சினிமாவுக்கு எழுதினா துட்டுக் கிடைக்கும், பெயர் கிடைக்க வேணாமா?’’

 சினிமாவுக்கு எழுதினா துட்டுக் கிடைக்கும், பெயர் கிடைக்க வேணாமா?’’








கவிஞர் வாலி
வாய் திறந்த சிரிப்பு, முதன்முறை சந்தித்த போதே உரிமையுடன் பேச்சு- என்று கலகலவென்றிருந்தார் கவிஞர் வாலி.
அவர் திரையுலகில் நுழைந்து ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி ஒரு விழாவும், அதைத் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பவுமான ஒரு திட்டம்.
நான் பணியாற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பு நிறுவனத்திற்காக அது பற்றிய ஒரு வரைவுத் திட்டத்தைத் தயாரித்து அதைக் கையோடு எடுத்துக் கொண்டு போயிருந்தேன்- இரண்டாவது முறை.
கையில் கொடுத்ததும் அந்த டைட்டிலை ‘நியூமராலஜி’ படிக் கூட்டிப் பார்த்தார். முகம் நிறைந்த சிரிப்பு. ஒரே ஆரவாரம்.
“சரியாப் போட்டிருக்கிறீர்யா… நச்சுன்னு இருக்கு..’’ என்றவர் கையில் கொடுத்தவற்றை விரைவாக வாசித்தார்.
“சரிவோய்.. முதல்லே உம்ம கிட்டே சில கேள்வி கேட்பேன்… பதில் சொல்லணும்…’’ – சிரித்தபடி பீடிகை போட்டார்.
இருமலர்கள் படத்தில் வந்த “மாதவி பொன் மயிலாள்’’ பாட்டைச் சொல்லி “இதை எழுதியது யாருய்யா?’’- க்விஸ் நிகழ்ச்சி மாதிரிக் கேட்டார்.
“நீங்கன்னு தெரியாதா?’’
“கேட்டேன்னு தப்பா நினைக்காதய்யா… பல பேருக்கு இது தெரியலை. ‘உயர்ந்த மனிதன்’ படத்திலே வர்ற “அந்த நாள் ஞாபகம்’’ பாட்டை இன்னொருவர் எழுதினதா எம்.எஸ்.விஸ்வநாதனே ஒரு மேடையிலே சொன்னப்போ எனக்கு எப்படி இருந்திருக்கும்யா..
நான் எடக்கு மடக்குப் பாட்டும் எழுதியிருக்கேன்… நல்ல பாட்டுகளும் எழுதியிருக்கேன்யா… அதெல்லாம் பல பேருக்குத் தெரியலைய்யா… நான் ஆபாசத்தை மட்டும் எழுதின மாதிரி மலேசியாவில் ஒரு புத்தகமே போட்டுருக்காங்க..’’ – ஆரவாரமாய் அவர் சொல்லி முடித்தார்.
அவர் சொன்னதுமே மென்மையாக “அந்தப் புத்தகத்தை எழுதிய பாமரன் நம்ம நண்பர் தான். அதை பினாங்கில் வெளியிட்ட சுப்பாராவும் நம்ம நண்பர் தான்’’ என்றதும் பலத்த சிரிப்புடன் சொன்னார்.
“அப்படிப் போடுய்யா அருவாளை’’ – கேஷூவலாக அடுத்த விஷயங்களுக்கு நகர்ந்து விட்டார்.
அடுத்தடுத்து அவருடைய வீட்டில் பல சந்திப்புகள் அவரை இயல்பாகப் பேச வைத்தன. திரையுலக அனுபவங்களை அவர் பகிர்ந்து கொள்ளும் விதமே அலாதியானது.
எம்.ஜி.ஆர் மீதும், டி.எம்.எஸ் மீதும் பெரு மதிப்பு வைத்திருந்தார்.
கே.வி.மகாதேவனுக்குச் சரியான மதிப்புக் கொடுக்கப்படவில்லை என்று ஆதங்கப்பட்டார். எம்.எஸ்.வி.யைச் சிலாகித்தார்.
இளையராஜாவைக் கொண்டாடினார். ரஹ்மானை உச்சி முகர்ந்தார். பழநிபாரதி, மை.பா.நாராயணன் போன்றவர்களைக் குறிப்பிட்டுப் பெருமைப்படுத்தினார்.
“கண்ணதாசனுக்கும், எனக்கும் விரோதம் பாராட்டுற மாதிரி யார் யாரோ முடிச்சுப் போடப் பார்த்தாங்க.. அதெல்லாம் ஒண்ணும் நடக்கலை’’ என்றவர், கண்ணதாசனுடனான சில அனுபவங்களை விவரித்தார்.
“கவிதையில் மட்டுமில்லை… காரியார்த்தமா இல்லாம, கொஞ்சம் வெகுளித்தனமா இருக்குறதிலேயும் எங்களுக்குள் ஒத்துமை இருக்கு’’ என்றார்.
உரிமையுடன் பல ‘அசைவ’ப் பேச்சுக்களை மிகவும் சுவராஸ்யமாக அவர் அடுத்தடுத்துப் பேசிக் கொண்டிருந்தார் அவர்.
“சார்… காதுக்கு தாங்கலை… செரிக்க மாட்டேங்குது” – சொன்னதும் “என்ன… குசும்புய்யா… காது செரிக்க மாட்டேங்குதா?”- கேட்டவர் கேலியின் உச்சிக்குப் போனார்.
ஒவ்வொரு தடவை போகிறபோதும் அவருக்கான விழா பற்றி உற்சாகமாகப் பேசுவார். ஒருமுறை புதுக்கவிதையில் சில காவியங்களை எழுதியதைப் பற்றிய பேச்சு வந்தபோது கேட்டேன்.
“திரையிசைப் பாடல்களை மட்டும் எழுதுகிறவர் என்ற பெயர் வந்துறக் கூடாதுங்கிற உள்ளுணர்விலே அதை எல்லாம் எழுதுகிறீர்களா?’’ என்று கேட்டதும் அட்டகாசச் சிரிப்பு.
“கரெக்டா நாடி பிடிக்கிறீர்யா.. உண்மை தான்.. சினிமாவுக்கு எழுதினா துட்டுக் கிடைக்கும்.. பெயர் கிடைக்க வேணாமாய்யா?” என்றவர் சில நாட்களில் சில பிரச்சினைகளால் அவருக்கான விழா தடைப்பட்டதும் வருத்தப்பட்டார்.
“இருக்கட்டும்யா.. எப்படியும் மத்த நண்பர்கள் பண்ணுவாங்க.. அதனாலே உம்ம மேலே எல்லாம் எனக்கு வருத்தமில்லே… வீட்டுக்கு வாரும்யா’’
அவர் சொன்னபடியே நண்பர் நெல்லை ஜெயந்தாவின் முயற்சியில் சென்னை தூரதர்ஷனில் அவருடைய அனுபவங்கள் பிறகு தொடராக வெளியாயின.
அப்போது சோ-வின் ‘ஒசாமஅசா’ அனுபவத் தொடரை குமுதம் இதழில் எழுதிக் கொண்டிருந்தேன்.
சிலவற்றைப் படித்துவிட்டுத் தொலைபேசியில் என்னிடம் பேசும்போது “சோ என்னைப் பத்தி என்ன நினைக்கிறாப்லேன்னு தெரியணும்யா.. சீக்கிரம் கேட்டு எழுதும்ய்யா…’’ என்றவர், சோ-விடமும் பேசித் தன்னைப் பற்றி எழுதச் சொல்லியிருக்கிறார்.
ஆனால் அவர் வாழ்வு நிறைவு பெற்ற அடுத்த வாரம் ‘ஒசாமஅசா’ தொடரில் வாலியுடனான அனுபவங்களை சோ சொல்ல அதைப் பதிவு செய்த போது மனம் கனத்த உணர்வு.
– ‘மணா’வின் ‘மறக்காத முகங்கள்’ நூலிலிருந்து…!
நன்றி: தாய்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி