போனவன் போனாண்டி தொடர்/வெ.பெருமாள்சாமி

 .*போனவன் போனாண்டி* 

தொடர் பகுதி (1 )


முன்னுரை 

     கைம்பெண் என்பது கணவனை இழந்த பெண்ணைக் குறிக்கிறது. இந்து சமயத்தின் படி ஒரு பெண் ஒரு ஆணை மட்டுமே மணந்து கொள்ள முடியும். தனது கணவனை இழக்கும் போது, வெள்ளைச் சேலை உடுத்தப்படுகிறார், அலங்காரங்கள் எல்லாம் களையப்படுகிறார். கணவனை இழந்த பெண் ஒரு தீய சகுனமாகக் கருதப்படுகிறார். இதனால் எல்லாவித பொது நிகழ்வுகளில் இருந்தும் ஒதுக்கப்படுகிறார். கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்யப்படுவது, இந்து சமயப் பண்பாட்டில் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.

கணவனை இழந்து வாழும் ஒரு பெண் தனக்குள்ளே ஒரு கோடு போட்டுக் கொண்டு அதைத் தாண்டாமல் தன் பிள்ளைகளைக் காப்பாற்ற, அவர்களை வாழ்க்கையில் கரைசேர்க்க - காட்டிலும், மேட்டிலும் கஷ்டப்பட்டுத் தன் பிள்ளைகளைக் கூலிவேலை செய்தாவது காப்பாற்ற அடிமை வாழ்க்கை முறையை மேற்கொள்கிறாள்.உற்றார், உறவினர் துணையின்றி அந்தப் பெண் தன் தந்தையை இழந்த குழந்தைகளை வைத்துக்கொண்டு வறுமை என்னும் வாட்டம் தெரியாமல் வளர்க்கிறாள். ஆனால், தனக்கு தன் இளம் வயதில் இருக்கும் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு தன் பிள்ளைகளே தனக்கு உலகம் என்று நினைக்கிறாள்.

 இந்த கைம்பெண்கள் குறித்தான தனது சமுதாய சிந்தனையை நமக்கு புலவர் வெ. பெருமாள்சாமி அவர்கள் இரு பகுதிகளாக 'போனவன் போனாண்டி'  என்ற தலைப்பில் வழங்கியுள்ளார்

இவர் தமிழக அரசின் கூட்டுறவுத்துறையில் துணைப்பதிவாளராக பணி இறுதிகாலத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்

பல கவிதைகள் பல சிறு பத்திரிகைகளிலும் பீப்பிள் டுடே மாதப்பத்திரிகையிலும் வெளிவந்துள்ளது

விரைவில் இவரின் கவிதை தொகுப்பு புத்தகமாக அச்சிடப்பட்டு வெளி வரவிருக்கிறது

தமிழ் இலக்கியங்களை மேலோட்டமாக படிக்காமல் அதனை எப்போதும் நுகர்ந்து கொண்டிருப்பவர்

இவரின் எழுத்துகள் மிக எளிமை ஆனால் மிகவும் அர்த்தம் உள்ளவையாகவே இருக்கும்

இவரின் நவீன பாணி எழுத்துகள் மிக இயல்பாக நகைச்சுவையுடன் மிளிரும்

இவரது கவிதையில் பெண்களைப்பற்றி....

பெண் எனும் பெருமிதம் 
                          
கட்டுடலின் வாளிப்பில் கச்சிருக்கையில் கரும்பானாள் 
கட்டுடைந்து கைக்குழந்தை  வைச்சிருக்கையில் வேம்பானாள் 
துணையிழந்து உருக்குலைந்து வைதவ்யத்தில் சருகானாள் 
வலியழிந்து பயன்விளையா வயோதிகத்தில் துரும்பானாள் 
பெண் எனும் உடைமை.

