கோதுமை புல்லுக்கும் மருத்துவ குணம் உண்டு.
கோதுமை புல்லுக்கும் மருத்துவ குணம் உண்டு.
சமீப ஆண்டுகளாக நாம் அதிகம் பயன்படுத்தி வரும் தானியமாக கோதுமை மாறியுள்ளது. இதேபோல் கோதுமையை விளைவிக்கக் கூடிய வித்தான கோதுமைப் புல்லும் சமீப நாட்களாக பரவலாக பயன்படுத்தும் மருந்துப் பொருளாக மாறியுள்ளது.
ஏன் பயன்படுத்துகிறார்கள்?
அறுகம்புல்லை ஜூஸாக பருகும் வழக்கம் நம்மிடையே உள்ளது. அதேபோல் கோதுமைப்புல்லினையும் சாறாக அருந்தலாம். தினமும் 30மிலி கோதுமைப்புல் சாறு அருந்துவது நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை மற்றும் நீரிழிவு நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் என அனைவரும் அருந்தலாம். ரத்தசோகை உள்ளவர்கள், உடல் பலவீனமாக இருப்பவர்கள் இதுபோன்ற பிரச்னை உள்ளவர்கள் குணமடையும் வரை அருந்தலாம்.
அரைத்து காலையில் வெறும் வயிற்றில் அருந்துவதைப்போல இச்சாறையும் பெரியவர்கள் காலை உணவுக்கு முன்னர் பருகலாம். சாதாரணமாக வாரத்திற்கு ஒரு நாள் கோதுமைப்புல் ஜூஸ் அருந்துவது உடல் எடையைக் குறைப்பதற்கு உதவுகிறது. கோதுமைப்புல் தொடர்ந்து குடித்து வந்தால் நாள்பட்ட நோய்கள் குணமடையும். முக்கியமாக, உடல் பருமன் குறையும். நீரிழிவு நோயின் பாதிப்பு கட்டுக்குள் வரும்.
கோதுமைப் புல் சாறு செரிப் பதற்கு அதிகபட்சம் 1 மணிநேரம் ஆகும், அதனால் கோதுமைப் புல் சாறு அருந்தியவுடன் ஒரு மணி நேரம் கழித்துதான் வேறு உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். ஜீரண சக்தி குறைவாக உள்ளவர்கள் குறைந்த அளவு கோதுமைப்புல் எடுத்துக் கொள்ளலாம்.
என்ன சிறப்பு?
உடலில் புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடிய திறன் கோதுமைப்புல்லுக்கு உண்டு, கோதுமைப் புல் சாற்றில் 70% பச்சையம் உள்ளது. இது ரத்தத்தை சுத்தம் செய்கிறது. ரத்தத்தில் வெள்ளை, சிவப்பணுக்களை அதிகரிக்க செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை உண்டு பண்ணுகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது. உடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது. சிறுகுடல், பெருங்குடலை சுத்தம் செய்கிறது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது. சருமம் தொடர்பான அனைத்து நோய்களையும் குணப்படுத்துகிறது.
கோதுமைப்புல்லில் குளோரோபில் (Chlorophyll) என்ற பச்சையம் அதிகளவில் இருக்கும். இந்தப் பச்சையம் நாம் சாப்பிடுகிற உணவுவகைகள் எளிதாக செரிமானம் நடைபெற உதவி செய்கிறது. மேலும் இந்த பச்சை நிறமி, நாம் சாப்பிடுகிற உணவுப்பொருட்களில் காணப்படுகிற நச்சுத்தன்மையை வெளியேற்ற உதவும் ஆன்டி-ஆக்சிடென்ட்டாகவும் செயல்படுகிறது.
இந்த நிறமி ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினை அதிகரிக்க செய்கிறது. இதன்மூலம் ரத்தத்துக்கு அதிகளவில் ஆக்சிஜன் செல்ல வழி ஏற்படுத்துகிறது. சிவப்பு மற்றும் வெள்ளை அணுக்களை உற்பத்தி செய்யவும் இப்பச்சையம் துணைசெய்கிறது.
எப்படி வளர்ப்பது?
விதைநெல்லை தூவி வளர்ப்பது போலவே கோதுமையை நிலத்தில் தூவி விட்டால் இரண்டு வாரங்களில் நாற்றுபோல் வளரும். வளர்ச்சி அடைந்த புல்லை எடுத்து, நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். பின்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் அரைத்து வடிகட்டி ஒரு நபருக்கு 30 மிலி வீதம் அருந்தலாம். இதற்கென்று பெரிய நிலப்பரப்பு எதுவும் தேவையில்லை. வீட்டிலுள்ள பிளாஸ்டிக் தொட்டியிலேயே தூவிவிட்டு வளர்க்கலாம்.
Comments