சந்திரபாபு சரிந்த கதை

 சந்திரபாபு சரிந்த கதை : அன்றைய உச்ச நட்சத்திரத்தால் ஒடிந்து போனவர்! அந்த நட்சத்திரம் யார் தெரியுமா..?




சந்திரபாபு………. தமிழ் சினிமாவை நேசிக்கும் எவரும் இந்த மகாகலைஞனை மறக்கவே முடியாது. தமிழ் சினிமா நடிகர்களில் முதன்முதலாக ஒரு லட்சம் வாங்கியவர் சந்திரபாபுதான் (இந்தியாவிலேயே படத்துக்கு ஒரு லட்சம் வாங்கிய முதல் சினிமா நட்சத்திரம் கே.பி.சுந்தராம்பாள்)
சிவாஜியும், எம்ஜிஆருமே ஹீரோவாக நடித்து சில ஆயிரங்களை ஊதியமாகப் பெற்றபோது, நகைச்சுவை நடிகராக நடிப்பதற்கு ஒரு லட்சம் ஊதியம் வாங்கியவர் சந்திரபாபு. மிக அற்புமாக, அழகாக, உயர்தர ஆங்கிலம் பேசுவார் பாபு. ஆனால், அதிசயம் என்னவென்றால் அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்பதுதான்.
பாபுவிற்கு இன்னொரு பழக்கம். இன்று போல் அல்ல.. பெரிய நடிகர்களை மிக மரியாதையாக நடத்துவார்கள். ஆனால், அந்த காலத்தில் பெரிய நடிகர்களையே எல்லோர் முன்னிலையிலும் பெயர் சொல்லித்தான் அழைப்பார் பாபு.
சிவாஜியும், அவரும் சம வயதுடையவர்கள். அதனால் “கணேசா” என்றுதான் கூப்பிடுவார். தன்னை விட பத்து வயது மூத்தவரான எம்ஜிஆரையும் “ராமச்சந்திரன்” என்று கூப்பிடும் வழக்கம் பாபுவிடம் இருந்தது. கண்ணதாசனை “கவிஞா” என்று அழைப்பார்.
சபாஷ் மீனா படமும், சகோதரி படமும் பாபுவை வெகு உயரத்தில் கொண்டு போய் விட்டன. பணம் நிறையச் சேர்ந்தது பாபுவிற்கு.
அப்போது அடையாறில் பல கிரவுண்டுகளை வாங்கிப் போட்டு, அங்கே அரண்மனை போல ஒரு வீடு கட்ட ஆரம்பித்தார். பெரிய கார் ஒன்று வீட்டுக்குள்ளேயே நுழைந்து நேராக மாடிக்குச் சென்று அப்படியே கீழிறங்கி வருவது போன்ற பிரம்மாண்டமான அரண்மனை போன்ற வீட்டைக் கட்டத் தொடங்கினார். இது பத்திரிகைகளில் பரபரப்பான செய்தியாக புகைப்படங்களோடு வந்ததைப் பார்த்த அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.
பொதுமக்களிடையேயும் இதே பேச்சுதான் “சந்திரபாபு கட்டிகிட்டிருக்கிற வீட்டுலே கார் உள்ளேயே நுழைஞ்சு நேரா மாடிக்குப் போயி திரும்பி வருமாம்” என்று.
அப்போதுதான் அவருக்குக் கெட்ட நேரம் தொடங்கியது. பாபுவின் நண்பர்கள் சிலர், “உனக்கு உள்ள அபூர்வத் திறமைக்கு நீ நடிகனாகவே இருப்பது சரியில்லை பாபு. நாம் எல்லோரும் சேர்ந்து ஒரு சொந்தப் படம் எடுப்போம். நீயே டைரக்ட் பண்ணு ” என்று உசுப்பி விட்டனர்.
அப்போதைய டாப் ஸ்டாரான எம்ஜியாரை வைத்து படம் தயாரித்து பாபு இயக்குவதாக முடிவெடுக்கப்பட்டது.
படத்திற்கு “மாடி வீட்டு ஏழை” என்று பெயர். (இது 1982ம் ஆண்டு வெளிவந்த மாடி வீட்டு ஏழை படம் அல்ல).