உயிர் தோற்றி  ஊன் உருக்கி  ஈன்று புறந்தரும் தாய்
உண்கவளம் முன்ஊட்டி  உடன்வளர்த்த  தமக்கை
உறவு தளிர்க்க  உளம்நெகிழப்  பாசம்பொங்கும்  தங்கை
இடைவந்து  இறுதிவரை  ஒன்றிக் கரையும்  மனைவி
அன்பின் வழியது உயிர்  உயிரின் தொடராய்  மகள்
உலகம் யாவையும்  தன்னச்சில் இயக்கும்  
பெண்எனும்  மனுஷி

 இது போதும் அவரின் உள்ள கிடக்கையை நாம் அறிய.

இனி அவரின் தொடருக்கு போவோம்


 ---உமாகாந்தன்


-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

போனவன் போனாண்டி* 

தொடர் பகுதி (1 




சில பல வாரங்களுக்கு முன், விதவை நிலை (கைம்மை) குறித்து நண்பர்கள் என்னுடன்  கருத்துப் பரிமாற்றம் செய்தனர். அந்த வெம்மை தணியட்டும் என்று வெறுமனே விட்டு காத்திருந்தேன்.


கைம்மை நிலை நம் நாட்டில் தனித்துவமாக அணுகப்படும் ஒன்று. 


வடமாநிலங்களில் உள்ள விதவை நிலைக்கும், இங்குள்ள தன்மைக்கும் வேறுபாடு உண்டு.


இங்கேயே கூட சமூகத்துக்குச் சமூகம், காலத்துக்குக் காலம், இடத்துக்கு இடம் மாற்றங்கள் இருக்கலாம்.


நண்பரின் தாய்வழிப்  பாட்டி ஒரு தவ வாழ்வு வாழ்ந்திருக்கிறார். அவருக்குக் குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைத்திருக்கிறது.


என் அப்பாவின் அம்மா கணவரை இழந்த போது இளம் பெண்மணி.. என் அப்பாவுக்கு நான்கு ஐந்து வயது.. என் சிற்றப்பா toddler.. 


தலை மழிக்கவில்லை.. ஊரில் அப்படி வழக்கமும் இல்லை.. தாலியல்லாத வேறு கழுத்தணி அணிந்திருந்தார்.. கைகளில் காப்பு..

 

இரண்டு ஆண் குழந்தைகளை வைத்துக்கொண்டு, ஒரு குறு விவசாயியாகத் தன் நிலத்திலும் மற்றவர்கள் நிலத்திலும் பாடுபட்டு, அவர்களைக் காத்து, நில புலம் வாங்கி, ஊர்ப் பேச்சுகளை -

உதாசீனங்களைப் புறம் தள்ளித் தனி மனுஷியாகப் பிள்ளைகளைத் தலையெடுக்க வைத்து, வாழ்ந்து காட்டியது என்ன வாழ்க்கை என்று வரையறுக்கத் தெரியவில்லை.. 


அவருடைய வாழ்நாளின் பெரும்பகுதி நான் இல்லை.. பிறந்திருக்கவில்லை.. நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது அவர் மறைந்தார்.


அவருடைய நெஞ்சுரத்தை நான் அறிவேன்.. என் மீது தனியான பாசம் கொண்டிருந்தார்.. 


வெளியூர்ப் பள்ளியிலிருந்து மாலை திரும்பச் சற்று நேரமாகி 

இருட்டத் தொடங்கிவிட்டால் லாந்தரை ஏற்றி எடுத்துக்கொண்டு நான் ஊர் நுழைவதற்குள் எதிரே வந்துவிடுவார்.. 


அவரை நான் பாட்டியென்றோ ஆயாவென்றோ அப்பத்தாவென்றோ அழைத்ததில்லை.. முன்பே ஒருமுறை குறிப்பிட்டது போல எப்போதும் 'அம்மா!'தான்.. 

வெளித் திண்ணையில் அமர்ந்து நீட்டிய அவருடைய கால்களில் படுத்தபடி, அவர் சொல்லும் கதைகளைக் கேட்டுத் தூங்கிப் போன குளிர் இரவுகளின் கதகதப்பு என்றும் என்னிலிருந்து அகலாது..


சிறு வயதில் நாங்கள் வண்டி பூட்டிக் கொண்டு குடும்பமாக வெளியே புறப்படும் போது, கோடாலி முடிச்சிட்ட தலையும் முதுகுப் புறமாகச் சுற்றி வந்து வலது தோளில் ஏறி மறைக்கும் புடவைத் தலைப்புமாக, அவரை எதிரே வரவிட்டுத்தான் வண்டி நகரும். 


நாங்கள் மட்டுமல்ல வீட்டில் பிறந்து வளர்ந்த வண்டி எருது கூட, அவர் தலைக்கயிற்றைத் தொட்டு எடுத்து வண்டி ஓட்டுபவரிடம் கொடுத்தால்தான் அடியெடுத்து வைக்கும்.. 


தனிப்பட்ட குடும்பங்களில் கைம்பெண்கள் பெற்ற மரியாதையை விடுவோம்.. சமுக நிலை எப்படி இருந்தது..


எனக்குத் தெரிந்து வயதான நிலையில் கணவர் மறைந்தால் அவர்கள் வீட்டில் ஒரு புறமாக இருந்தார்கள்.. மருமகளுக்கோ மகளுக்கோ வீட்டு வேலைகளில் கூட மாட முடிந்த வேலைகளைச் செய்து வீட்டோடு இருந்தார்கள்.. 


சுப நிகழ்ச்சிகளில் முன் நிற்பதில்லை.. கட்டுக் கழுத்திகள் முதன்மை பெற, இவர்களாகவே ஒதுங்கிக்கொண்டார்கள்.. இது நடுத்தர மக்களின் நிலை..


இன்னும் கீழ்நிலையில் வேறுபாடு குறைவாகவும், உயர் ஆசார வகுப்புகளில் வேறுபாடு அதிகமாகவும் இருந்திருக்கலாம்..


எளிய மக்கள் எளிதில் உணர்ச்சி வயப்பட்டு வாய்ச்சண்டைகளில் ஈடுபடுவார்கள்.. அந்த சமயங்களில் விதவைகளைக் குறிக்கவென்று தனியான வசவுச் சொற்கள் புழங்கும்..


கிராமங்களில் இளம் விதவைகளுக்கு வெகு இயல்பாக மறுமணங்கள் பரவலாக நடைபெறவில்லை.. நகர நிலையும் அவ்வாறே இருந்திருக்கலாம்..


அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்துள்ளவற்றையும் அறிவேன். அவை விமரிசையான திருமணங்களாக இல்லாமல், எளிய முறையிலான இணைவுகளாக இருந்துள்ளன.


சென்னையின் 'விவேகானந்தர் இல்லம்' முதலில் ஐஸ் இருப்பு வைக்கும் இடமாக இருந்ததை அறிவோம். அதனாலேயே அது 'ஐஸ் ஹவுஸ்' என்ற பெயர் பெற்றது. 


பின்னர் விவேகானந்தர் அங்கு சில நாள்கள் தங்கியிருந்தார் என்பதைத் தெரிந்திருக்கிறோம். 


நாம் அறியாதது அது சில காலம் 'விதவைகள் இல்லமா'க இருந்தது என்பதைத்தான்.. நிச்சயமாகக் கீழ்த்தட்டு விதவைகள் அல்ல என்று நம்பலாம்.. 


எனில், ஏன் தங்கள் வீட்டோடு அவர்களை வைத்து மரியாதை அளிக்கப்படவில்லை என்பது ஆய்வுக்குரியது.. முதியோர் இல்லங்கள் பெருகும், இன்றைய நவீன கால  நடைமுறை அல்ல இது..

கடந்த நூறு + ஆண்டுகளுக்கு முந்தைய நிலை..


நண்பர்கள்  நேரமிருப்பின்  தீபா மேத்தாவின் 'Water' திரைப்படம் பார்க்குமாறு பரிந்துரைக்கிறேன். Youtube'ல் ஆங்கில சப் டைட்டிலுடன் கிடைக்கலாம்.. அந்தப் படம் குறித்துகூட  ஒரு திறனாய்வை இங்கே வழங்கலாம்..


