ஒரு கவிதையின் மரணம்
ஒரு கவிதையின் மரணம்
*
கண்ணீரின் எடை
ஏன் இன்று வழக்கத்தை விட
அதிகமாக இருக்கிறது?
இதயம் ஏன்
இப்படிக்
கரைந்து கரைந்து உருகுகிறது ?
வாழ்க்கையின் பொருள்தான் என்ன?
ஏன் மறுபடியும் ஆரம்பத்தில் இருந்து
என் தேடல் தொடங்குகிறது?
புதிரைப் புரிந்து கொள்ளப்
புதிர் விளையாட்டு ஆடும் மனமே
புதிருக்குள்ளேயே நீ தொலைந்து போவாயோ?
வெறும் பாலையில்
நடந்து நடந்து
வெற்றுக் கால்கள்
வெயிலில் வெந்து வெந்து
வெம்மையிலேயே
எரிந்து வீழவோ
இவ்வாழ்வு?
கானலைத் துரத்தித் துரத்திக்
கானலிலேயே மயங்கி மயங்கி
சரிந்து வீழ்ந்தாலும்
நிஜத்தை தரிசிக்க
நீளும் நடையை
மீண்டும் மீண்டும்
அரங்கேற்றும்
சிலுவைப் பயணம்தானா கலைஞனின் வாழ்வு?
ப்ரான்சிஸ்...
உன் உலர்ந்த புன்னகையிலும் ஓர் உயிர் இருக்குமே...
உன் கலைந்த தோற்றம் தாண்டியும்
ஒரு குழந்தையின் கண்கள் அப்பழுக்கற்று ஜொலிக்குமே...
உன்னை ஏந்திக் கொண்டு
அன்பு செலுத்தும் அன்னை
மரணம்தான் என
அதன் கரங்களில் வீழ்ந்தாயோ?
உன் மரணம் கேட்டு
அரும்பிய
ஒரு துளிக் கண்ணீரையும்
சுமக்கும் வலிமையற்றுவிட்டேன் இன்று.
ஏலீ... ஏலீ... லாமா சபக்தானி...
எனும் குரல்
எப்போதுதான் ஓயும்?
*
(அன்பு மயமான கவிஞன்ப்ரான்சிஸ் கிருபாவுக்கு...)
*
- பிருந்தா சாரதி
Comments