நடிகர் தேங்காய் சீனிவாசன்
நடிகர் தேங்காய் சீனிவாசன் பிறந்தநாள் இன்று.
சென்னையைச் சேர்ந்த இராஜவேல் முதலியார் என்பவருக்கும், தூத்துக்குடியிலுள்ள ஸ்ரீவைகுந்தத்தைச் சேர்ந்த சுப்பம்மாள் என்பவருக்கும் மகனாக 1937-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் நாள் பிறந்தார்.
காமெடி நடிகர் தேங்காய் சீனிவாசனின் நடிப்பு பசிக்கு முதலில் தீனி போட்டது அவருடைய அப்பா தான். அப்பாவின் கலாட்டா கல்யாணம் என்ற நாடகம் மூலமாக தான் தேங்காய் சீனிவாசன் நடிக்க ஆரம்பித்தார்.
ஆரம்பத்தில் சீனிவாசன் என்று அழைக்கப்பட்டு வந்தவர் தேங்காய் சீனிவாசன் ஆனதற்கு பின்னால் சுவாரஸ்யமான கதை உள்ளது. அதாவது ‘கல் மணம்’ என்ற நாடகம் ஒன்றில் தேங்காய் விற்கும் பையனாக நடித்த சீனிவாசனின் கதாபாத்திரம் அனைவருக்கும் பிடித்து போனது. அந்த நாடகத்தை பார்க்க வந்த திரைப்பிரபலம் டணால் தங்கவேலு அவருக்கு தேங்காய் சீனிவாசன் என பட்டப்பெயர் கொடுத்தார்.
காமெடி நடிகர்களிலேயே நல்ல உயரமான உடல்வாகு, அழகான கிராப் வைத்த தலைமுடி, வசீகரிக்கும் அழகு என அப்போது அனைத்து அம்சங்களுடன் வலம் வந்தவர் தேங்காய் சீனிவாசன் மட்டுமே.
ஏ.வி.எம்.மின் “காசேதான் கடவுளடா|” படத்தில் நடித்த தேங்காய் சீனிவாசனுக்கு தியேட்டர்களில் தனியாக கட் அவுட்கள் வைக்கப்பட்டது என்றால் நம்ப முடிகிறதா?. அந்த படத்தில் நடித்த ஹீரோக்களை விட ஒரு காமெடி நடிகருக்கு கட் அவுட் வைக்கப்பட்டது வரலாற்று சிறப்பாகும்.
‘ஜிஞ்சக்கு ஜக்கா..ஜக்கா..மங்ளோத்திரி..தீர்த்தாய’,‘ஆசிர்வாத அமர்க்களா’என தேங்காயின் வாயில் வழியாக வெளியே வரும் டயலாக்குகளுக்கு அர்த்தமே கிடையாது என்றாலும் அதை அவர் உச்சரித்த விதம் ரசிகர்கள் மத்தியில் அப்படியொரு கைத்தட்டல்களை தியேட்டர்களில் அள்ளிக்கொடுத்தது.
காமெடியன், வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என சுமார் 900 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர், சிவாஜி கணேசன் நடித்த கிருஷ்ணன் வந்தான் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
தேங்காய் சீனிவாசன்
இரவு பகலும் என்ற படத்தில் முதன் முறையாக காமெடியனாக அறிமுகமாகி இருக்க வேண்டியது. அந்த படத்தில் சில காட்சிகளில் நடித்த பிறகு, வியாபார காரணங்களுக்காக அவரை நீக்கிவிட்டு அப்போது பிரபலமாக இருந்த நாகேஷை படக்குழு ஒப்பந்தம் செய்தது.
ரசினிகாந்த் நடித்த தில்லுமுள்ளு படத்தில் தேங்காய் சீனிவாசனோட நடிப்பு ரொம்ப சிறப்பா இருக்கும்
இந்த காலத்தில் சிவகார்த்திகேயன் - சூரி காம்பினேஷன் போல் அப்போது ஜெயசங்கர் - தேங்காய் சீனிவாசன் காம்பினேஷன் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். திரையில் மட்டுமல்லாது நிஜத்திலும் இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகியுள்ளனர்.
டணால் தங்கவேலு, நாகேஷ், என்.எஸ்.கே., சந்திரபாபு கொடிகட்டி ஆண்ட திரையுலகில் தனக்கென தனி பாணியையும், ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கி வைத்திருந்த தேங்காய் சீனிவாசன் உயிரிழந்த போது அவருக்கு வயது வெறும் 51 மட்டுமே.
நன்றி: ஏசியாநெட் நியூஸ்
Comments