திரை இசைத்திலகம்
முதல் முதலாக இசையையும் நடனத்தையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டு வெற்றி அடைந்த படம் ஒன்று உண்டு என்றால் அது "தில்லானா மோகனாம்பாள்" தான்.
நாதஸ்வரத்தை மதுரை சேதுராமன் - பொன்னுசாமி குழுவினர் வாசித்தனர்.
இசையில் தனது முழுத் திறமையையும் அனாயாசமாக கே.வி. மகாதேவன் வெளிப்படுத்திய படங்களில் இதுவும் ஒன்று.
ஆரம்பத்தில் இடம்பெறும் 'தியாகராஜ கீர்த்தனை"யான "நகுமோமு" என்ற ஆபேரி ராகக் கீர்த்தனையை நாதஸ்வரத்தில் இடம் பெறச் செய்தார்.
கீர்த்தனையை பல்லவியில் தொடங்காமல் "நகராஜ.." என்ற அனுபல்லவியில் ஆரம்பித்து "ககராஜு நியனாதி" என்ற சரணத்தை தொடர்ந்து இறுதியில் "நகுமோமு" என்று பல்லவியில் கீர்த்தனையை முடித்து ஸ்வரங்கள் வாசித்து.. நிறைவடையும் போது நமது மனமும் நிறைந்துவிடுகிறது.
பாடல்கள் என்று எடுத்துக்கொண்டால் மூன்றே மூன்று பாடல்கள் தான்.
மூன்று பாடல்களையுமே பெண் பாடகியர் தான் பாடி இருந்தனர். பி.சுசீலாவும், எல்.ஆர். ஈஸ்வரியும்.
"மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன" - ஷண்முகப்பிரியா ராகத்தில் கே.வி.மகாதேவன் இந்தப் பாடலை அமைத்திருக்கும் விதம் - இணைப்பிசையில் வாத்தியங்கள் எதையுமே பயன்படுத்தாமல் வெறும் சொற்கட்டுக் கோர்வைகளை மட்டுமே கையாண்டு இணைப்பிசையை அமைத்திருக்கும் லாவகம் அவரால் மட்டுமே முடியும்.
இதே போல "பாண்டியன் நானிருக்க" பாடலைக் கவனித்தோமென்றால் இதிலும் இணைப்பிசையே இருக்காது. ஹார்மோனியம் தபேலா ஆகியவற்றோடு சரணங்களுக்கு இடையே இடைவெளியே இல்லாமல் பாடல் முழுவதும் ஒரே மூச்சிலேயே அமைந்திருப்பது வேறு எந்த இசையமைப்பாளரும் கற்பனையே செய்துபார்த்திராத அமைப்பு.
அடுத்து அன்றும் இன்றும் என்றும் அழியாத பாடல் "நலந்தானா". எல்.ஆர்.ஈஸ்வரி - எஸ்.சி. கிருஷ்ணன் ஆகிய இருவரையும் சிறப்பாகப் பாடவைத்திருக்கிறார் கே.வி.மகாதேவன்.
கதைப்படி நாதஸ்வர மேதையான சிக்கில் சண்முகசுந்தரம் கத்திக் குத்துப்பட்டு குணமாகி வரும் நிலையில் அவன் தில்லானா வாசிக்க மோகனா ஆட சென்னை தமிழ்ச் சங்கத்தில் ஒரு நிகழ்ச்சி. வாசிக்கும் போது கையில் இருக்கும் கட்டில் இருந்து ரத்தம் வடிய துடிக்கும் மோகனா "நலம்தானா நலம்தானா உடலும் உள்ளமும் நலம்தானா" என்று பாடி ஆடுகிறாள். அந்தப் பாடலுக்கேற்றபடி சண்முகம் நாதஸ்வரம் வாசிக்கிறான். கவியரசு கண்ணதாசன் காட்சிக்கு ஏற்ப புணைந்திருக்கும் இந்தப் பாடலுக்கு பின்னே ஒரு உண்மை சம்பவமே மறைந்திருக்கிறது.
கூடியிருக்கும் எவருக்கும் தங்கள் காதல் தெரியக் கூடாது. அதே சமயம் தனது நலத்தையும் அவன் சொல்லவேண்டும்.
" நலம் பெறவேண்டும் நீ என்று நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு.
இலைமறை கைபோல் பொருள் கொண்டு எவரும் அறியாமல் சொல் இன்று."
காலத்தால் அழிக்க முடியாத இந்த காவிய வரிகளை மோகனாவுக்கும், சன்முகசுந்தரத்துக்குமா கவியரசர் எழுதினார்?
இல்லவே இல்லை. அப்போது அறிஞர் அண்ணா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை முடித்துக்கொண்டு திரும்பி இருந்த நேரம்.
அரசியல் ரீதியாக அப்போது அறிஞர் அண்ணாவின் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மாற்று முகாமான பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் காங்கிரஸ் பேரியக்கத்தில் இருந்தார் கண்ணதாசன். என்னதான் மாற்றுக் கட்சியில் இருந்தாலும் ஒருகாலத்தில் இருவரும் இணைபிரியாத நண்பர்களாக இருந்தவர்கள் அல்லவா? ஆகவே அறிஞர் அண்ணா அவர்களை நலம் விசாரிக்கும் விதமாக இந்த "நலந்தானா" பாடலை கவியரசர் அமைத்திருக்கிறார்.
இந்தப் பாடலை "நீலமணி" என்ற ராகத்தில் அமைத்திருக்கிறார் கே.வி.மகாதேவன். சிவரஞ்சனி ராகத்தை நினைவு படுத்தும் விதமாக அமைந்த ராகம் இது.
இதிலும் சரணங்களுக்கிடையே வரும் இணைப்பிசைக்கு ஜதிகளை (சொற்கட்டுக் கோர்வைகளைப்) பயன்படுத்தி இருக்கிறார் கே.வி.மகாதேவன். நாதஸ்வரம், தவில், இசையரசி பி.சுசீலா என்ற மூவரின் இணைவில் ஒரு காலத்தை வென்று நிற்கும் பாடல்.
மற்றபடி நாதஸ்வரத்தை நம் காதுகளுக்குள் எந்த அளவுக்கு நாதவெள்ளத்தை பாய்ச்ச முடியுமோ அந்த அளவுக்கு பாய்ச்ச வைத்திருக்கிறார் கே.வி.மகாதேவன்.
மேற்கத்திய இசையோடு நாதஸ்வரம் போட்டி போடும் காட்சி.. ட்ரம்ஸ் ஓய்ந்த அடுத்த நொடியில் துவங்கும் தவிலின் தாளக்கட்டு ஆரம்பத்திலேயே நம்மை ஒருகணம் மெய்சிலிர்க்க வைக்கிறது.
மற்ற இசைக் கச்சேரிகளுக்கும் நாதஸ்வர இசைக் கச்சேரிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு.
மற்ற இசைக் கச்சேரிகளில் பாடகர்தான் பிரதானம். அவரது குரலோடுதான் கச்சேரியே தொடங்கும். வீணை, வயலின், புல்லாங்குழல் என்று எந்தக் கச்சேரியானாலும் அந்த கருவியே முன்னிலை வகிக்கும்.
ஆனால் நாதஸ்வரக் கச்சேரி அப்படி அல்ல. அது தவிலின் ஆளுகையோடுதான் தொடங்கும். தாளமே அதில் பிரதானம். தவிலின் தனி ஓய்ந்த பிறகுதான் நாதஸ்வர இசையே தொடங்கும்.
இந்த நுணுக்கத்தை தில்லானா மோகனாம்பாள் படத்தில் இம்மி அளவு கூட பிசகாமல் கையாண்டு நாதஸ்வர இசையை அமைத்திருக்கிறார் என்றால் கே.வி.மகாதேவனுக்கு அந்த இசையின் மீது இருக்கும் பக்தியும், ஈடுபாடும் வியக்க வைக்கிறது.
"ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே" - ஏற்கெனவே "பாவை விளக்கு" படத்தில் மருதகாசி எழுதி சி.எஸ். ஜெயராமனின் குரலில் ஒலித்த இனிமையான பாடல். அந்தப் பாடலை அப்படியே நாதஸ்வரத்தில் பயன்படுத்தி அதற்கு ஒரு கச்சேரி அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள் என்றால் ஏ.பி.நாகராஜனையும், கே.வி.மகாதேவனையும் நினைத்து பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.
