இதல்லவோ வாழ்கை - எவ்வளவு பேருக்கு கிடைக்கும்

 இதல்லவோ வாழ்கை - எவ்வளவு பேருக்கு கிடைக்கும் - ஆரூர்தாஸ்
















கோடம்பாக்கத்தின் சினிமா கோட்டையில் நானும் ஒரு சிறிய சிப்பாயாக குடிபுகுந்த 1953-1954-களில், சென்னையில் அந்தந்த பகுதிகளில் சொற்ப தியேட்டர்களே இருந்தன.
அவை:-

மவுண்ட் ரோட்டின் மையப்பகுதியில் 'கெயிட்டி', 'கேஸினோ', 'சித்ரா', 'நியூகுளோப்', 'வெலிங்டன்', 'நியூ எல்பின்ஸ்டன்', 'மிட்லேண்ட்', 'ஓடியன்', 'பிளாஸா', 'பாரகன்', திருவல்லிக்கேணியில் 'ஸ்டார்', பிராட்வேயில் 'பிராட்வே', 'பிரபாத்', 'மினர்வா', வால்டாக்ஸ் ரோட்டில் 'ரீகல்', தங்கசாலையில் 'கிரவுன்', 'கிருஷ்ணா', டவுனில் 'ஸெலக்ட்', 'கினிமா சென்ட்ரல்' என்னும் 'ஸ்ரீமுருகன் டாக்கீஸ்', வண்ணாரப்பேட்டையில் 'பாரத்', 'மகாராணி', 'மகாராஜா', புரசைவாக்கத்தில் 'ராக்ஸி', கெல்லிஸில் 'உமா', அயனாவரத்தில் 'சயானி', மயிலாப்பூரில் 'கபாலி', காமதேனு' மற்றும் தியாகராயநகரில் பிரபல நடிகை டி.ஆர்.ராஜகுமாரிக்குச் சொந்தமான 'ராஜகுமாரி', சைதாப்பேட்டையில் 'நூர்ஜஹான்'.

இவை அத்தனை தியேட்டர்களிலுமே அக்காலத்தில் நான் படம் பார்த்திருக்கிறேன். பிற்காலத்தில் நான் எழுதிய பல படங்கள் இவற்றில் ஓடியிருக்கின்றன. அந்தப்பழைய நினைவில்தான் இன்று இதைக் குறிப்பிடுகிறேன்.

பிராட்வே நீள்சாலையின் வடகோடியில் அமைந்துள்ள 'பிராட்வே' டாக்கீஸில் (இப்பொழுது 'நியூ பிராட்வே') தான், இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே.தியாகராஜபாகவதர், டி.ஆர்.ராஜகுமாரியுடன் இணைந்து நடித்த 'ஹரிதாஸ்' படம் ரிலீசானது. 16.10.1944 தீபாவளித் திருநாளில் வெளிவந்த இந்தப் படம் 1944, 1945, 1946 ஆகிய மூன்று ஆண்டுகளின் 3 தீபாவளிகளைக் கடந்து, அடுத்த 1947 ஆண்டிலும் மேற்கொண்டு 6 வாரங்கள் வெற்றிகரமாக ஓடியது. மொத்தம் 110 வாரங்கள்!. நாள் கணக்கில் கூட்டிப் பார்த்தால் 772 நாட்கள்!. தினசரி மூன்று காட்சிகளும் தொடர்ந்து இடைவிடாமல் ஓடி, தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் இன்றுவரை வேறு எந்த மொழி திரைப்படமும் புரியாத பெரும் சாதனை. இது தமிழ் சினிமாவிற்கு எம்.கே.தியாகராய பாகவதர் ஏற்படுத்திவிட்டுச் சென்ற பெருமிதத்திற்குரிய பெருமை என்று கூறினால், அது மிகை ஆகாது. அத்தகைய அற்புத இசை - நடிப்புக் கலைஞருக்கு, இந்த சென்னை மாநகரின் எந்த ஓர் இடத்திலும் இன்று வரையில் நினைவு மண்டபமோ, உருவச்சிலையோ அமைக்கப்படவில்லை என்பது வேதனைக்குரிய விஷயம்.

