நாங்கள் குறவர்! இருளர் இல்லை! சூர்யா உதவவில்லை!
நாங்கள் குறவர்! இருளர் இல்லை! சூர்யா உதவவில்லை! நிஜ செங்கேனி
ஜெய்பீம் திரைப்படத்தின் மூலம் கோடி கோடியாக சம்பாதித்த நடிகர் சூர்யா, இதுவரை தனக்கு எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார் அந்த படக்கதையின் உண்மை நாயகியான பார்வதி.
மேலும், தாங்கள் இருளர் இனத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்றும் குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் எனவும் பார்வதி மிகத் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய்பீம் திரைப்படமானது 28 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. அதன்படி அந்த படத்தில் வரும் செங்கேனி கேரக்டரின் நிஜப்பெயர் பார்வதி. அவர் இன்னுமும் ஒண்டிக் குடிசையில் மகள், மருமகனுன் மனநிலை பாதிக்கப்பட்ட இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் ஜெய்பீம் திரைப்படம் தொடர்பாக மவுனம் கலைத்திருப்பதோடு பகீர் குற்றச்சாட்டுகளையும் முன் வைத்துள்ளார்.
இது தொடர்பாக யூ டியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், தனது கணவரையும், தன்னையும் மையமாக வைத்து இப்படி ஒரு படம் எடுக்கப்போகிறோம் என்ற தகவலை படத்தின் தயாரிப்பாளரான சூர்யா உட்பட யாரும் தங்களுக்கு தெரிவிக்கவில்லை என்று கூறியிருக்கிறார். மேலும், தங்கள் குடும்பத்தில் நடந்த நிகழ்வை படமாக எடுத்து கோடி கோடியாக சம்பாதிக்கும் சூர்யா இதுவரை எட்டிக்கூட பார்க்கவில்லை என்றும் உதவ முன்வரவில்லை எனவும் வேதனை தெரிவித்திருக்கிறார்.
மேலும், தாங்கள் குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்றும் இருளர் இனம் கிடையாது எனவும் நிஜ செங்கேனியான பார்வதி திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். இரண்டு மகன்கள் மன நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது ஒண்டிக்குடிசையில் மகள், மருமகனுடன் ஜீவணத்திற்கு கஷ்டப்படுவதாகவும் கண் கலங்கியிருக்கிறார். ஏற்கனவே ஜெய்பீம் திரைப்பட குழு பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து வரும் சூழலில், நிஜ செங்கேனியின் பகீர் வாக்குமூலம் அவர்களுக்கு மேலும் நெருக்கடியை கொடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே பார்வதியின் மருமகன் கூறுகையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வரை தாம் சூர்யா ரசிகராக இருந்ததாகவும், அவரை போலவே சிங்கம் படத்தில் வருவது போன்ற மீசையை வைத்துக்கொண்டு சுற்றித் திரிந்ததாகவும், இப்போது அவரது ரசிகர் என்று சொல்லவே தயக்கமாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். குறவர் சமுதாயத்தை இருளர் சமுதாயம் என மாற்றி கதைக்களம் அமைக்கப்பட்டு தங்களுக்கு வர வேண்டிய உதவிகளை இருளர் இனத்துக்கு செய்து வருவதாக தெரிவித்திருக்கிறார்.
மருமகன் பெருந்தன்மை மேலும், இருளர் சமுதாயத்துக்கு அரசு உதவுவது பற்றி தங்களுக்கு கவலையில்லை என்றும் அவர்களும் மக்கள் தானே எனவும் வறிய நிலையிலும் தனது பெருந்தன்மையை வெளிப்படுத்துகிறார் நிஜ செங்கேனியான பார்வதியின் மருமகன். மேலும், தானும் சரி தனது மாமியாரும் சரி சூரியனுக்கு தான் ஓட்டுப்போட்டு வருவதாகவும் தனது மாமனார் ராஜாக்கண்ணு மறைவுக்கு பிறகு மாமியார் பார்வதி பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல என வேதனைத் தெரிவித்திருக்கிறார்
ஜெய்பீம் திரைப்படத்தில் உண்மைத் தன்மைக்கு மாறாக பல்வேறு காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே வன்னியர் சமுதாய அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தி வரும் வேளையில், நிஜ செங்கேனியான பார்வதி அம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினரின் இந்த பகீர் குற்றச்சாட்டு நடிகர் சூர்யாவுக்கு மேலும் நெருக்கடியை கொடுக்கக்கூடும் எனத் தெரிகிறது. இதனிடையே குறைந்தபட்ச லாயல்டியாக பார்வதி அம்மாளின் பேரன்கள் இருவருக்கு சூர்யா வேலையாவது பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி https://tamil.oneindia.com/
நடிகர் சூர்யாவின் பித்தலாட்டத்தனம் உலகுக்கு வெளிப்படுகிறது என எல்லோரும் பேசிவருவது உண்மைதானோ தெரியல
Comments