அந்த 7 நாட்கள்' படத்தின் கிளைமாக்ஸ்
அந்த 7 நாட்கள்' படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை மட்டும் நீங்கள் இயக்கித் தாருங்கள் என்று குருநாதரிடம் கேட்டிருக்கிறார் பாக்யராஜ். அதற்கு பாரதிராஜா தந்த பதில் மிகவும் கண்ணியமானது. “என்னய்யா... இத்தனை அருமையா ஸ்கீரின்ப்ளே பண்ணியிருக்கே... இத்தனை சீன் எடுத்திருக்கே... இதையா உன்னால செய்ய முடியாது. இப்ப நான் வந்தா, ‘ஏதோ பாரதிராஜா உள்ளே வந்ததால்தான் இந்தப் படம் வெற்றியடைந்தது’ மாதிரி சிலர் பேச ஆரம்பிச்சுடுவாங்க. இதற்கான முழு கிரெடிட்டும் உனக்குத்தான் வரணும். உன்னால முடியும். போய் எடு" என்று மறுத்து, தைரியம்கொடுத்து அனுப்பியிருக்கிறார்.
படத்தில் வருவதைப்போன்ற அற்புதமான குரு – சீடன் உறவு இது.
‘பாலக்காட்டு மாதவனுக்கு’ அவருடைய சங்கீதத்தை விட்டால் உலக நடப்புகள் எதுவுமே அவ்வளவாகத் தெரியாது. அத்தனை வெள்ளந்தியானவர். இந்தப் படத்தின் இசையமைப்பாளரான எம்.எஸ்.விஸ்வநாதனையும் இன்னொரு ‘பாலக்காட்டு மாதவன்’ எனலாம். இசையைத் தவிர வேறெதுவும் தெரிந்து வைத்திருக்காத விஸ்வநாதனை, கண்ணதாசன் பல முறை கிண்டலடித்திருக்கும் ரகளையான சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.
எண்பதுகளில், இளையராஜா தவிர்க்கவே முடியாத பிரமாண்டமாக உருவாகிவந்தாலும், ஓர் இயக்குநராக பாக்யராஜ் இளையராஜாவோடு வேறு பல இசையமைப்பாளர்களையும் பயன்படுத்திக் கொண்டுள்ளார். பாக்யராஜின் நெருங்கிய தோழர் கங்கை அமரன், சங்கர் கணேஷ் ஆகியோரும் இவரின் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்கள். ‘முந்தானை முடிச்சு’ படத்தின் பாடல் உருவாக்கத்தின்போது, இளையராஜாவோடு ஏற்பட்ட சிறு மனஸ்தாபம், பிறகு தானே இசையமைப்பாளர் ஆக பாக்யராஜ் முடிவுசெய்த விநோதங்களும் நடந்தேறின.
‘அந்த ஏழு நாட்களில்’ உள்ள ஐந்து பாடல்களுமே இனிமையானவை. கதைப்படி நாயகன் மலையாளி என்பதால், அந்த வாசனையோடு கூடிய ‘சப்த ஸ்வரதேவி உணரு’ என்று மலையாள வரிகளில் தொடங்கும் பாடல், பிறகு ‘கவிதை அரங்கேறும் நேரம்’ என்று தமிழ் வரிகளுக்கு மாறுவது அழகு.
‘எண்ணி இருந்தது ஈடேற’ என்கிற பாடலை மலேசியா வாசுதேவன் + வாணி ஜெயராம் கூட்டணி அருமையாகப் பாடியிருக்க, இதர பாடல்களை ஜெயச்சந்திரன் + ஜானகி கூட்டணி பாடியிருந்தது. ஜேசுதாஸை நினைவுபடுத்தும் ஜெயச்சந்திரனின்
அருமையான
குரல், மலையாள வாசனையோடு படத்தின் சூழலுக்குப் பொருத்தமாக இருந்தது.படத்தின் இறுதியில், அம்பிகாவும் பாக்யராஜும் ஒன்று சேர்வார்களா இல்லையா என்கிற பதைபதைப்பு பார்வையாளர்களுக்கு ஏற்படும்படி திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், ‘தாலி’ சென்டிமென்ட்டை வைத்து தமிழ்ப் பண்பாட்டைக் காப்பாற்றிவிடுவார் பாக்யராஜ். ஒருவகையில் இது ‘பிற்போக்குத்தனமான’ கிளைமாக்ஸ்தான் என்றாலும் வெகுஜன நோக்கில் புத்திசாலித்தனமானது; பாதுகாப்பானது. வெகுஜன ரசனையைத் துல்லியமாக அறிந்திருக்கும் பாக்யராஜ் இந்த முடிவை நோக்கி நடந்ததில் ஆச்சர்யம் எதுவுமில்லை.
26 அக்டோபர் 1981 அன்று ‘அந்த ஏழு நாட்கள்’ வெளியாகியது. இதே நாளன்று குருநாதர் பாரதிராஜாவின் இயக்கத்தில் கமல் நடிக்க ‘டிக்டிக்டிக்’, ரஜினியின் ‘ராணுவவீரன்’ போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியானாலும் அவற்றோடு போட்டியிட்டு பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது இந்தத் திரைப்படம்.
இன்று பார்த்தாலும் துளிகூட சுவாரஸ்யமும் விறுவிறுப்பும் குறையாமல் இந்தத் திரைப்படம் அமைந்திருப்பதற்கு பிரதான காரணமாக பாக்யராஜின் அபாரமான திரைக்கதை ஞானத்தைத்தான் சொல்ல முடியும்.
நன்றி: விகடன்
Comments