நேரே பாபுவும், படத்தின் பங்குதாரர்களான அவரின் நண்பர்களும் எம்ஜிஆரைப் பார்க்கச் சென்றார்கள். “வாங்க பாபு” என்று கட்டியணைத்து வரவேற்றார் எம்ஜிஆர். எடுத்த எடுப்பிலேயே “ராமச்சந்திரன்! நாங்க ஒரு படம் தயாரிக்கப் போறோம். நான்தான் டைரக்ட் பண்ணப் போறேன். நீங்கதான் ஹீரோவா நடிக்கணும்” என்று விஷயத்தைச் சொல்லி விட்டார் பாபு.
எம்ஜிஆர் முகம் மலர “அப்படியா பாபு.. ரொம்ப சந்தோஷம். உங்களுக்கு இருக்கற திறமைக்கு நீங்க தாராளமா டைரக்ட் பண்ணலாம். நான் நடிக்கறேன்” என்று ஒப்புதல் கொடுத்து விட்டார். உடனே ஃபைனான்சியர்கள் கடன் கொடுத்து விட்டார்கள். அதிலிருந்து பல ஆயிரங்களை எடுத்து எம்ஜிஆரிடம் அட்வான்சாகக் கொடுத்தார் பாபு.
எம்ஜிஆர் ஹீரோ, சாவித்திரி ஹீரோயின் படம் பூஜை போடப்பட்டது. இரண்டொரு ஷாட்கள் எடுக்கப்பட்டு, ஃபோட்டோ ஷூட்டும் நடந்தது. எல்லாம் நல்லபடியாக முடிந்து கார் ஏறப்போன எம்ஜிஆரிடம் ஓடிச் சென்ற பாபு, “ராமச்சந்திரன்! சீக்கிரம் படத்தை முடிச்சாகணும், நீங்க எப்போ கால்ஷீட் தர்றீங்கன்னு ஒரு வார்த்தை கூடச் சொல்லலியே” என்று தெரிவிக்க..
எம்ஜிஆரோ சிரித்த முகத்தோடு “கால்ஷீட் எல்லாம் என் அண்ணன்கிட்ட கேட்டுக்குங்க பாபு” என்று கூறி காரில் ஏறிச் சென்று விட்டார்.
மறுநாள் தன் நண்பர்களோடு எம்ஜிஆரின் அலுவலகத்திற்குச் சென்றார் பாபு. அங்கே இருந்த எம்ஜிஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி, பாபுவைப் பார்த்ததும் “வாங்க பாபு! படம்ல்லாம் டைரக்ட் பண்றீங்களாமே. தம்பி சொன்னான்.
வாழ்த்துக்கள்
” என்று சொல்லி வரவேற்றார்.
“ஆமாம் மிஸ்டர் சக்ரபாணி! படத்தை டைரக்ட் பண்றதோட மட்டுமில்லாம, நண்பர்களோடு படத்தைத் தயாரிக்கவும் செய்கிறேன். அதெல்லாம் இருக்கட்டும் மிஸ்டர் சக்ரபாணி! எங்களுக்கு ராமசந்திரனுடைய கால்ஷீட் பல்க்கா வேணும். ராமசந்திரனைக் கேட்டா, அவரு உங்களைக் கேக்கச் சொன்னாரு” என்று பாபு டைரக்டாக தான் வந்த நோக்கத்தைச் சொல்லிவிட்டார்.
“இதிலே பாருங்க பாபு, தம்பிதான் இன்னிக்கு மார்க்கெட்டுல நெம்பர் ஒன்! தம்பி நெறைய படங்கள்ல நடிக்கிறாரு. அதனால கால்ஷீட்டை பல்க்கா தரமுடியாது. அப்பப்போ அட்ஜஸ்ட் பண்ணித்தான் தரமுடியும்” என்று சக்ரபாணி பதிலுரைக்க..
“அட்ஜஸ்ட் பண்ணித் தர்றதுன்னா எப்படி தருவீங்க” என்று பாபு கேட்க..
“ஒவ்வொரு மாசமும் ஆறு ஆறு நாள் கொடுக்கலாம்” என்று சக்ரபாணி சொன்னவுடன் , பாபு வெள்ளந்தியாக
“ஓகே மிஸ்டர் சக்ரபாணி, எந்தெந்த மாசம் எந்தெந்த நாட்களில் கால்ஷீட் தர்றீங்கன்னு தேதி வாரியாக உங்க கைப்பட எழுதிக் குடுத்துடுங்க. அந்த சீட்டை எங்க ஃபைனான்ஷியர்கள் கிட்டயும், டிஸ்ட்ரிபியூட்டர்கள் கிட்டயும் காட்டி அவங்களை திருப்தி பண்ணிரலாம்,” என்று சொன்னதுதான் தாமதம். சக்ரபாணிக்கு வெடித்துக் கிளம்பியது கோபம்.
