உலக சி.ஓ.பி.டி., தினம்
காற்று மாசை குறைப்போம்; நுரையீரலை காப்போம் -இன்று உலக சி.ஓ.பி.டி., தினம் -
சி.ஓ.பி.டி. என்பது நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய். இது தடுக்கக்கூடிய, சிகிச்சையளிக்கக் கூடிய நுரையீரல் நோய் ஆகும். இன்று (நவ.17) உலக C.O.P.D. தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த வருடத்திற்கான கரு 'ஆரோக்கியமான நுரையீரல் - மிக முக்கியம்' நுரையீரல் ஆரோக்கியத்திற்கு கவனம் செலுத்த இதுவே முக்கியமான நேரம்.
இந்தியா உள்பட உலகளவில் இறப்போரின் எண்ணிக்கையில் சி.ஓ.பி.டி. நோயானது இரண்டாவது முக்கிய காரணமாக உள்ளது. உலகளவில் சுமார் 30 கோடி மக்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய அளவில் சுமார் 5.5. கோடி மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் இந்தியாவில் COPD ஏற்பட காரண விகிதம்: 53.7% காற்று மாசு, 25.4% புகையிலை, சிகரெட் புகைத்தல், 16.5% தொழிற்சாலை நச்சுப்புகை, வாகனப் புகை.
விழிப்புணர்வு குறைவு
இந்நோய் குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே உள்ளதென்று மருத்துவ ஆய்வறிக்கை கூறுகிறது. டி.பி., எச்.ஐ.வி.-எய்ட்ஸ், சர்க்கரை நோய் முதலான அனைத்தையும் விட சி.ஓ.பி.டி.-யால் அதிக இறப்புகள் ஏற்படுகிறது. 40 வயதைக் கடந்தவர்களுக்கு அதிகளவில் பாதிப்பை உண்டாக்குகிறது.
அறிகுறிகள் : இருமல், சளி, மூச்சுத்திணறல், சளியுடன் கூடிய இருமல்.
சிகரெட், பீடி புகைத்தல்
ஆகியவை ஆண்களுக்கு இந்நோய் எற்பட காரணம். மற்றவர்கள் புகை பிடிப்பதால் அருகே உள்ளவர்களுக்கு அந்த புகையை சுவாசிக்கும் பொழுது பாதிப்பு உண்டாகும். புகையிலை, புகையிலை சார்ந்த பொருட்களை உட்கொள்ளுவதால் கிராமப்புறங்களிலும் நோய் தாக்கம் அதிகம் உண்டாகிறது.கரி அடுப்புகளின் மூலம் ஏற்படும் புகையை சுவாசிப்பதாலும், சமையல் எரிவாயு கசிவின் மூலம் ஏற்படும் நெடியை சுவாசிக்க நேரிடுவதாலும் கிராமப்புறங்களிலும் இந்நோய் தாக்கம் ஏற்படுகிறது.கொசுவர்த்தி சுருள்கள் எரிவதால் உண்டாகும் புகையை சுவாசித்தல் ஒரு காரணமாகிறது.வாகனங்களில் வெளியாகும் காற்று மாசுபாடு சுவாசம். தொழிற்சாலைகளில் வெளியாகும் நச்சு புகை சுவாசம் போன்றவையும் இந்நோய்க்கு காரணம்.
இந்தியாவில் 95 சதவீதத்திற்கும்அதிகமானசி.ஓ.பி.டி நோயாளிகள் கண்டறியப்படாமல் உள்ளனர்.
காற்றின் தரக் குறியீடு
காற்றின் தரக் குறியீடு - ஏ.க்யூ.ஐ., (AIR QUALITY INDEX)காற்றின் மாசுபாட்டு தரத்தை குறிப்பிடுகிறது. மக்களின் நுரையீரல், சுவாச பிரச்னைகள் இந்த ஏ.க்யூ.ஐ.,யை பொறுத்தே இருக்கும்.இந்த குறியீடு 0 - 50 (சுத்தமான காற்று) இருந்தால் அதுவே நாம் வாழ்வதற்கு உரிய காற்று. 51 - 100 மிதமான மாசுக்காற்று, இதில் சிலருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. 101 - 150 ஆரோக்கியத்தில் நலிந்தவர்களுக்கு பாதிப்புகள் உண்டாகும். 151 - 200 அனைவருக்கும் பாதிப்பு உண்டாகும். 201 - 250 மிகவும் மோசமான காற்று. இது சுவாச கோளாறுகளை உருவாக்கும். 300க்கு மேல் அபாயகரமான சுழல் ஆகும்.டில்லியில் 300க்கும் மேலாக உள்ளது. சென்னை, மதுரையில் 50 - 100 ஆக உள்ளது. இதற்கு ஏற்ப நாம் இன்னும் காற்றுமாசை குறைக்க வேண்டும். நமது சுற்றுச்சூழலை பசுமையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
முகக்கவசம் அவசியம்
இன்றைய காலகட்டத்தில் கொரோனா முக்கிய பாடத்தை மனிதகுலத்திற்கு கற்றுக் கொடுத்துள்ளது. அது முகக்கவசம் அணிவது. எனவே அன்றாட வாழ்வில் முகக்கவசத்துடன் பயணிப்பது நல்லது. நுரையீரல் நோய்களில் இருந்து வெளிவர நாம் ஒன்றிணைந்து பசுமையான வாழ்க்கை முறைக்கு மாறி மரங்கள், செடிகள் வளர்க்க வேண்டும். சுற்றுச்சூழலை பசுமையாக வைத்துக் கொள்ள வேண்டும். தீங்கு விளைவிக்கும் வாயுக்களை உறிஞ்சி, காற்றை கிருமிநாசினியாக மாற்றும் மரங்களை அதிகளவில் நட வேண்டும். பிளாஸ்டிக், பாலிதீன் பொருட்களை எரிப்பதைக்காட்டிலும் அதனை மறுசுழற்சிக்கு பயன்படுத்த வேண்டும். நெரிசல் நிறைந்த இடத்தில் வசிப்பதை தவிர்க்க வேண்டும். தேவையான நேரங்களில் நுரையீரலுக்கு அவசியமான தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும்.
டாக்டர் மா. பழனியப்பன்நுரையீரல் நோய் சிறப்பு நிபுணர்
மதுரை. 94425 24147
Comments