"இந்த இசைக் கருவியில் உங்கள் இசையை மட்டும் தான் வாசிக்க முடியுமா? எங்களது மேற்கத்திய சங்கீதத்தை இதில் கொண்டுவர முடியுமா?" என்ற ஆங்கிலேயரின் கேள்விக்கு விடையாக மேற்கத்திய நோட்ஸ் .. "காயகசிகாமணி" ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் இயற்றி மதுரை மணி அய்யர் தனது மேடைக்கச்சேரிகள் தோறும் பிரபலப் படுத்திய உருப்படியை அப்படியே நாதஸ்வரத்தில் கொண்டு வந்த சிறப்பை எப்படிப் பாராட்டுவது என்றே புரியாமல் திகைப்புத்தான் வருகிறது. நலந்தானா பாடலுக்கு முன்னால் வரும் நாதஸ்வர "பிட்"டையும் கவனம் செய்தவர் ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் தான்.
திருவாரூர் தியாகேசன் சன்னதியில் போட்டி. சண்முகசுந்தரம் தில்லானா வாசிக்க மோகனாம்பாள் அதற்கேற்ப ஆடவேண்டும். வெற்றி யாருக்கு என்று கணிக்க முடியாத அளவுக்கு நாதஸ்வரம் இருந்தால் தானே காட்சி சிறக்கும்?
அந்த தில்லானா. "காபி" ராகத்தில் எப்படித்தான் இப்படி ஒரு விறுவிறுப்பான தில்லானாவை கே.வி.மகாதேவனால் கற்பனை செய்ய முடிந்ததோ.? சேதுராமன் பொன்னுசாமி வாசித்ததில் சிறப்பான சங்கதிகளை மட்டும் தேர்ந்தெடுத்து இணைத்து அமைப்பது என்றால் அது எவ்வளவு சிரமமான காரியம்
உண்மையிலேயே கலைவாணியின் பூரண அருள் இருந்தாலொழிய இப்படி எல்லாம் இசையமைக்க முடியாது.
சின்ன சின்ன காட்சிகளில் வரும் சின்ன "பிட்"டுக்காகக் கூட மகாதேவன் எவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார் என்பதற்கு உதாரணம்.
ஜில் ஜில் ரமாமணியின் நாடகக் கொட்டகையில் சண்முகம் வாசிக்கும் அந்த "சிந்துபைரவி" ஆலாபனை.
படம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. வசூலையும் விருதுகளையும் வாரிக்குவித்தது.
பார்த்தவர்களும், பத்திரிகைகளும் பாராட்டு மழையால் படத்தில் இடம்பெற்ற அனைத்துக் கலைஞர்களையும் திணற அடித்தன.
ஆனந்த விகடன் பத்திரிகை பதினோரு பக்கங்களுக்கு கருத்தரங்கம் நடத்தி படத்தை விமர்சனம் செய்தது. முன்னணி இசை மேதைகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், நட்சத்திரங்கள் என்று அனைவரும் பங்கு கொண்டு படத்தை விமர்சித்தனர். இதுபோல வேறு எந்தப் படத்துக்கும் விகடன் விமர்சனம் செய்ததில்லை.
"நடனமும் இசையும் கதையின் முக்கியபலமாக அழகாக கச்சிதமாக பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. வெறும் விளம்பரத்துக்காக செய்யப்படாமல் ஆத்மார்த்தமாக கையாளப்பட்டிருக்கின்றன" என்றார் பிரபல நாட்டியக் கலைஞர் தனஞ்சயன்.
"கண்களுக்கும் காதுகளுக்கும் ஒரு விருந்து" என்று பிரிட்டனில் இருந்து வெளியாகும் "டெய்லி மெய்ல்" நாளிதழ் படத்தை பாராட்டியது.
பார்த்தவர்களும், பத்திரிகைகளும் பாராட்டு மழையால் படத்தில் இடம்பெற்ற அனைத்துக் கலைஞர்களையும் திணற அடித்தன.
ஆனந்த விகடன் பத்திரிகை பதினோரு பக்கங்களுக்கு கருத்தரங்கம் நடத்தி படத்தை விமர்சனம் செய்தது. முன்னணி இசை மேதைகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், நட்சத்திரங்கள் என்று அனைவரும் பங்கு கொண்டு படத்தை விமர்சித்தனர். இதுபோல வேறு எந்தப் படத்துக்கும் விகடன் விமர்சனம் செய்ததில்லை.
"நடனமும் இசையும் கதையின் முக்கியபலமாக அழகாக கச்சிதமாக பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. வெறும் விளம்பரத்துக்காக செய்யப்படாமல் ஆத்மார்த்தமாக கையாளப்பட்டிருக்கின்றன" என்றார் பிரபல நாட்டியக் கலைஞர் தனஞ்சயன்.
"தில்லானா" நடனக் காட்சியில் மெய் மறக்காதவர்கள் ஒருவர் கூட இருக்க முடியாது" என்று பாராட்டியது தினத் தந்தி.
"கண்களுக்கும் காதுகளுக்கும் ஒரு விருந்து" என்று பிரிட்டனில் இருந்து வெளியாகும் "டெய்லி மெய்ல்" நாளிதழ் படத்தை பாராட்டியது.
தமிழில் சிறந்த ப்ராந்தியமொழிப் படமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டு ஜனாதிபதியின் வெள்ளிப் பத்தக்கத்தைப் பெற்றது. படத்துக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய கே.எஸ். பிரசாத் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதைப் பெற்றார்.
இப்படி பாராட்டுக்கு மேல் பாராட்டு என்று அள்ளிக் குவிக்க பாடல்களும் இசையும் மட்டுமே காரணம் இல்லை. நடிகர் திலகமும், டி.எஸ். பாலையாவும் அப்படியே தத்ரூபமாக நாதஸ்வர வித்வானையும், தவில் மேதையையும் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தினர்.
சவடால் வைத்தியாக வில்லன் கதாபாத்திரத்தில் நாகேஷ். காதலர்களுக்கு உதவும் சதிர் நடனமாடும் ஜில்ஜில் ரமாமணியாக மனோரமா என்று ஒவ்வொருவரும் அப்படியே கதாபாத்திரங்களாகவே மாறிவிட்டிருந்தனர்.
இவற்றுக்கெல்லாம் சிகரமாக அமெரிக்காவில் "தமிழ்க் கலை கலாச்சாரத்தைப் பற்றி" ஆய்வு செய்யும் மாணவர்களுக்கு ஒரு பாடமாக இந்தப் படம் இடம் பெற்றது என்பது ஒவ்வொரு தமிழருக்கும் பெருமை தரக்கூடிய ஒரு விஷயம்.
உண்மையிலேயே இப்படி எல்லாம் படங்கள் வெளிவந்த காலம் திரையுலகின் பொற்காலம்தான்.
"தில்லானா மோகனாம்பாள்" வெளிவந்த அதே வருடம் கே.வி. மகாதேவனின் இசையில் வெளிவந்த மற்ற படங்கள் எதுவுமே சரியாகப் போகவில்லை.
ஜெயசங்கர், தேவிகா நடித்து வெளிவந்த "தெய்வீக உறவு" என்ற படத்தில் மகாதேவனின் இசையில் "அழகிய தென்னஞ்சோலை" என்ற பாடல் மட்டும் பிரபலமானது.
தேவர் - எம்.ஜி.ஆர்.- மகாதேவனின் கூட்டணியில் வெளிவந்த "தேர்த்திருவிழா" சொல்லிக்கொள்ளும் வண்ணம் அமையவில்லை.
அடுத்து வந்த "காதல் வாகனம்" படமோ - வந்த சுவடே தெரியாமல் மறைந்துபோனது. அந்தச் சமயத்தில் மக்கள் திலகம் தனது எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் பானரில் சொந்தப் படத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்ததால் தேவர் பிலிம்சின் இந்தப் படத்தில் தனிக் கவனம் செலுத்தமுடியாமல் போனது.
அதேநேரத்தில் கே.வி.மகாதேவனின் இசையின் மீது தனிப் பிடிமானம் கொண்டிருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மிகுந்த பொருட்செலவில் மிகப் பிரமாண்டமாகத் தான் தயாரித்துவந்த அந்தப் படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பை கே.வி.மகாதேவனுக்கே கொடுத்தார்.
தனக்குக் கொடுக்கப்பட்ட மகத்தான வாய்ப்பைக் கனகச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டார் கே.வி.மகாதேவன்.
எம்.ஜி.ஆரின் அந்தப் படத்துக்கு மகாதேவன் அமைத்த இசையின் மூலம் ஒரு இளம் பாடகர் ஒருவர் தமிழுக்கு அறிமுகமாகி அடுத்த கால் நூற்றாண்டு காலம் ஈடு இணை இல்லாத பாடகராக தான் மாறுவோம் என்று சத்தியமாக நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்.
1969ஆம் ஆண்டு மே தினத்தன்று வெளியான மக்கள் திலகத்தின் அந்த மகத்தான சாதனைப் படத்தின் மாபெரும் வெற்றிக்கு கே.வி.மகாதேவனின் இசையும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது.
அந்தப் படம் தான் : 'அடிமைப் பெண்"
இணையத்தில் இருந்து எடுத்தது
Comments