எப்போதோ மகன் வீட்டில் பார்த்த அந்தப் படம் hazy'யாக நிழல் நினைவாகத்தான் இருக்கிறது.

ஆனால் அதில், 'விதவைகள் இல்லத்'தில் வசிக்கும் ஒரு பால்ய விதவைச் சிறுமி கேட்கும் கேள்வி, இன்னும் என் நெஞ்சில் நெருடுகிறது :

"men widows'க்கான இல்லம் எங்கே இருக்கிறது.."


சரி.. இவையெல்லாம் போகட்டும்.. வரலாற்றுக் காலம் எப்படி இருந்திருக்கிறது.. வரலாறு என்று வரும் போது நமக்குப் போதிய ஆவண ஆதாரங்கள் இல்லை.. செப்பேடுகள், கல்வெட்டுகள் மன்னர்களின் பெருமைகளை மெய்க்கீர்த்திகளையே பேசின.. 


                   இலக்கியங்கள் ஓரளவு சொல்லலாம்.


இதிகாசங்களில் என்று பார்த்தால், தயரதன் மறைவுக்குப் பின்னர் தாயர் மூவரும் மதிப்புடனே அரண்மனையை அலங்கரித்துள்ளனர்.



பரதன் குகனிடம் அறிமுகப்படுத்தும் போது, தன் தாய் கைகேயி மீதுள்ள கோபத்தால் அவரைப் 'பழி வளர்க்கும் செவிலி' என்கிறானே தவிர, மற்ற இருவரையும் பெருமையாகவே அறிமுகப்படுத்துகிறான்.


கோசலையை, 'கோக்கள் வைகும் முற்றத்தான் முதல் தேவி' என்றும் 'மூன்றுலகும் ஈன்றானை முன் ஈன்றாள்' என்றும் சிறப்பாகப் பேசுகிறான்.


பின்னர், இராவண வதம் முடிந்து சீதை தீக்குளித்து மீண்ட பின், 

இராமனைப் பிரிந்த துயரத்தில் இறந்து சொர்க்கத்தில் இருக்கும் தயரதனிடம்  போய், 

இராமனைத் தெளிவுறுத்துமாறு, சிவபெருமான் அனுப்புகிறார்.

அவ்விதம் வந்த தயரதன் அனைவரையும் ஆறுதல்படுத்தி, இராமனை அவன் விரும்பும் வரத்தைக் கேட்குமாறு சொல்கிறான்.


இராமன் கேட்ட வரம் என்னவாக இருக்கும்.. No prize for guesses.


"தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும் மகனும்,

தாயும் தம்பியுமாம் வரம் தருக"


தன்னைப் பதினான்கு ஆண்டுகள் வனத்துக்கு அனுப்பிய சிற்றன்னையைத் *'தெய்வம்'* என்கிறான். *'தாயாக'* மீண்டும் கொடு என்று கேட்கிறான்.



அதே போல் பாரதக் கதையில், சத்யவதி குந்தி என்று இருவரும் ராஜ மாதாக்களாக மரியாதை பெற்றிருந்தனர்.


சத்யவதி, கங்கை மைந்தர் பீஷ்மரின் துணையுடன் தன் பிள்ளைகளுக்குத் திருமணம் நடத்திவைத்துள்ளார். பின்னர் வியாசரைத் தருவித்து மருமகள்கள் மூலமாக சந்தான விருத்திக்கும் வழி செய்கிறார். 


ஆக அவர் ராஜ்ய பரிபாலனம் செய்யவில்லையே தவிர, வம்ச நிர்வாகத்தைக் கவனித்திருக்கிறார்.


கணவனை இழந்த தாடகை தனியாளாக இரு பிள்ளைகளுடன் வன ஆட்சி புரிந்தது வீரம் செறிந்த கதைதான்.


சூர்ப்பனகையும் ஒரு விதவையே. தன் கணவரைக் கொன்ற அண்ணன் இராவணனைப் பழி தீர்க்க யுக்தியுடன் செயல்பட்டு இராவணனின் முடிவுக்கு முதற் களம் அமைத்துக் கொடுத்த strategical நகர்வை மேற்கொள்கிறார்.


வாலியின் மறைவுக்குப் பின்  தாரை, இளையவன் சுக்ரீவனின் மனைவியாக வாழ்கிறார். 


குரங்கினம் என்பதால் அப்படி, கணவன் - அடுத்து அவன் தம்பி என்று தாரை வாழ்வது அனுமதிக்கப்படுகிறதா என்று ஒரு நண்பர் முன்பொருமுறை கேட்டார்.


அப்படியில்லை.. இந்து தர்மப்படியே, விதவைகளுக்கு விதிக்கப்பட்ட மூன்று வழிகளில், 'கணவன் இறந்த பிறகு அந்த மனைவி கணவனின் தம்பியை மணந்துகொள்ளலாம்' என்பது ஒன்று.


தன் அறிவுக் கூர்மை சொற் சாதுரியம் இவற்றால், தாரை இருவருக்கும் நல்ல அறிவுரைகள் கூறி ஆட்சிக்கு உதவுகிறார். மகன் அங்கதன் வளர்ப்பிலும் சிறந்த பங்காற்றுகிறார்.


இதன்படி இரு இதிகாசக் கதைகளிலும், கைம்பெண்களின் பங்கு வருத்தத்துக்குரியதாக இல்லை.


ஆனால், சாதாரண மக்களின் வாழ்வியல் எப்படி இருந்தது என்று அறியமுடியவில்லை.


சதி மாதா, விதவைக் கோல அவலம் இதெல்லாம் எப்போது நுழைந்தன என்றும் தெரியவில்லை.


அடுத்து, நம் தமிழ் இலக்கியங்கள் காட்டும் காட்சிகள் எப்படி உள்ளன என்று பார்ப்போம்.


பாண்டியன் நெடுஞ்செழியன் தன் தவற்றை உணர்ந்து, 'யானோ அரசன் யானே கள்வன் .... கெடுக என் ஆயுள்'  என வீழ்ந்து  இறக்கிறான்.. 


உடனே அவன் மனைவி கோப்பெருந்தேவி,

"கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்’ என்று

இணை அடி தொழுது வீழ்ந்தனளே, மடமொழி. "

என்று உடன் உயிர் துறக்கிறாள்.


அக் கூற்றை ஆராய்ந்தால் கணவனை இழந்த நிலையிலான நிராதரவே மேலோங்கியதை உணரலாம்.


வழக்குரைத்துக் கணவனின் கொலைக்கு நீதி பெற்ற கண்ணகியும் , 14 ஆம் நாள் விண்ணகம் ஏகினாள்.


இரண்டுமே உடன் உயிர் நீத்த கணக்குதான். ஆனால், அவர்களை யாரும் சிதையில் தூக்கிப் போடவில்லை.


மாதவி தன் partner கோவலனை மணந்து இல்லறம் நடத்தவில்லை. அதனால் உடன் மடிவதும் ஊரறிய விதவைக் கோலம் பூணுவதும் சாத்தியமாயில்லை. 


தாய் சித்திராபதி விரும்புவது போலவும் குலவழக்கப்படியும் ஆடல் பாடல் கலைகளில் ஈடுபடவும் அவளுக்கு நாட்டமில்லை.


'அறவண அடிகள் அடிமிசை வீழ்ந்து' பௌத்தத் துறவு மேற்கொள்கிறாள். அதை அவள் தன் உள் மனதில் ஏற்ற கைம்மை விரதம் எனலாமா..


இனி சங்கப் பாடல்கள் என்ன சொல்கின்றன என்று அலசவேண்டும்..


   ( தொடரும்)


-புலவர் வெ.பெருமாள்சாமி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி