யதார்த்தமாய் கலைஞன் மகேந்திரன்

 யதார்த்தமாய் வாழ்ந்து மறைந்த கலைஞன் மகேந்திரன்





திரைப்படத்திற்குள் நுழைவதற்கு முன்னால் துக்ளக் பத்திரிகையில் பணியாற்றியவர் மகேந்திரன்.
அதில் விளிம்பு நிலையில் வாழக்கூடிய எளிய மக்களைச் சந்தித்து ஒரு தொடரை எழுதினார். ஆச்சர்யம் தரும் தொடர் அது. சாலையோரக் காய்கறிக் கடை வைத்திருக்கும் பெண்கள், நாளெல்லாம் அலைந்து கோலப்பொடி விற்பவர்கள், சினிமாவில் உதிரியான வேஷங்களுக்கு வந்து செல்லும் அவ்வளவாக முகந்தெரிந்தும் பெயர் தெரியாத நடிகைகள் – இப்படிப் பலருடைய வாழ்க்கையைப் பற்றிய பதிவாக இ,ருந்தது அந்தத் தொடர். மனம் ஒன்றி அந்தத் தொடரை எழுதியதற்கு நல்ல வரவேற்பு .
பின்னாளில் திரைத்துறையில் புகுந்து வசனம் எழுதி, படத்தை இயக்கித் தனித்துவமான இயக்குநராகப் பெயர் எடுத்த பிறகு அவருடைய வீட்டில் சந்தித்துப் பேசிக் கொண்டி,ருந்த போது அவர் முன்பு எழுதிய தொடரைப் பற்றிப் பேச்சு வந்தபோது மென்குரலில் சொன்னார்.
“எளிமையான மக்களைச் சந்திப்பது பெரிய அனுபவம்ங்க. அவங்க எவ்வளவு எளிமையா நமக்குக் கற்றுக் கொடுக்கிறாங்க… தெரியுமா?”
அருமையான
கலைஞனாகவும், மனிதராகவும் வாழ்ந்து, வணிகமயமாக வாழாமல் மறைந்த இயக்குநர் மகேந்திரன்
எதிர்நீச்சல் என்கிற தொடருக்காக அவரைச் சந்தித்து மாத இதழில் நான் அப்போது எழுதிய கட்டுரை உங்கள் பார்வைக்கு.
எதிர் நீச்சல்
“என்னம்மா… பிள்ளை குறைப்பிரசவமாப் பிறந்துடுச்சே” இளையான் குடியில் ‘கம்பௌண்டராக இருந்து எத்தனையோ பேருக்குப் பிரசவம் பார்த்த மனோன்மணிக்கு இதைக் கேட்டதும் அதிர்ச்சி. குழந்தை பிழைக்குமா?’
அப்போது குறைமாதச் சிசுவைக் காப்பாற்ற ‘இன்குபேட்டர்” வசதியெல்லாம் இல்லை. டாக்டராக அங்கு இருந்த சாரம்மாவுக்கு ஒருவித பிரியம். அந்த சிசுவைக் ’காட்டன் பஞ்சில்’ சுற்றி தனது அடிவயிற்றில் கட்டிக் கொள்ள இளம் சூடு குழந்தைக்குப் போகும். இப்படியே மூன்று மாதம் “மடிச் சுமையாகக் சுமக்க, பிழைத்துவிட்டது குழந்தை.
ஆனால் உடம்பெல்லாம் தேறவில்லை. வளர்ந்து பள்ளிக்குப் போகும் போதும் புஷ்டியில்லை. “குறை மாசத்தில் பிறந்திருக்கு. அதனாலே நோஞ்சானாகத்தான் இருக்கும். துடிப்பிருக்காது… மத்தவங்க மாதிரி புத்திசாலித் தனமிருக்காது.” – சுற்றிலும் காதுபடப் பேசுகிறபோது சிறு பையனான அலெக்ஸாண்டரின் மனதில் புகை மாதிரி உணர்வு.
“நிறையப் பத்திரிகைகளைப் படிப்பேன். கிடைத்ததையெல்லாம் படிக்கத் தோன்றும். அப்போதே கையெழுத்துப் பத்திரிகையை ஆரம்பித்து விட்டேன். பெயர் ‘லட்டு’. அதில் நிறைய எழுதியிருப்பேன். பள்ளிக் கூடத்தில் கடவுள் வாழ்த்து பாடுவேன். பள்ளியில் சற்றுக் கவனிக்கப்பட்டேன்.
அதோடு நாடகங்கள் போட ஆரம்பித்து நானே நடிக்க ஆரம்பித்தேன். எஸ்.எஸ்.எல்.சி. வரை பேச்சுப் போட்டி, நாடகப் போட்டி எல்லாவற்றிலும் கலந்து முதலாவதாக வந்தேன். கல்கி, தி.ஜானகிராமன், தமிழ்வாணன் என்று பலருடைய நாவல்களை விழுந்துவிழுந்து படித்தேன். கோபுலு, மணியத்தின் படங்கள் கவர்ச்சிகரமாக இருந்தன. எனக்கென்று தனியுலகம் உருவாகிவிட்டது. அதை உருவாக்கியது இவர்கள்தான்.
குடும்பத்தில் பெரிய அளவில் வருமானமில்லை. எனக்கு அடுத்து இரண்டு தம்பிகள். இரண்டு தங்கைகள். அப்பாவுக்குப் பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்கிற ஆசை. அம்மா வழி உறவினர்கள் பலர் ஸ்போர்ட்ஸில் முன்னணியில் இருந்தார்கள். பட்டுக் கோட்டை பக்கத்திலுள்ள அணைக்காட்டில் போய்க் கொஞ்சகாலம். இன்னும் சில உறவினர்கள், வீடுகளில் தங்கிப் படித்தேன். இருந்தாலும் மனதுக்குள் ஒரு விதத் தனிமையை பலவந்தமாக உணர்ந்து கொண்டிருந்தேன்.
ஸ்ரீதர் ‘கல்யாணப்பரிசு’ வெளியான நேரத்தில் தஞ்சாவூருக்கு வந்திருந்தார். அவ்வளவு கூட்டம். தூர இருந்து அவரைப் பார்த்தேன். அவருடைய படங்கள் அப்போது மிகவும் பிடித்திருந்தன. என்னுடைய சொந்தக்காரர்கள் மத்தியில் கையெழுத்துப் பத்திரிகைகளைக் கொண்டுபோவேன். அதை யாரும் மதிக்க மாட்டார்கள். அவர்கள் என்னை ‘ஸ்போர்ட்ஸ் மேன்’ ஆக்கத் தூண்டிக் கொண்டிருந்தார்கள். இதற்கிடையில் காரைக்குடியிலிருந்த என்னோட மாமா ‘இங்கிலீஷ்; படங்களைப் பாருப்பா. சொந்த வீட்டிலேயும், கோர்ட்டிலேயும் யாராவது போய் மணிக்கணக்கா ‘டயலாக்’ பேசுவானா? தமிழ் சினிமா மாதிரி எங்காவது காதலிக்கிறவங்க பாட்டுப் பாடுவாங்களா? மிகைப்படுத்துறாங்கப்பா’ என்று தூண்டி விட்டார். மதுரை ரீகல் தியேட்டரில் நிறைய ஆங்கில ‘கிளாஸிக்’ படங்களைப் பார்த்தேன். மிகைப்படுத்தாமல் ஆர்ப்பாட்டமில்லாமல் அவர்கள் படமெடுத்த முறை பிடித்திருந்தது. காமெடிக்கு, ஆக்ஷனுக்கு, இசைக்கு, வரலாற்றுக்கு என்று தனித்தனிப்படங்கள். அசந்து போய் விட்டேன். ஏன் நாம் இப்படி படம் எடுக்க முடியவல்லை.?
அந்தச் சமயத்தில் ‘நாடோடி மன்னன்’ பட வெற்றி விழாவுக்காகப் பல ஊர்களுக்கு வந்தார் எம்.ஜி.ஆர். காரைக்குடி அழகப்பா கல்லூரிக்குக் கூப்பிட்டிருந்தார்கள். ‘என்னைப் பேசச் சொல்லக் கூடாது’ என்கிற கண்டிஷனுடன் வந்தார் எம்.ஜி.ஆர். அவர் முன்பு பேச மூன்று மாணவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். அதில் நானும் ஒருவன். சினிமாவைப் பற்றி நான் பேச வேண்டும். அவ்வளவு கூட்டம். எனக்கு முன்பு இரண்டு பேர் பேசினதும் உட்காரச் சொல்லிக் கத்தி விட்டார்கள்.
அந்தச் சமயத்தில் எங்களுடன் படித்த மாணவனுக்கும் இலங்கையைச் சேர்ந்த பெண்ணுக்கும் காதல். அதனால் பெற்றோரைக் கூப்பிட்டுப் பேசி பெரிய விஷயமாக்கி விட்டார்கள். இந்த நேரத்தில்தான் எம்.ஜி.ஆர். வந்திருந்தார். “நாமெல்லாம் ‘லவ்’ பண்றது எவ்வளவு கஷ்டம் தெரியுங்களா? நோட்டீஸ் போர்டிலே ஒட்டி, ஊரெல்லாம் நாற வேண்டியிருக்கு… இதோ இவர் எவ்வளவு ஈஸியா ‘லவ்’ பண்றார்… பார்த்தீங்களா” என்று ஆரம்பித்ததும் அவ்வளவு கை தட்டல். குனிந்து ஆட்டோ கிராப் போட்டுக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர் நிமிர்ந்து பார்த்தார்.
தொடர்ந்து சினிமாவின் போக்கு பற்றி விமர்சித்துப் பேசியதும் கைதட்டல். மேடையிலிருந்த எம்.ஜி.ஆர் முன்னாலிருந்த கூட்டத்தைப் பார்த்துக் கைதட்டச் சொல்ல 45 நிமிஷங்கள் தொடர்ந்து பேசினேன். ‘சினிமாவிலே…அழுதா…ஒண்ணு அழறீங்க. காதலிக்கிறேன்னு டூயட் பாடுறீங்க. ஒரே சமயத்தில் முப்பது பேரைத் துவம்சம் பண்றீங்க. எல்லாம் இயல்பா இல்லாமல் செயற்கையா இருக்கு, என்று நாடோடி மன்னன் படத்தில் வரும் சில காட்சிகளை விமர்சித்துப் பேசினேன. பேசி விட்டுக் கீழே இறங்கப் போனவனை எம்.ஜி.ஆர். கூப்பிட்டு அங்கிருந்த லெட்டர் ஹெட்டில் பச்சை மையில் பாராட்டி எழுதிக் கொடுத்தார்.
அதற்கிடையில் ஏர்ஃபோர்ஸிலிருந்து விண்ணப்பித்த இன்டர்வ்யூக்கான கார்டு வந்திருக்கிறது. வீட்டில் ஏனோ பயப்பட்டு அந்தக் கார்டை என்னிடம் காண்பிக்கவில்லை. சில நாட்கள் கழிந்த பிறகே காட்டினார்கள். என்னுடைய இன்னொரு அத்தை சென்னையில் சட்டம் படிக்கச் சொன்னார்கள். அதனால் சென்னைக்கு வந்து சேர்ந்து விட்டேன். ஏழு மாதத்திற்கு மேலே பணம் அனுப்ப முடியாமல் போனதால் அதோடு படிப்பு போயிற்று.
சந்தர்ப்பங்களை கடவுளின் புனைபெயர்கள் என்று சொல்வார்கள். அதே மாதிரி நடந்தது எனக்கும். சென்னையில் காலையில் ஊருக்குக் கிளம்ப முடிவு செய்து வந்து கொண்டிருந்தேன். எதிரே எனக்குத் தெரிந்தவர் கண்ணப்ப வள்ளியப்பன். விசாரித்தவர்’ ‘இன முழக்கம்’ என்கிற பத்திரிகைக்குத் துணை ஆசிரியராகச் சேர்ந்துவிட்டார். சி.பி.சிற்றரசு அதன் ஆசிரியர்.
சிந்தாதிரிப்பேட்டையில் தங்கியிருந்தேன். சினிமா பார்த்துவிட்டு விதவிதமான விமர்சனங்கள், சிறுகதைகள், கார்ட்டூன்கள் என்று பல வழிகளிலும் இறங்கினேன். தி.மு.க.வைச் சேர்ந்த சிலர் சினிமா எடுத்த போதும் பாரபட்சமில்லாமல் விமர்சனம் எழுதினேன்.
அப்போது எம்.ஜி.ஆர் காலில் அடிபட்டுக் குணமாகித் திரும்பவும் நடிக்க வந்தார். அதற்காகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். ராமாவரம் போயிருந்தேன். நிறையப் பத்திரிகையாளர்கள். பின் வரிசையில் நான் நின்று கொண்டிருந்தேன். பேசி முடித்து பார்த்துக் கொண்டே வந்தவர் கூர்ந்து பார்த்து, “நீங்க அழகப்பா கல்லூரி மாணவர்தானே” என்று கேட்டார். எனக்கு அவரது ஞாபக சக்தி பற்றி ஆச்சர்யம்.
“எங்கே… இந்தப் பக்கம்?”
“இன முழக்கம் பத்திரிகையிலே இருக்கேன். சினிமா விமர்சனம் எழுதிக்கிட்டிருக்கேன்…”
“ஓ.. நீங்க தானா? நாளைக்கே லாயிட்ஸ் ரோட்டிலிருக்கிற வீட்டுக்கு வந்திருங்க” என்றார். தலையாட்டினேன்.
மறுநாள் லாயிட்ஸ் ரோடு வீடு. எனக்கென்று தங்க ஒரு அறை. போனதும் “பொன்னியின் செல்வன்” தொகுப்புகளைக் கொண்டு வந்து கொடுத்தார். “இதுக்குத் திரைக்கதை எழுதுறீங்க. சொன்னதும் வியப்பு. திரைக்கதை எழுதிய அனுபவம் எனக்கில்லாத நிலையிலும் என்மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை பிடித்திருந்தது. சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அங்கிருந்த நண்பர் ஒரு மெஸ்ஸில் சாப்பிடச் சொல்லியிருந்தார். எம்.ஜி.ஆரிடம் என்னுடையக் கஷ்டத்தைச் சொல்லவில்லை. நிறையக்கதைகள் கேட்பார். சொல்லுவேன். அவருடைய அனுபவங்களைச் சொல்வார். நான் வசதியான வீட்டுப் பையன் என்று நினைத்திருந்தார்.
இரண்டு மாதங்களில் முழுத்திரைக் கதையையும் எழுதி முடித்திருந்தேன். ‘திருடாதே’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. திரைக்கதையை அவரிடம் கொடுத்தேன். சந்தோஷம் அவர் முகத்தில். தோளில் கை போட்டபடி ‘வீட்டிலே இருந்து பணம் வருதா?” பரிவுடன் கேட்டார். ‘இல்லை’ என்று நான் சொன்னதும் தனது தலையில் அடித்துக் கொண்டார். ‘பாவி நான்… எத்தனை நாள் பட்டினி கிடந்தியோ… நேரே வீட்டுக்குப் போ…”
வீட்டுக்குப் போனதும் சிறிது நேரத்தில் ‘கவர்’ ஒன்றைக் கொண்டுவந்தார் எம்.ஜி.ஆரின் உதவியாளர். கவரைப் பிரித்தால், ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் இருந்தது. அதன் மதிப்பு கூட எனக்கு அப்போது தெரியவில்லை.
நடிகை ஜி.சகுந்தலா மூலம் இன்னொரு படத்திற்குக் கதை வசனம் எழுத முடிவானது. ‘நாம் மூவர்’ படம். அதிலும் ஆரம்பிக்குமுன்பே பிரச்சனை. ஊருக்குக் கிளம்பிப் போய் விட்டேன். இரண்டு நாட்களில் போன். கிளம்பி வரச் சொன்னார்கள். ‘ஓடியன் தியேட்டரின் ஆங்கிலப் படம் ஓடுது. பார்த்துட்டு ஏதாவது மாற்றம் பண்ணிக் கொடுங்க’ என்றார். வேறு வழியில்லாமல் பண்ணிக் கொடுத்தேன். படம் ‘ஹிட்’
சபாஷ் தம்பி, பணக்காரப்பிள்ளை என்று அடுத்தடுத்த படங்களுக்குக் கதை வசனம் எழுதி அவையும் நன்றாகப் போயிற்று. எந்த மாதிரி படத்தை எடுக்க கூடாதென்று நினைத்தோமோ, அதே மாதிரி படங்களில் நாமே ‘ஒர்க்’ பண்ணி, அது வெற்றியும் அடைந்து கொண்டிருக்கிறதே என்று எனக்குள் உறுத்தல். இதற்கிடையில் எனக்குக் காதல் திருமணம் நடந்தது.
தயாரிப்பாளர் வேணுசெட்டியார் வலுக்கட்டாயமாக முக்தா சீனிவாசனிடம் கூட்டிக் கொண்டு போனார். கதை சொன்னேன். வசனத்தை சோ எழுதுவதாக முடிவானது. அப்படி சிவாஜி நடித்து வந்த படம் ‘நிறைகுடம்’.
மறுநாள் ‘சோ’ கூப்பிட்டிருந்தார். ‘துக்ளக்’ பத்திரிகை ஆரம்பிக்க இருப்பதைச் சொன்னார். ‘உதவி ஆசிரியராக இதில் வேலை பார்க்க முடியுமா?’ கேட்டார் – எனக்கு அது ஆரோக்கயமாகப்பட்டது. உதவி ஆசிரியராகச் சேர்ந்தேன். நிறைய இடங்களுக்கு ‘இன்வஸ்டிகேட்டிவ் ஜெர்னலிசம்’ என்று போய் எழுதினேன். பத்திரிகையாளனாகக் கழித்த அந்த மூன்றரை ஆண்டுகள் அற்புதமாகப் போனது. மிகவும் மனம் ஒன்றி ரசித்துச் செய்தேன் அந்த வேலையை.
ஒரு நாள் ஆசிரியரான ‘சோ’ வைப் பார்க்க வந்திருந்தார்கள் சிவாஜிக்கு நெருக்கமாக இருந்த எஸ்.ஏ.கண்ணனும், நடிகர் செந்தாமரையும். சோ வரத் தாமதமானதால் என்னுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம் சொன்ன ஒற்றைவரிக் கதை ‘தங்கப்பதக்கத்தின்’ மூலக்கதை. சொன்னதும் செந்தாமரைக்குப் பிடித்துப் போய்விட்டது. அதையே நாடகமாக்கி செந்தாமரை நடித்தார். பிரமாதமாகப் போனது அந்த நாடகம். நாற்பது தடவைக்கு மேல் நடந்தபோது சிவாஜி வந்து நாடகத்தைப் பார்த்தார். ‘இதோடு நிறுத்திக்குங்க. சிவாஜி நாடகக் கம்பெனி மூலமாக இதை நாடகமாகப் போடலாம் என்றார் சிவாஜி. சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்றார். ‘மகனா வர்ற ராஸ்கலை அந்த அப்பா கேரக்டர் சுட்டுத் தள்ள வேணாமா?” என்று மாற்றச் சொன்னார். மாற்றி நிறைய இடங்களில் நடந்தது அந்த நாடகம். பிறகு அதைப் படமாக்குவதாகக் கூப்பிட்டுச் சொன்னார்கள். விளம்பரம் வந்திருந்தது. ‘மறுபடியும் சினிமாவா’ என்கிற கேள்வி எனக்குள். சோ மூலம் சொல்லி வரச் சொல்லி விட்டார்கள். படத்தில் இன்னும் மாற்றம் செய்தார்கள். ‘நாடகமாக வந்ததில் நூற்றில் ஒரு பங்கு கூட இல்லை’ என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன். ஆனால் படம் வெற்றி.
சுயகௌரவம் இருந்ததால் யாரிடமும் வாய்ப்பு கேட்கப் போகவில்லை. கிறிஸ்தவ தொடர்பு மையத்திற்காகச் சில ரேடியோ நாடகங்கள் எழுதினேன். 25 ரூபாயிலிருந்து 50 ரூபாய் கிடைக்கும். அதுதான் வருமானம். அதற்குள் ஆறேழு தடவை வாடகை வீட்டை மாற்றி விட்டேன். அப்போது தயாரிப்பாளர் எஸ்.எஸ்.கருப்பசாமி தேடி வந்தார். தென்னரசு சொல்லி அனுப்பியிருந்தார். அவருக்காகச் சொல்லி கதை வசனம் எழுதின படம் ‘வாழ்வு என் பக்கம்’. ‘மோகம் முப்பது வருஷம்’, ‘ஆடு புலி ஆட்டம்’ என்று வரிசையாகப் படங்கள். அதற்குப் பிறகு வேறு சிலரின் நாவல்களுக்குத் திரைக்கதை, வசனம் எழுதினேன். ‘மோகம் முப்பது வருஷம்’ படமும் நன்றாகப் போனது.
‘ஆடு புலி ஆட்டம்’ படத்தின் போது பழக்கமானவர் ரஜினி. சிகரெட்டில் பழக்கமானோம். சோர்ந்து போகிற நேரத்தில் ஆறுதலாகப் பேசுவார். ‘இப்படித்தான் படம் எடுக்கணும்னு நினைக்கிறேன். ஆனால், அதற்கு நேர்மாறா படம் எடுக்கிற ஆட்களில் ஒருவனா நானும் இருக்கேன்’ என்று அவரிடம் மன ஆதங்கத்தைப் பகிர்ந்து கொள்வேன். கமலிடமும் பேசுவேன். நல்ல படம் எடுப்பது பற்றிப் பேசிக் கொள்வோம். ரஜினியுடன் விடிய விடியக் கூடப் பேசுவேன்.
அந்த நேரத்தில் என்னைத் தேடி வந்தார் தயாரிப்பாளரான வேணு செட்டியார். அப்போது உமா சந்திரனின் ‘முள்ளும் மலரும்’ நாவலைப் படித்திருந்தேன். அதில் முக்கியப் பாத்திரம் காளி. இருளர் விழாவுக்கு அந்தப் பாத்திரம் போகிறபோது புலியடித்து ஒரு கையை இழக்கிற மாதிரி வரும். அதைப் படித்துச் சற்று மாற்றங்கள் செய்து, அண்ணன் தங்கைக் கிடையில் நிலவும் ஒரு விதமான முரட்டுப் பிடிவாதமான பிரியத்தை இயல்பானபடி திரைக்கதையாக எழுதினேன். வின்ச் ஆபரேட்டராக, “ஈகோ” உள்ள நபரான அந்தக் ‘காளி’ கேரக்டருக்கு ரஜினியின் தோற்றம் பொருந்தும் என்று முடிவு பண்ணியிருந்தேன். கதையைச் சொன்னதும் என்னையே டைரக்ட் பண்ணச் சொன்னார் தயாரிப்பாளர். பாலுமகேந்திராவை கமல்தான் ஒளிப்பதிவுக்காகச் சிபாரிசு பண்ணினார். மூன்று மாதங்கள் சிருங்கேரி பகுதியில் படப்பிடிப்பு. இளையராஜாவின் இசை, ‘எமோஷனலான’ காட்சிகள் இருந்தாலும் குறைந்த இயல்பான வசனம். படம் வெளிவந்து சிறிது சிறிதாக ‘பிக் அப்’ ஆனது.
அதே மாதிரி புதுமைப் பித்தனின் ‘சிற்றன்னை’ கதை பள்ளிக் கூடக் காலத்திலேயே பிடித்திருந்தது. அது நிறைய காட்சிப் படிமங்களை எனக்குள் ஏற்படுத்தியிருந்தது. அதையே ‘உதிரிப் பூக்களாக’ எடுத்தேன். பிறகு அடுத்தடுத்துச் சில படங்கள், விருதுகள், சில அங்கீகாரங்கள்.
என்னுடைய வாழ்க்கை முறை வித்தியாசமானது. இதைப் பின்பற்ற முனைவது, இயக்குநராக முயல்கிறவர்களுக்கு நல்லதல்ல. நான் திடீர் திடீரென்று காட்சிகளை மாற்றிப் படப்பிடிப்புத் தளத்திற்குப் போய் வசனங்களை எழுதியிருக்கிறேன். அதையும் பின்பற்றக்கூடாது. முன்பே திரைக்கதை வசனத்தை எழுதி, சில திருத்தங்களை வேண்டுமானாலும் பண்ணலாம்.
என்னுடைய ஒவ்வொரு அசைவுக்கும், முன்னேற்றமான ஒவ்வொரு அடிக்கும் யாரோ ஒருவர் காரணமாக இருந்திருக்கிறார்கள். இதையெல்லாம் மறந்துவிட்டு அல்லது புறந்தள்ளிவிட்டு எல்லாம் என்னுடைய புத்திசாலித்தனம், சாமர்த்தியம் என்று சொல்லிக்கொள்ள மனம் இடம் கொடுக்கவில்லை.
வாய்ப்புகள், வசதிகள் இருந்தாலும் நமக்கான முயற்சிகள் தொடர்ந்து சோர்ந்து போகாமல் இருந்து கொண்டிருக்க வேண்டும். இன்றைக்கு உங்களது தோட்டத்திலிருக்கிற செடிக்குத் தண்ணீர் ஊற்றாமல் நாளைக்கு அதிலிருந்து எப்படிப் பூ பறிக்க முடியும்? யாருக்கும் நாம் கடிதங்கள் எழுதாமல், நமக்கு மட்டும் கடிதம் வருமென்று எப்படி தபால் பெட்டியைப் பார்க்க முடியும்? இப்படி நிறையச் சொல்லலாம்”. என்று சொல்கிற மகேந்திரன் திறமையுடன் வருகிற இளைஞர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் சொல்கிறார்.
“மனதில் எதிர்பார்ப்பும் அதற்கேற்ற வேகமும் இருக்கிறதா? நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளை அதன் போக்கில் செய்து கொண்டிருங்கள். அதன் விளைவு எப்படியாவது வந்துதான் தீரும். கால ஓட்டத்தில் சற்றுப் பிந்தலாம். அவ்வளவுதான்.”
–அகில் அரவிந்தன்
நன்றி: தாய்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி