வித்தியாசமான இந்த முட்டை கிரேவி
இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்குத் தொட்டுக்கொள்ள வித்தியாசமான இந்த முட்டை கிரேவி
மசாலா அரைத்து சுவையாக செய்யும் இந்த முட்டை கிரேவியை சாதத்துடன் மட்டுமல்லாமல் அனைத்து விதமான உணவுகளுடன் சேர்த்து சாப்பிடலாம். காலை மற்றும் மாலை உணவுடன் தொட்டுக்கொள்ள எப்பொழுதும் போல சாம்பார், சட்னி என்று செய்யாமல் இந்த மசாலா முட்டை கிரேவியை ஒரு முறை செய்து கொடுத்துப் பாருங்கள். மீண்டும் இதனை எப்பொழுது செய்வீர்கள் என்று வீட்டில் உள்ளவர்கள் உங்களை தொல்லை செய்து கேட்க ஆரம்பிப்பார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை மிகவும் அற்புதமாக இருக்கும். இதனை செய்வதும் மிகவும் எளிமையானதாகவே இருக்கும். வாருங்கள் இந்த மசாலா முட்டை கிரேவியை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்: முட்டை – 5, பெரிய வெங்காயம் – 4, தக்காளி – 2, பச்சை மிளகாய் – 4, பூண்டு – 5 பல், இஞ்சி – சிறிய துண்டு, கிராம்பு – 3, ஏலக்காய் – 2, பட்டை – சிறிய துண்டு, சீரகம் – அரை ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், எண்ணெய் – 7 ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், கொத்தமல்லி தழை – ஒரு கொத்து, கறிவேப்பிலை – ஒரு கொத்து.
செய்முறை: முதலில் ஐந்து முட்டைகளை குக்கரில் வைத்து, 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அடுப்பை பற்ற வைத்து அதன் மீது குக்கரை வைத்து, 3 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். பிறகு குக்கரில் பிரஷர் குறைந்ததும் முட்டையை வெளியே எடுத்து தோலுரித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் வெங்காயம் மற்றும் தக்காளியை நான்கு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு இஞ்சியை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பின்னர் 5 பல் பூண்டை தோலுரித்து சுத்தம் செய்துகொள்ள வேண்டும். அதன் பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி தழைகளைத் தண்ணீரில் கழுவிக் கைகளால் கில்லி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இவை அனைத்தையும் நன்றாக பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து, ஒரு கடாயை வைத்து 7 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவேண்டும். எண்ணெய் லேசாக சூடானதும் அதில் அரை ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து தோல் உரித்த முட்டையை எண்ணெயில் லேசாக வதக்கி விட வேண்டும். ஒரு நிமிடத்திற்கு பிறகு முட்டையை வெளியே எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதே கடாயில் கிராம்பு, பட்டை, ஏலக்காய், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். அதன்பிறகு கருவேப்பிலை சேர்த்து வதக்கி விட்டு, அரைத்து வைத்துள்ள மசாலா பேஸ்ட்டையும் எண்ணெயில் சேர்த்து, அதனுடன் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கி விட வேண்டும். எண்ணணெய் மசாலாவில் இருந்து பிரிந்து வரும் வரை நன்றாக வதக்கி விட்டு இறுதியாக முட்டைகளை கிரேவியில் சேர்த்து ஒருமுறை கலந்து விட்டு அடுப்பை அனைத்துவிட வேண்டும்.
முட்டை கிரேவி ரெடி
Comments