கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்

 மத்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கி கௌரவித்திருக்கும் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்,

தமிழகத்தில் பலரும் அறிந்திராத பெயர்.



யார் இந்த சாதனையாளர்? 


அம்மையார், திண்டுக்கல்மாவட்டம்-நிலக்கோட்டை- பட்டி வீரன்பட்டி கிராமத்தில் 1926 ஆம் ஆண்டில் பிறந்தவர். மதுரையின் முதல்  பட்டதாரி பெண். காந்தியின் கொள்கை மீது ஏற்பட்ட ஈர்ப்பால் காந்தியத்தை தழுவிக் கொண்டவர். பிறகு வினோபாவே அவர்களின் சர்வோதயா இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு பூமிதான இயக்கத்தில் ஈடுபட்டவர். 


அந்த காலத்திலேயே காதல் திருமணம் செய்து கொண்டவர். இவர் இணையர் அகமுடையார் சமுதாயத்தையும், இவர் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தையும் சார்ந்தவர்கள். இருவரும் மனதாலும் அவர்கள் தழுவிக்கொண்ட கொள்கையாலும் இணைந்தவர்கள். 


நல்லவேளை இவர்கள் இருவரும் காந்தியத்தை தழுவியதால் ஆணவக் கொலை செய்யப்படவில்லை. இல்லையேல் இப்படிப்பட்ட சேவகர்கள் நமக்கு கிடைத்திருக்க மாட்டார்கள்.


அந்நாட்களில் மக்கள் சாதி அடையாளத்தோடு இருந்தார்களே ஒழிய, சாதிய சிந்தனையோடு இல்லை. அவர்களுக்கு தேசிய சிந்தனை தான் இருந்தது. பிற்காலத்தில்தான் வாக்கு வங்கி அரசியலுக்காக மக்களை சாதியாகப் பிரிந்து சண்டையிட வைத்துவிட்டனர் நம் அரசியலர்கள். 


1968, வெண்மணியில் 44 விவசாயத் தொழிலாளர்கள் உயிரோடு எரித்து படுகொலை செய்யப்பட்டனர். இதை அறிந்த அம்மையார், அன்று இரவே வெண்மணி  வருகிறார். அந்தப் படுகொலைக்கு காரணமாக இருந்த கோபாலகிருஷ்ண நாயுடுவின் இல்லத்திற்கே  சென்று, ஏண்டா இப்படிப்பட்ட காரியத்தை செய்தாய் என்று அவன் சட்டையை பிடித்து உலுக்கியவர்.

 

அன்று முதல் அவர் கீழத்தஞ்சை பகுதியிலேயே தங்கி ஒடுக்கப்பட்ட விவசாய கூலி தொழிலாளர்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர். 


கீழத் தஞ்சையில் இருந்த விவசாய கூலிகள் நிலம் இல்லாத காரணத்தால் தான் பண்ணையார்களை சார்ந்து வாழ வேண்டி இருக்கிறது என்பதை அறிந்து கொண்ட அம்மையார், இம்மக்களுக்கு நிலம் வாங்கித் தருவதையே தன் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு அதற்காக ஒரு இயக்கத்தையும்  ஆரம்பித்தார். அதுதான் உழவனின் நில உரிமை இயக்கம் LAFTI.


 அந்த இயக்கத்தின் மூலமாக இதுவரை 13,500 ஏக்கர் நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி, நிலமற்ற பெண் தொழிலாளர்களுக்கு தலா  ஒரு ஏக்கர் வீதம் வழங்கியிருக்கிறார். தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும், நன்கொடை பெற்றும் ஆயிரக்கணக்கான வீடுகளை அப்பகுதி மக்களுக்கு கட்டிக் கொடுத்திருக்கிறார். 


சேவை செய்கிறேன் என்று கூறிக்கொண்டு, தொண்டு நிறுவனங்கள் பெயரில் பலர் இன்று வெளிநாட்டு நன்கொடைகளை பெற்று

 தன் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால், அம்மையார் ஒரு காந்தியர்   என்பதால்  அவர் உடுத்தும் உடைகளைத் தவிர இன்றுவரை ஒரு பைசா சொத்து கூட இல்லாமல் தனிமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். 


அவரைப் பற்றி சொல்ல வேண்டுமானால் பல புத்தகங்களை எழுதிக் கொண்டே இருக்கலாம்.  இப்படிப்பட்ட சேவகியை

இன்றைய இளைஞர்கள் எத்தனை பேருக்குஅடையாளம் தெரியும்?  


 ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக போராடுவது போல கதை எழுதி அதில் நடிக்கும் நடிகர்களை நாயகர்களாக கொண்டாடும் காலமிது. அப்படிப்பட்ட நாட்டில் உண்மையான நாயகர்கள் காணாமல் போய்விடுகிறார்கள் .


ஜெய்பீம் திரைப்படத்தில் இருளர் மக்களின் வாழ்வியலை காட்டி, அவர்களின் விடுதலைக்காக போராடுவதை போல நடித்த சூர்யாவை இன்றைக்கு ஊடகங்கள் உச்சிமீது வைத்துக் கொண்டாடுகிறார்கள். 


 ஒடுக்கப்பட்ட மக்களின் தேவை என்ன என்று அறிந்து எந்த விளம்பரமும் இல்லாமல் சேவை செய்து கொண்டிருக்கும் வாழும் காந்தியர், அம்மையார் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் அவர்களை அடையாளம் கண்டு மத்திய அரசு அவருக்கு பத்மபூஷன் விருது கொடுத்திருக்கிறது இந்த செய்தியை எத்தனை ஊடகங்கள் தொடர் நிகழ்ச்சியாக ஒளிபரப்பியது. 


எதிர்காலத்தில் இப்படிப்பட்ட சேவகர்கள் உருவாக வேண்டும் என்றால் இளைய தலைமுறைக்கு அவர்களின் வரலாற்றை போதிக்க வேண்டும், அதற்கு இவர்களின் வாழ்க்கையை பள்ளி பாடப் புத்தகங்களில் பாடமாக வைக்க வேண்டும்.


அம்மையாரின் முழு வாழ்க்கையையும் அறிந்துகொள்ள விரும்புவோர், நாகை மாவட்டம் கீழ்வேளூர்  அவரது  லாப்டி  அலுவலகத்திற்கு சென்று  வாருங்கள்.--

---இணையத்தில் பிடித்தது 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி