பொரிச்ச முட்டை குழம்பு

 பொரிச்ச முட்டை குழம்பு இப்படி செஞ்சு பாருங்க



முட்டையை தனியாக பொரித்து எடுத்து கெட்டியான குழம்பில் போட்டு கொதிக்க விட்டால் போதும் பொரிச்ச முட்டை குழம்பு ரொம்பவே டேஸ்டாக நமக்கு கிடைத்துவிடும். எல்லோருமே விரும்பி சாப்பிடக்கூடிய இந்த முட்டை குழம்பை உடைத்து அப்படியே ஊற்றினால் பலருக்கும் பிடிக்காமல் போய்விடும்! ஆனால் இது போல் பொரித்து நாம் குழம்பு வைக்கும் பொழுது எல்லோருமே விரும்பி சாப்பிட்டு விடுவார்கள்

பொரிச்ச முட்டை குழம்பு செய்ய தேவையான பொருட்கள்: முட்டை – 5, தக்காளி – 3, வெங்காயம் – 2, குழம்பு மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி, சமையல் எண்ணெய் – தேவையான அளவு, கடுகு – அரை டீஸ்பூன், சோம்பு – அரை டீஸ்பூன், பட்டை – 2, கிராம்பு – 2, உப்பு – தேவையான அளவு

பொரிச்ச முட்டை குழம்பு செய்முறை விளக்கம்: முதலில் ஒரு சிறிய வாணலியை எடுத்து கொள்ளுங்கள். அடுப்பை பற்ற வைத்து தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றுங்கள். ஐந்து முட்டைக்கு 3 டேபிள்ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் தாராளமாக ஊற்றலாம். அப்பொழுது தான் முட்டை நன்கு ஒட்டிக் கொள்ளாமல் பொரிந்து வரும். எண்ணெய் காய்ந்ததும் ஒவ்வொரு முட்டைகளாக உடைத்து ஊற்ற வேண்டும். முட்டையை ஊற்றியதும் அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ளுங்கள். முட்டையுடன் தேவையான அளவிற்கு கொஞ்சமாக உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள்.


முட்டை நன்கு வெந்து பொரிந்து வந்ததும் துண்டு துண்டுகளாக நன்கு கிளறி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் மற்றொரு கடாயில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்க்க வேண்டும். முதலில் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு நன்கு பொரிந்ததும் சோம்பு, பட்டை, கிராம்பு ஆகியவற்றை முறையே தாளிக்க வேண்டும். பின்னர் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கி வரும் பொழுது பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி துண்டுகளை சேர்த்து மசிய வதக்க வேண்டும். கால் ஸ்பூன் உப்பு போட்டு கிளறி 2 நிமிடம் மூடி போட்டு பின்னர் வதக்கினால் வேகமாக வதங்கும். தக்காளி மசிய வதங்கியதும் நீங்கள் குழம்பு மிளகாய் தூளை சேர்க்க வேண்டும். மிளகாய்த்தூள் சேர்த்தவுடன் அடி பிடிக்க ஆரம்பித்துவிடும் எனவே மிளகாய் தூள் பச்சை வாசம் போக லேசாக வறுத்து அரை தம்ளர் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் பொரித்து வைத்துள்ள முட்டை துண்டுகளையும் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு மற்றும் தேவையான அளவிற்கு தண்ணீரை சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். 10 நிமிடம் நன்கு கொதித்தால் முட்டையுடன் குழம்பின் சுவை ஒன்றுடன் ஒன்றாகி கெட்டியாக ஆரம்பிக்கும். இப்போது அடுப்பை அணைத்துவிட்டு மல்லித்தழை பொடிப்பொடியாக நறுக்கி தூவி இறக்கி சுடச்சுட சாதத்துடன் பரிமாற வேண்டியது தான். மதிய சமையல் வேலையை ரொம்பவே சுலபமாக செய்யக்கூடிய வகையில் இந்த பொரிச்ச முட்டை குழம்பு அமையப் போகிறது


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி