இப்படி மாவு அரைத்து தோசை ஊற்றுவதற்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது. மேலே சொன்ன அளவுகளில் தோசைக்காக தனியாக மாவு அரைத்து தோசை செய்து பாருங்கள். நிச்சயம் ஹோட்டல் தோசை நம் வீட்டிலும் கிடைக்கும்.


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி