ஸ்டார் ஹோட்டல் டிபன் சாம்பாரின் ரகசியம்
ஸ்டார் ஹோட்டல் டிபன் சாம்பாரின் ரகசியம்
நீங்கள் ஒருமுறை உங்கள் வீட்டில் பின் சொல்லக்கூடிய முறைப்படி சாம்பாரை வைத்து பாருங்கள். நிச்சயமாக ஹோட்டலில் கிடைக்கக்கூடிய சாம்பாரின் மணமும் சுவையும் உங்கள் வீட்டிலும் கிடைக்கும். நிச்சயமா வீட்ல இருக்கிறவங்க எல்லாரும் உங்களை பாராட்டுவார்கள். வாங்க அந்த ரெசிப்பியை தெரிஞ்சுக்கலாம்.
முதலில் இந்த சாம்பாருக்கு தேவையான ஸ்பெஷல் பொடியை தயார் செய்து கொள்வோம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் வர மல்லி – 2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், வர மிளகாய் – 6, வெந்தயம் – 1/4 ஸ்பூன், கடலைப்பருப்பு – 2 ஸ்பூன், உப்பு – 1/4 டீஸ்பூன், கறிவேப்பிலை – 1 கொத்து, இந்த பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். இந்த பொருட்கள் அனைத்தும் வறுபட்ட பின்பு இறுதியாக 2 ஸ்பூன் தேங்காய் சேர்த்து 2 நிமிடம் வறுத்து அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த பொருட்கள் எல்லாவற்றையும் அப்படியே மிக்ஸியில் போட்டு பொடி செய்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் ஊற்றி அரைக்கக் கூடாது. கொஞ்சம் கொரகொரப்பாக 90% இந்த பொடி மைய அரைத்தால் போதும்.
அடுத்தபடியாக அடுப்பில் ஒரு கடாயை வைத்து சாம்பாரை தாளிக்கலாம். நல்லெண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றிக் கொள்ளவேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், வெந்தயம் – 1/4 ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, பச்சை மிளகாய் – 1, தோல் உரித்த சின்ன வெங்காயம் – 10 பல், கறிவேப்பிலை – 2 கொத்து, சேர்த்து முதலில் வெங்காயத்தை கண்ணாடி பதம் வரும் வரை மட்டும் வதக்கினால் போதும். அதாவது ஒரு நிமிடம் போல வதக்குங்கள்.
அடுத்தபடியாக பொடியாக வெட்டிய தக்காளி பழங்கள் – 2 சேர்த்துக் கொள்ளவேண்டும். அடுத்த படியாக குழம்பு தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன் சேர்த்து, வெங்காயம் தக்காளியை மீண்டும் 2 நிமிடம் வதக்க வேண்டும். வெங்காயம் தக்காளி அதிகமாக வதங்க கூடாது. லேசாக தோல் சுருங்கி வரும் வரை வதங்கியவுடன், இதில் 2 டேபிள்ஸ்பூன் அளவு தண்ணீரை ஊற்றி மல்லித்தூள் – 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் – 2 டேபிள் ஸ்பூன், சேர்த்து நன்றாக வதக்கவும். மசாலா பொருட்கள் நம் ஊற்றி இருக்கும் தண்ணீரோடு சேர்த்து வெங்காயம் தக்காளியுடன் வேக வேண்டும். வெங்காயம் தக்காளி நன்றாக வெந்து வரும்போது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை கொஞ்சம் சேர்த்து, சிறிய நெல்லிக்காய் அளவு புளி கரைசலை ஊற்றி, மீண்டும் ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றி இந்த கலவையை நன்றாக கொதிக்கவிடுங்கள்.
புளி, மிளகாய் தூள், மல்லித்தூளின் பச்சை வாடை அனைத்தும் நீங்கிய பின்பு இறுதியாக 150 கிராம் அளவு துவரம்பருப்பை கடாயில் ஊற்றி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சாம்பாரை நன்றாக கலந்து விட்டு மீண்டும் 5 நிமிடம் போல நன்றாக கொதிக்க வையுங்கள்.
துவரம் பருப்பை வேக வைக்கும் போது அந்த துவரம்பருப்பில் மஞ்சள்தூள், பெருங்காயம் – 1/2 ஸ்பூன் சேர்த்து வேக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிலபேர் இந்த சாம்பாரில் பரங்கிக்காய் சேர்த்துக்கொள்வார்கள். கேரட், முருங்கைக் காய், சேர்ப்பார்கள். அது அவரவருடைய விருப்பம் தான். உங்கள் விருப்பம் போல காய்கறிகளை சேர்த்தும் டிபன் சாம்பார் வைத்துக்கொள்ளலாம்
Comments