ஹாலோவீன் தினமின்று
ஹாலோவீன் தினமின்று
மேலை நாடுகளில் சிறப்பாகக் கொண்டாடப்படும் தினங்களில் ஹாலோவீன் தினமும் (Halloween) ஒன்றாகும். ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 31ம் தேதி கலோவின் தினம் அயர்லாந்து, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா போன்ற மேலை நாடுகளிலும் இதர நாடுகளில் கொண்டாப் படுகின்றது.
பிரித்தானியாவில்தான் முதன்முதலாகக் ஹாலோவீன் தினம் 2000 ஆண்டுகளுக்கு முன்பாகக் கொண்டாடப்பட்டது. அறுவடைக்காலம் முடிந்து குளிர்காலம் ஆரம்பிப்பதையும், வெளிச்ச காலம் முடிந்து இருட்டுக்காலம் தொடங்குவதையும் இந்தக் கொண்டாட்டம் குறிக்கும். பழைய ஆங்கிலச் சொல்லான ஹாலோவீன் என்றால் தெய்வீகத்தன்மை பெறச் செய்தல் என்ற கருத்துப்படும். பொதுவாக இத்தினத்தில் ஆரேஞ்ச் நிறமும் கறுப்பு நிறமும் அதிகமாகப் பாவிக்கப்படும். அரஞ்சு நிறம் அறுவடைக் காலத்தையும், கறுப்பு நிறம் இறப்பையும் குறிக்கும். அத்தினத்தில் பேய்கள் பிசாசுகள் போலப் பெரியவர்களும், சிறியவர்களும் வேடமிட்டு ஒவ்வொரு வீடுவீடாகச் சென்று வேடிக்கையாக விருந்து தரும்படி கேட்பார்கள். பெரியவர்கள் தெருவிலே நின்று கொள்ள, சிறுவர், சிறுமிகள் பேய் பிசாசுபோல வேடமிட்டு வாசலில் வந்து வேடிக்கையாக ஏமாற்றுவார்கள். சில சமயங்களில் வீட்டில இருப்பவர்களும் பயங்கரமான வேடமணிந்து விருந்து கேட்டு வந்த பிள்ளைகளுக்குப் பயம் காட்டுவார்கள். அதன்பின் பிள்ளைகள் கொண்டுவந்த தட்டிலே இனிப்பு, சொக்லட் போன்றவற்றைப் போடுவார்கள். மாலை 5 மணியில் இருந்து இரவு ஒன்பது, பத்து மணிவரை அயலில் உள்ள வீடுகளுக்குச் சென்று (Tricks or Treats) இனிப்பு வகைகளைச் சேகரிப்பார்கள். இப்படிச் சேகரித்துக் கொண்டு வந்தவற்றைத் தரம் பிரித்து பிடித்தவற்றைத் தாங்கள் எடுத்துக் கொண்டு வேண்டாத மிகுதியைப் பெற்றோரிடம் தள்ளி விடுவார்கள்.
ஹாலோவின் தினத்தின்று சூனியக்காரி, கறுப்புப் பூனை, வெளவால், ஆந்தை, சிலந்தி, சிலந்திவலை, எலும்புக்கூடு, மண்டை ஓடு, பூசணிக்காய், விளக்குமாறு, சூலம் போன்ற விளையாட்டுப் பொருட்களால் வீட்டின் வாசலை அலங்கோலம் செய்து வைத்திருப்பர். பெரிய பூசணிக்காயை (Jack-o-Lantern) எடுத்து அவற்றைப் பயங்கர முகங்களைப் போலச் செதுக்கி அதன் வடிவை மாற்றி வாசலில் வைத்திருப்பர். இருட்டில் இருக்கும் அவற்றில் மெழுகு திரிகளைக் கொளுத்தி மெல்லிய வெளிச்சத்தை ஏற்படுத்தியிருப்பர். பயங்கரமான இடத்தை நோக்கிப் போவது போன்ற ஒரு சூழலை இங்கே ஏற்படுத்தியிருப்பர். இந்த வாரத்தில் பெரியவர்கள் குழந்தைகளுக்குப் போய் பிசாசு கதைகள் சொல்வதிலும், அப்படியான பயங்கரப் படங்களைக் குடும்பமாகச் சென்று பார்ப்பதிலும் அதிக நேரத்தைச் செலவிடுவர். நகரப் பகுதிகளில் இரவு நேரங்களில் ஹாலோவீன் கேளிக்கை விருந்துகளுக்கு ஹாலோவீன் ஆடைகள் அணிந்து முகத்திற்கு மைபூசிச் செல்வர்
Comments