“என்னை என்ன சும்பன்னு நெனைச்சியா, பெரிசா எளுதிக் கேட்குறே” என்று பொரிந்து தள்ளிவிட்டார்.
ஆரம்பித்தது தகராறு, ஆவேசம் பொங்க..ஆக்ரோஷம் பொங்க.. ஆங்காரம் பொங்க… ஆத்திரம் கொப்பளிக்க.. வார்த்தைகள், வார்த்தைகள் தீப்பிடித்து எரிந்தன.
ஒரு கட்டத்தில் பாபு அங்கிருந்த நாற்காலியை எடுத்து சக்ரபாணியை அடிக்கவே போய்விட்டார். நண்பர்களான பங்குதாரர்கள் இருவரையும் விலக்கி விட்டு, சந்திரபாபுவை வெளியே கூட்டிச் சென்று விட்டார்கள்.
அவ்வளவுதான்! அந்தப் படத்தைப் பற்றி பிறகு ஒரு தகவலும் இல்லை. கால்ஷீட்டாவது.. களிமண்ணாவது ?
ஆனால், ஃபைனான்ஸ் கொடுத்த பரமாத்மாக்கள் சும்மா இருப்பார்களா? சினிமா உலக வட்டி பற்றித்தான் உங்களுக்குத் தெரியுமே. பாபுவிற்கு அந்தத் தொல்லை வேறு. இதற்கிடையில், சந்திரபாபு மணவாழ்க்கையிலும் தோற்றுப் போனார். அந்த விரக்தி வேறு.
பங்குதாரர்கள் என்று சொல்லிக் கொண்டார்களே பாபுவின் நண்பர்கள், அவர்கள் ஒரு பைசா போடாமல் ஓசிப்படம் எடுக்க வந்தவர்கள், ஒரு வார்த்தை சொல்லாமல் ஓடிப் போனார்கள். அந்த வருத்தம் வேறு. கட்டிக் கொண்டிருந்த கட்டழகு மாளிகை பாதியில் நிற்கிறது அந்த துக்கம் வேறு.
பாபு ஏற்கனவே குடிப்பழக்கம் உள்ளவர்தான். ஆனால் இத்தனை சோகங்களை.. இத்தனை அழுத்தங்களை.. இத்தனை இடிகளைத் தாங்க முடியாமல் குடித்தார்.
துக்கத்தை மறக்கக் குடித்தார். துயரத்தை விலக்கக் குடித்தார். தொலைந்ததை நினைத்துக் குடித்தார். குடியில் நனைந்தார் பாபு. குடியில் மூழ்கினார் பாபு குடித்தே கிடந்தார் பாபு!
பட வாய்ப்புகள் பறந்து போயின. மார்க்கெட் நிலவரம் மாறிப் போனது. ஒரு வாய்ப்பு கூட இன்றி ஒடுங்கினார் பாபு!
கடன் கொடுத்தோர் கழுத்தை நெறித்ததால், கட்டிக் கொண்டிருந்த கனவு வீட்டை விற்கத் தீர்மானித்தார்.
“பாபுவிற்கு பயங்கர பணத்தேவை. அதனால் கொடுத்ததை வாங்கிக் கொள்வார்” என்று வீட்டை விலை பேசியவர்கள் மிகக் குறைந்த விலைக்குக் கேட்டனர். “ராசியில்லாத வீடு” என்று ரகசியப் பெயரைச் சூட்டினர்.
எழும்பி நின்ற எழில் மாளிகையை எலி விலைக்கும், எறும்பு விலைக்கும் கேட்டனர். ஏதோ விலைக்கு அதை பாபு விற்றார். வட்டிக் கடனை அடைக்க எல்லாவற்றையும் விற்று வறுமையில் வாடத் தொடங்கினார் பாபு!
இருந்த இருப்பு என்ன! இங்கிலீஷ் தோரணை என்ன! எம்ஜிஆர், சிவாஜியையே அலறவைத்த எடுப்பான பந்தா என்ன – இயற்கையின் வரமாய் அமைந்த நடிப்புத் திறமை என்ன..! எல்லாம் போச்சு! பளபளப்பாக வாழ்ந்து பரிதாபமாகச் செத்த பாபுவின் வாழ்வே படக் கலைஞர்களுக்கு பாடமாய் அமைந்து விட்டது.
இணையத்தில் இருந்து எடுத்தது

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி