நெகிழ வைத்த `சொல்வனம்' கவிதை... எழுதியவருக்கு 10,000 ரூபாய் பரிசளித்துப் பாராட்டிய வைரமுத்து!
நெகிழ வைத்த `சொல்வனம்' கவிதை... எழுதியவருக்கு 10,000 ரூபாய் பரிசளித்துப் பாராட்டிய வைரமுத்து!
வாசிப்பவர்களிடம் ஏற்படுத்துகிற விளைவுதான் ஒரு படைப்புக்கான அளவுகோல். கட்டுரையில் வருகிற ஒரு வரி, கவிதையில் முடிகிற ஒரு வார்த்தை, கதையில் வருகிற ஒரு பத்தி அப்படியே நினைவில் தங்கி வழிநெடுக வந்துகொண்டேயிருக்கும். அதை எழுதியவரை ஒரு கணம் அழைத்து பாராட்டிவிடத் தோன்றும். ஆனந்த விகடனில் இடம்பெற்ற அப்படியானதொரு படைப்பை வாசித்த ஓர் ஆளுமை, அதையெழுதிய படைப்பாளியை உச்சிமோந்து பாராட்டிய ஓர் அபூர்வ தருணம் இது.
13.10.2021 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில், 'சொல்வனம்' பகுதியில் திருப்பூர் மாவட்டம் சின்னப்பாப்பனூத்து கிராமத்தைச் சேர்ந்த சௌவி எழுதிய 'ஆட்டத்தின் முடிவில்' என்ற கவிதை இடம் பெற்றிருந்தது. 07.10.2021 வியாழன் காலை இதழ் வெளிவந்ததும், அந்தக் கவிதையை வாசித்த கவிஞர் வைரமுத்து, அவருடைய பேஸ்புக் பக்கத்தில்...
"இன்று ஆனந்த விகடன் சொல்வனம் பகுதியில் 'ஆட்டத்தின் முடிவில்' என்றோர் அழகிய கவிதை, தேநீர்க் கோப்பை கழுவும் சிறுவர்களின் கழுவப்படாத கண்ணீர் கவிதையாகிறது. எழுதிய 'செளவி'க்கு ரூ.10,000 பரிசளித்துப் பாராட்டுகிறேன். இளங்கவிகள் வெல்க!"
என்று பதிவிட்டுப் பாராட்டியிருந்தார்.
அன்று மதியமே ஆனந்த விகடன் அலுவலகத்துக்கு வந்த கவிஞர் வைரமுத்துவின் உதவியாளர் பாஸ்கர், ஆனந்த விகடன் ஆசிரியருக்கு கவிஞர் எழுதிய கடிதத்தையும் சௌவிக்கான 10,000 ரூபாய் காசோலையையும் ஒப்படைத்தார்.
தொடர்ந்து ஆனந்த விகடனிடம் பேசிய கவிஞர் வைரமுத்து சௌவியின் படைப்பாற்றலை பாராட்டினார்.
"காணாத மக்களுக்கு, காணாத வாழ்க்கைக்கு ஒளியூட்டுவதுதான் கலை. நீங்கள் ஒரு விடுதிக்குச் செல்கிறீர்கள்; உண்கிறீர்கள்; சுவைக்கிறீர்கள்; பணம் தருகிறீர்கள்; வெளிவந்து விடுகிறீர்கள். உங்களுக்கு பரிமாறியவர்களைப் பற்றி என்றாவது நினைத்ததுண்டா? பரிமாறும் ஊழியர்களின் வாழ்வியல் கதை பற்றி என்றாவது நீங்கள் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டதுண்டா? அந்த வாழ்க்கையை ஆனந்த விகடனின் சொல்வனத்தில் வந்த சௌவியின் கவிதை எதார்த்தமாகச் சித்திரித்திருந்தது. எல்லோரும் வெளியேறிய பிறகு, பரிமாறிய அந்தப் பையன்களுடைய நாளின் இறுதித் துயரம்... அது மிகவும் அழகாக அந்தக் கவிதையில் பதிவாகியிருக்கிறது. 'கடையில் வேலை செய்யும் சிறுவர்களுக்கு தேநீர் இனிப்பதுமில்லை... கசப்பதுமில்லை' என்று முடிகிற வரி உலுக்குகிறது.
'இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல' கவிதைத் தொகுதியில், குழந்தைத் தொழிலாளர்களைப் பற்றி நான் ஒரு கவிதை எழுதியிருப்பேன். அந்தக் கவிதைக்கு தலைப்பு 'இரும்படிக்கும் ரோஜாக்கள்'. அந்தக் கவிதையை மறுமுறை வாசித்ததைப் போன்ற அனுபவத்தை சௌவியின் கவிதையை வாசித்தபோது அடைந்தேன். எனக்குள்ளிருந்த பழைய வலியை மீண்டும் உசுப்பி எழுப்பியது இந்தக் கவிதை.
கவிதைகள் அருகிக்கொண்டேயிருக்கின்றன. இன்று கவிதை எழுதுபவர்களின் எண்ணிக்கையை விட வாசிக்கிறவர்களின் எண்ணிக்கைக் குறைவாக இருப்பதாகக் கருதப்படுகிறது. கலைகளின் கடைசி இடத்தில் கவிதை நிற்கிறது. இது உரைநடை யுகமாக மாறிவிட்டது. கவிதையை நுட்பமாகப் பார்க்கிற தலைமுறையின் அறிவும் ஆர்வமும் குறைந்திருப்பதாக நினைக்கிறேன். இந்த நேரத்தில் கவிதையை மேம்படுத்தி கைதட்டி எழுப்பிவிடவில்லையென்றால் கவிதை என்ற கலைவடிவம் தன் பெருமையை இழந்துவிடும். அது நடக்கக்கூடாது.
கவிதைதான் மொழியின் நாகரீகம். மொழியின் ஆதிவடிவம் கவிதைதான். அந்த ஆதிவடிவத்தை நாம் இழந்துவிடக்கூடாது. உணர்ச்சியை, உண்மையை கூர்மையாகவும் நேர்மையாகவும் இறக்கி வைக்கிற இடம் கவிதைதான்.
கவிதையைச் சார்ந்திருக்கிறது மொழியின் மேன்மை. கவிதை மேம்படுகிறபோது மொழியும் மேம்படுகிறது. கவிதை வாசிக்கிற கூட்டம் மேம்படுகிறபோது மொழியும் மதிக்கப்படுகிறது. எனவே கவிதை காக்கப்பட வேண்டும். அன்று சிறுபத்திரிகைகள் செய்துவைத்த வேலையை பெரும் பத்திரிகையான ஆனந்த விகடன் தொடர்ந்து செய்து வருகிறது என்பது எனக்கு ஆறுதலாக இருக்கிறது.
இளம் படைப்பாளிகளுக்கு நான் சொல்ல விரும்புவது, தொடர்ச்சியான வாசிப்பு வேண்டும். தொடர்ச்சியான படைப்பும் வேண்டும். சொல்வனத்தில் வருகிற பல கவிஞர்கள் அவர்களின் ஐந்தாவது, ஆறாவது கவிதைகள் எதுவென்று கேட்டால் பதிலில்லை. இவர்கள் நூல் வரைக்கும் பயணிக்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை. பட்டாம்பூச்சிகள் மாதிரிப் போவது அல்ல கவிதைகளின் நோக்கம். அது மயிலாக சிறகு விரிக்க வேண்டும். கவிதைக்கு ஒரு தொடர்ச்சி வேண்டும்.
எழுத எழுதத்தான் கவிதைக்கு முதிர்ச்சி வரும். கவிஞர்கள் வாசிக்கிறபோது பழைய இலக்கியங்களை முதலில் வாசியுங்கள். புதிய இலக்கியங்களை பிறகு வாசியுங்கள். சங்க இலக்கியத்துக்கும் நவீன இலக்கியத்துக்கும் நம்மை அறிமுகப்படுத்திக்கொள்ளாமல் புதிய இலக்கியமில்லை. வாசியுங்கள். தொடர்ச்சியாக எழுதுங்கள்" என்றார் வைரமுத்து.
கவிஞர் வைரமுத்துவின் அறிவிப்பும் பரிசும் சௌவியை நெகிழவைத்துவிட்டது.
"உண்மையில் இது கனவு மாதிரியிருக்கிறது. கவியரசரே என்னை அலைபேசியில் அழைத்துப் பேசினார். என்னால் நிதானமாகவே பேசமுடியவில்லை. 'கவிதை நறுக்குத் தெரித்த மாதிரியிருக்கிறது. அதிலும் டீக்கடையில் வேலை செய்யும் சிறுவர்களுக்கு தேநீர் இனிப்பதுமில்லை, கசப்பதுமில்லை' என்று நீங்கள் முடித்திருந்த விதம் நெகிழவைத்துவிட்டது. விரைவில் கவிதைகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிடுங்கள்' என்றார். நான் 'கடலைத் தேடிப்போகும் மழைத்துளி' என்ற பெயரில் ஒரு கவிதைத்தொகுப்பு வெளியிட்டுள்ளேன் என்று சொன்னேன். வாழ்த்துகளைத் தெரிவித்தார். 'உங்களை நேரில் சந்திக்க வேண்டும்' என்றேன். அவருடைய அலைபேசி எண்ணைக் கொடுத்து, 'சென்னைக்கு எப்போது வந்தாலும் என்னைத் தொடர்புகொண்டுவிட்டு நேரில் வாருங்கள்' என்றார். சிறு வயதிலிருந்தே இயற்கையின் மீது எனக்கு தீராத நேசம் இருந்தது. படிப்படியாக வாசிக்கப் பழகினேன். சனி ஞாயிறுகளில் மாடு மேய்க்கச் செல்வேன். கையில் கண்டிப்பாக கவிப்பேரரசின் நூல் இருக்கும். அவர் எழுதிய அத்தனை நூல்களையும் வாசித்துவிட்டேன். அவருடைய பாதிப்பில்லாமல் எவரும் கவிதைகள் எழுத முடியாது. நானும் அப்படித்தான்.
இதுவரை ஆனந்தவிகடனில் 50க்கும் மேற்பட்ட கவிதைகள் வந்துள்ளன. 'ஆட்டத்தின் முடிவில்' கவிதை கவியரசரை சென்றடைந்தது மிகவும் பெருமிதமாக இருக்கிறது. ஆனந்த விகடனுக்கும் கவிப்பேரரசுக்கும் நன்றி..." என்கிறார் சௌவி.
வாழ்த்துகள்
சௌவி!நன்றி: விகடன்
Comments