ஓவியர் அரஸ்
பத்திரிகைத் துறையில் ஓவியம் வரைய ஆரம்பிச்சு 35 வருஷங்களாச்சு. இவர் முழுப் பெயர் திருநாவுக்கரசு. அப்பா பெயர் வி.சுப்பிரமணி. தாயார் பெயர் தனபாக்கியம். சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் இலுப்பைகுளம். இவர் கூடப் பிறந்தவங்க மொத்தம் ஏழு பேர். மனைவி பெயர் பாவை. இவருக்கு இரண்டு பசங்க. மூத்தவன் அரவிந்தன். சின்னவன் ஹர்ஷவர்தன்.
ஓர் அரசு பள்ளிலதான் படிச்சார். ஓவியத்துல இவருக்கு குருனு யாரும் கிடையாது. இவங்க வீட்ல யாரும் ஓவியத்துறைல இல்ல. அதாவது ஓவியத்துக்கு சம்பந்தமே இல்லாத குடும்பம்.சின்ன வயசுல இவராகவே பயிற்சி எடுத்துக்கிட்டார். பத்திரிகைகள்ல வரும் படங்களைப் பார்த்து வரைவார். அப்ப காமிக்ஸ் புத்தகங்கள் பிரபலமா இருந்தது. இவருக்கு சித்திரக் கதைகள்ல ஆர்வம் வந்தது. அந்தப் படங்களைப் பார்த்து படம் வரைய ஆரம்பிச்சார். நாமே ஏன் ஒரு காமிக்ஸ் புத்தகம் உருவாக்கக் கூடாதுனு யோசிச்சப்ப இவர் ஆறாவது படிச்சுட்டு இருந்தார்.
இந்தியன் இங்க் அப்படினு ஒரு கருப்பு மை இருக்கும். அதைத்தான் அப்ப பத்திரிகைகளுக்கு படம் வரைய அதிகம் பயன்படுத்துவாங்க. அதை சாதாரண பேனால ஊத்தி துப்பறியும் நிபுணர் மாதிரி ‘திருநா காமிக்ஸ்’னு ஒரு புத்தகமே உருவாக்கினார்! அதுல முன்பக்கமும் பின்பக்கமும் வரும் படங்களை கலர்ல வரைஞ்சு அந்த பேப்பர்ல மெழுகுவர்த்தியைக் கொண்டு தலைகீழா பிடிச்சுத் தேய்ப்பார். லேமினேஷன் செய்தது மாதிரி மாறிடும். கலரிங் மெழுகு தேய்த்த ரெண்டு படங்களையும் முன்பக்க பின்பக்க அட்டைகளா மாற்றிடுவிடுவார்.
இப்படி துப்பறியும் நிபுணர் கதைகள் எல்லாம் எழுதினார்.
இத்தனைக்கும் தமிழகம் விட்டுத்தாண்டினதில்ல. அதிலும் ஆறாம் வகுப்பு படிக்கிற பையன். ஆனா, இவர் துப்பறியும் நிபுணர் விமானத்தில் ஏறி அமெரிக்கால இறங்குவதாக இவர் காமிக்ஸ் கதை இருக்கும்!
காமிக் புத்தகம் முடிஞ்சதும் அதை இவர் பள்ளி ஆசிரியர்கிட்ட கொடுப்பார். நண்பர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அது ரொம்ப பிடிச்சுப் போச்சு. யார் அதை முதல்ல படிக்கறதுனு ஆசிரியர்களுக்குள்ள போட்டா போட்டி. லயன் / முத்து காமிக்ஸ் எல்லாம் மாசா மாசம் வரும். அதை மனசுல வைச்சுகிட்டு ‘அடுத்த மாசம் என்ன காமிக்ஸ் வெளியிடப் போறே’னு இவர்கிட்ட கேட்பாங்க.
இவரும் சும்மா இல்லாம ‘முத்து காமிக்ஸ்’ல வருமே... அடுத்த மாத வெளியீடு ‘இரும்புக்கை மாயாவி துப்பறியும்’னு... அதே மாதிரி ‘திருநா காமிக்ஸி’ன் அடுத்த மாத வெளியீடு ‘ஜேம்ஸ் துப்பறியும்’னு போட ஆரம்பிச்சார். ‘லயன் /. முத்து காமிக்ஸ்’தான் இவருக்கு படக்கதைகள் வரைகிற ஆர்வத்தை கொடுத்தது. காமிக்ஸ் மேல இவருக்குப் பைத்தியம் பிடிக்கவும் ‘முத்து காமிக்ஸ்’தான் காரணம்.
இதுக்கெல்லாம் எந்தளவுக்கு பாராட்டுகள் கிடைச்சுதோ அதே அளவுக்கு காழ்ப்புணர்ச்சியையும் சந்திச்சார். ஆமா, ஆறாவது படிக்கிறப்பவே இதையெல்லாம் எதிர்கொள்ள ஆரம்பிச்சுட்டார். இவங்க டிராயிங் மாஸ்டருக்கு எப்பவும் இவர்மேல எரிச்சல். திட்டிக்கிட்டே இருப்பார். அந்த வயசுல அது புரியல. இத்தனைக்கும் அரசு வேலை. கை நிறைய சம்பளம். ஆனாலும் இவர் வரையறதுல அவருக்கு கோபம்.
