நீ என்னை பின் தொடர்ந்து வருவதாய் ./கவிதை/குபோதினி
நீ என்னை பின் தொடர்ந்து வருவதாய்
ஏதோ ஒரு நம்பிக்கை
நான் எழுதுவதெல்லாம் உனக்கென உள்ளுக்குள் நீ மகிழ்ந்திருப்பதாய்
ஒரு நப்பாசை கற்பனை
என்னிடம் தின்று தீர்த்து எனக்கு தராமல் மறைத்து வைத்த காதலை
நீ பத்திரப்படுத்தி
ஒரு பூங்கொத்தில் மறைத்து வைத்து
எனக்காய் நீ காத்திருப்பதாய்
நிறைய கனவுகள்
உன்னை இறுக அணைத்தபடி
இவ்வுலகம் மறந்து உறங்கிக் போவதாய் ஒரு மயக்க நிலை உணர்வு
இன்னமும் நீ என்னோடே காதலுடன் பயணிப்பதாய் நம்பிக்கொண்டிருப்பது
என் சுயநலம் தான்
வேறென்ன செய்வது
இந்த வெறுமையை போக்கி
எல்லா களைப்புடனும்
ஓடிவந்து
இளைப்பாறி தூங்கி
உயிர்த்தெழ
பிடித்த ஒரு மனது வேண்டி தவமிருக்கிறதே
இந்த மனது..
அன்பே !
ஏதுமில்லை என்றாலும் மௌனித்திரு
மறுதலிப்பதை விட
எனக்கு ஆறுதலாய் இருக்கிறது இந்த நம்பிக்கைகள்....
Comments