இது ஒரு பக்கம்னா, தமிழாசிரியர் இன்னொரு பக்கம். கம்ப ராமாயணம், மகாபாரதத்துல இருந்து படம் வரையச் சொல்லி இவர்கிட்ட கேட்டார். இவரும் வரைஞ்சு கொடுத்தார். அதை தமிழ்நாடு முழுக்க நடந்த ஓவியப் போட்டிகளுக்கு பள்ளி சார்பா அனுப்பினாங்க. மாநில அளவுல முதல் பரிசு கிடைச்சது. பால ராமாயணம் 10 புத்தகங்களும், 2 ஆயிரம் பக்கத்துல ‘தெய்வத்தின் குரலை’யும் கொடுத்தாங்க.
இந்தப் பரிசு கிடைச்சதுல இருந்து தமிழாசிரியருக்கு இவர் மேல கோபம் வர ஆரம்பிச்சது. ‘அவ்வளவு பெரிய மண்டையாடா’னு எப்பவும் திட்ட ஆரம்பிச்சார். வளர்ந்த கலைஞனுக்கு இப்படி பிரச்னைகள் வந்தா பரவால்ல. வளரும் சிறுவனுக்கு இப்படி வந்தா என்ன சொல்றது..? ஆனாலும் விடாம ஓவியம் வரைந்தார். பாராட்டுகளும் அதிகரிச்சது. அது ஊக்கத்தைக்கொடுக்கவேஒவ்வொரு பத்திரிகைக்கும் இவரா படம் வரைஞ்சு அனுப்ப ஆரம்பிச்சார்.
அப்ப ‘மாலை முரசு’ல இருந்து வேலூர், திருச்சி பகுதிகளுக்கு தனியா பத்திரிகைகள் வெளிவரும். அதுல ஓர் இணைப்பு புத்தகம்தான் ‘தேவி’. இதுலதான் இவர் முதல் ஓவியம் பிரசுரமாச்சு. இதுக்கான சன்மானமும் வீடு தேடி வந்தது. வீட்ல இருந்தவங்க இதுக்கெல்லாம் பணம் தருவாங்களானு ஆச்சர்யப்பட்டாங்க. ஏன்... இவருக்கே கூட வியப்புதான். இதுவும் ஒரு வேலைனு அப்பதான் புரிஞ்சுது.
அச்சுல வந்த இவர் முதல் படம், கடல் கன்னி! இதுக்கிடைல ஹைஸ்கூல் முடிஞ்சு கல்லூரிக்கு போனார். ஓவிய ஆர்வம் காரணமா கல்லூரிப் படிப்பை பாதிலயே விட்டார். இவர் படிப்பை விட்டது ரொம்ப காலம் வரைக்கும் வீட்டுக்கு தெரியாது. தெரிஞ்சப்பவும் பெருசா கண்டிக்கலை. ‘இவனுக்குதான் ஓவியத் திறமை இருக்கே... அதுலயே சம்பாதிக்கட்டும்’னு சொல்லிட்டாங்க.
ஆமா... 17 வயசுல வீட்ல இருந்தே ‘மயன்’ என்கிற பத்திரிகைக்கு படம் போட்டுக் கொடுத்து சம்பாதிக்க ஆரம்பிச்சார். தொடர்ந்து ஏகப்பட்ட பத்திரிகைகள். இருக்கும் அத்தனை பெரிய பத்திரிகைகளிலும் இவர் ஓவியம். பெருமையாவும் சந்தோஷமாவும் இருந்துச்சு.
அதிலும் இந்த படக் கதைகளுக்கு ஓவியங்கள் வரைய நிறைய பேர் ஆசைப்பட மாட்டாங்க. காரணம், படக் கதை வரையவும், ஜோக் படம் வரையவும் கொஞ்சம் நுணுக்கங்கள் தேவை. அதெல்லாம் போக அடிப்படைலயே காமெடி, ஜோக் மைண்ட் இருக்கணும். நக்கல், நையாண்டி இருந்தாதான் கேலிச்சித்திரங்கள் வரைய முடியும்.
அந்த வகைல இவர் அரசியல் கேலிச் சித்திரங்களுக்கு இப்பவும் ஒரு வட்டம் இருக்கு. இவர் ஓவியம் வரைய வந்தப்ப மணியம்செல்வன், ஜெயராஜ், மாருதி, ராமு எல்லாம் கலக்கிட்டு இருந்தாங்க. ஒவ்வொருத்தர் கிட்டயும் ஒரு பிரமாதமான ஸ்டைலைப் பார்க்கலாம்.
மணியம்செல்வன் ஓவியங்கள் கவர்ச்சியே இல்லாம பாந்தமா இருக்கும். ஜெயராஜ் படங்கள்னா மாடர்ன் ஸ்டைல். இவர் ஸ்டைல் கிரைம். அதனாலயே இவருக்கும் ராஜேஷ்குமாருக்கும் செட் ஆனது. தொடர்கதைகளுக்கும், சிறுகதைகளுக்கும் ஓவியம் வரையற பலரும் படக்கதைகள் வரைய சிரமப்படுவாங்க. காரணம் கதையை அப்படியே ஓவியங்களா வரையணும். கேரக்டரை புரிஞ்சு, அந்தந்த காட்சிகளை படமாக்கணும், பேச வைக்கணும், ஆட வைக்கணும். அந்தக் கேரக்டர்கள் கட்டத்திற்கு கட்டம் வாழணும்.
ஆனா, தொடர்கதைகள், சிறுகதைகளுக்கு ஏதாவது தனித்துவமான காட்சியை மட்டும் எடுத்துக்கிட்டு ஒரு படமோ ரெண்டு படமோ போட்டுக் கொடுத்திடலாம். அங்கேயும் சில சிக்கல்கள் இருக்கு. ஒரு வாரமோ இல்ல ரெண்டு வாரத்துலயோ படக் கதைகள் முடிஞ்சுடும். ஆனா, தொடர்கதைக்கு முன்னாடி வரைஞ்ச கேரக்டர்களை வெச்சி ஒப்பிட்டு, ஸ்டடி செய்து வரையணும்.
ஒரு கதையை ஒரு ஓவியன் நினைச்சா மிகச் சிறப்பாக மாற்றவும் முடியும், கெடுக்கவும் முடியும். எந்தக் கலையும் பழகினால்தான் வசப்படும். அப்படிதான் இவருக்கும் சாத்தியப்பட்டது. அதிலும் கேலிச்சித்திரம், கதைப் படங்கள், கேரிகேச்சர் படங்களுக்கு நிச்சயம் பயிற்சி வேணும். இத்தனை காலமும் அதை சிறப்பா செய்திருக்கார். செய்துட்டும் இருக்கார். இதை நினைக்கிறப்ப சந்தோஷமா இருக்கு.
2016 ஆகஸ்ட் 3ம் தேதி சென்னை கீழ்ப்பாக்கம் தமிழ்நாடு பவுண்டேஷன் கேலரில ‘ஆர்ட் அட்டாக்’ என்கிற பெயர்ல ஓவியப் பயிற்சிப் பட்டறை நடத்தினார். இவர் கூட சேர்ந்து ஓவியர் ராம்கியும், கார்ட்டூனிஸ்ட் தேவநாதனும் இந்தப் பட்டறையை நடத்தினாங்க. இப்ப ஓவியப் பயிற்சி வகுப்புகள் நடத்திட்டு இருக்கார். ஊரடங்கு காலத்தில் வாட்ஸ்அப், யூ டியூப் சேனல் வழியாகவும் ஆன்லைன் வகுப்புகளாகவும் கார்ட்டூன்கள், காமிக்ஸ்கள் வரைய பயிற்சி வகுப்புகள் எடுத்தார்.
இவர் பசங்க ஆளாகி இவர் ஓவியப் பயிற்சியை டிஜிட்டலுக்குக் கொண்டு வர பின்புலமா இருக்காங்க. "நமக்குத் தெரிஞ்ச கலை. அதை ஆர்வம் இருக்கும் மக்கள்கிட்ட கொண்டு போய் சேர்க்கறேன். ஓவியக் கலைக்கு ஏராளமான மரபுகள் இருக்கு. ஏன், இந்தச் சித்திரக் கதைகளுக்கே நம் நாட்டு பத்திரிகை வரலாறுப்படி யோசிச்சா 60 வருஷங்களுக்கு மேல வரலாறு இருக்கு" என்கிறார்.
காமிக்ஸ்கள் எல்லாம் மேலை நாடுகள்ல அவ்வளவு பெரிய கமர்ஷியலா இயங்கிட்டு இருக்கு. ஏன், சினிமாவுக்குள்ளயே காமிக்ஸ்தானே - ஸ்டோரி போர்ட் - அடிப்படை..?ஆனா, நம்ம நாட்ல குழந்தைகள் அளவுலயே இன்னும் காமிக்ஸ் பெரிய அளவுல ரீச் ஆகலை.
நிறைய காமிக்ஸ்கள் வரணும். நிறைய கேலிச்சித்திர, காமிக்ஸ் ஓவியர்கள் உருவாகணும். அதற்குதான் இவரும் யூ டியூப், வாட்ஸ்அப், ஆன்லைன்
வகுப்புகளை எடுக்கிறார். பயிற்சிகள் கொடுக்கறார். ஆர்வம் இருக்கற யாரும் இவரை அணுகலாம். கத்துக்கொடுக்க இவர் தயாரா இருக்கார்.
இவரது ஓவிய ஆற்றல் வியக்க வைக்கிறது.
ஷாலினி நியூட்டன்
Comments