அதே பிராட்வே சாலையின் நடுப்பகுதியில் ஒரு பழைய கட்டிடத்தின் மேல் தளத்தில், 'மினர்வா' தியேட்டர் இருந்தது. இங்கு ஆங்கில மொழிப்படங்கள் மட்டுமே வெளியிடப்பட்டு வந்தன. அக்கால ஆங்கிலேய அரசு அதிகாரிகள் தமது குடும்பத்தினர் மற்றும் குறிப்பிட்ட நண்பர்களுடன் கூடி, விருந்துண்டு ஆடிப்பாடி மகிழ்வதற்கென அமைத்திருந்த பிரத்தியேகக் கூடத்தில் இந்த தியேட்டர் இருந்தது.

அன்றைய நாட்களில் சென்னையில் மட்டுமின்றி, தமிழ்நாட்டிலேயே முதல் குளிர்சாதன வசதி அமைக்கப்பட்ட முதல் தியேட்டர் இந்த 'மினர்வா'தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குதான் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் தயாரிக்கப்பட்ட அனைத்துத் திரைப்படங்களையும் தணிக்கை அதிகாரி (சென்சார் ஆபீசர்) தம் உறுப்பினர்களுடன் பார்த்து கலந்தாலோசனை செய்து தணிக்கை செய்தார். அன்றைய தணிக்கை விதிமுறைகள் மிகக் கடுமையானவையாக இருந்து அவை பாரபட்சம் இன்றி கண்டிப்புடன் கடைப்பிடிக்கப்பட்டன!

மவுண்ட்ரோடு 'நியூகுளோப்' தியேட்டரில் அக்கால மாபெரும் உலக மகா இயக்குனரான 'ஸிஸில்-பி-டிமிலியின் பைபிளைச் சார்ந்த 'பத்துக் கட்டளைகள்' என்னும் 'டென்கமாண்மென்ட்ஸ்' படம் ஒரு வருடமாக ஓடிக்கொண்டேயிருந்தது! 'ஓடியன்' தியேட்டரில் 'பென்ஹர்' என்ற படம் மாதக்கணக்கில் ஓடியது.

ஆங்கில மொழிப்படங்கள் காண்பிக்கப்படும் தியேட்டர்களில் அமர்ந்து அமைதியாகப் படம் பார்ப்பது கவுரவமாகக் கருதப்பட்ட காலம் அது!

1956-1957-களில் அமரர் 'சாண்டோ' எம்.எம்.ஏ. சின்னப்பா தேவரின், 'தேவர் பிலிம்'சில் நான் கதை வசன கர்த்தாவாகச் சேர்ந்து எழுதிக்கொண்டிருந்தேன். அந்தக் காலக்கட்டத்தில் அண்ணன் ஓய்வின்றி ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருந்தார். ஆனாலும் கூட, ஒவ்வொரு தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்திப் படங்களையும் தவறாமல் பார்க்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். ஆங்கிலப் படங்களில் பெரும்பாலும் 'ஆக்ஷன்' வீரதீரச் செயல்களைக் கொண்ட படங்களையே அதிகம் விரும்பிப் பார்ப்பார். பெரிய அளவில் கல்வி அறிவு பெறாவிட்டாலும், இயற்கையாகவே அவர் நல்ல கதை அறிவு கொண்டிருந்தார். அதை வைத்து மற்ற படங்களின் வெற்றி தோல்விகளுக்கான காரணங்களை ஆராய்ந்தறிந்து, அதற்கேற்றவாறு படம் பண்ணி தொடர்ந்து வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணமுடையவராய் இருந்தார்.

அவ்வப்போது படம் பார்க்க அவருக்கு நேரம் கிடைப்பது அரிது. ஆகையால், இடையில் ஓய்வு கிடைக்கும் சமயத்தில் ஒரே நாளில் சேர்ந்தாற்போல பிற தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மும்மொழிப் படங்களையும் பார்த்துவிடுவார். துணைக்கு என்னையும் அழைத்துக்கொண்டு போவார்.

அப்பொழுது அவருக்கு வயது 41. எனக்கு 25. நாங்கள் இருவருமே நல்ல சாப்பாட்டுப் பிரியர்களாக இருந்தோம் - அல்ல, அமைந்தோம். அதிலும் குறிப்பாக அசைவ உணவு வகையறாக்களில் அதிகக் கவனம் செலுத்துவோம். அதற்குத் தக்கவாறு இளமையும், ரத்த ஓட்டமும் இருந்தது. ஆகவே, படம் பார்த்தல், சாப்பிடுதல் ஆகிய இரண்டையும் ஒன்றாக இணைத்துக்கொண்டு ஓர் இனிய இளங்காலை வேளையில் காரில் தியாகராயநகரில் இருந்து புறப்படுவோம்.

முதல் போணியாக தென் பகுதி பனகல்பார்க் எதிரில் நீண்ட நாட்களாக இருந்து வந்த 'பார்க்லேண்ட் ஓட்டலில்' அடிவைப்போம். (அந்த ஓட்டல் இருந்த இடத்தில் இன்றைக்கு 'நல்லி' நகைக்கடை இருக்கிறது). இரண்டு பெரிய ஸ்பெஷல் மசாலா தோசைகள். மற்றும் காலி பிளவர், கேரட், பீன்ஸ் குருமாவுடன் கூடிய இரண்டு செட் சப்பாத்திகள் அல்லது 4 பூரிகள். அவற்றுடன் சேர்ந்தாற்போல் இரண்டு கப், பில்டர் காபி (அண்ணனுக்கு ஒரு கப் காபி போதாது). இவை அவருடைய 'பிரேக் பாஸ்ட்' என்னும் காலை ஆகார 'மெனு'. அவற்றில் பாதி அளவு என்னுடைய 'மெனு'. சாப்பிட்டு முடித்ததும் அண்ணன் அவருடைய காரில் அமர்ந்து, எவர்சில்வர் வெற்றிலைப்பெட்டியைத் திறந்து தாம்பூலம் தரித்துக் கொள்வார்!

அவர் எந்த அறிவிப்பும் கூறாமலே, அவரது ஆஸ்தான சாரதி காரை வடக்குக் கடற்கரைச் சாலையில் செலுத்துவார். அது ராயபுரத்திற்குச் சென்று ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழைய 'பிரைட்டன்' தியேட்டருக்கு முன்னால் நிற்கும். அண்ணன் வந்திருப்பதை கார் டிரைவர் கூறியதும், தியேட்டர் மானேஜர் ஓடிவந்து அழைத்துச் சென்று பால்கனியில் அமர்த்துவார்.

பிரைட்டனில் 'மார்னிங் ஷோ' ஆங்கிலப்படம் பார்த்து முடித்ததும், அதைப்பற்றி விமர்சனம் செய்து கொண்டே காரில் மவுண்ட் ரோட்டுக்கு வந்து சேர்வோம்.

இன்றைய 'புகாரி' ஓட்டலின் மேற்கே அதே வாடையில் அன்றைக்கு இருந்த ஆங்கிலேயர் காலத்து 'ஹாரிஸன் பிரிஸ்டால்' ஓட்டலுக்கு செல்வோம். அங்கு அப்பொழுது பிரசித்தமான வாவல் மீன் குழம்பு, வஞ்சிர மீன் வறுவல் மற்றும் 'டீப் பிரை' செய்யப்பட்ட இறால் கறி சகிதம் மதிய உணவை முடிப்போம். அடுத்ததாக 'மிட்லேண்ட்' அல்லது திருவல்லிக்கேணி ஸ்டார் டாக்கீசுக்குச் சென்று ஏதாவது ஒரு இந்திப்படம் 'நூன்ஷோ' பார்த்துவிட்டு, மாலை 5.30 மணிக்கு மீண்டும் மவுண்ட் ரோடு சென்டருக்கு வருவோம்.

பிரிட்டிஷ் காலத்து 'விக்டரி ஹவுஸை' அடுத்து தென்புறத்தில் அந்நாளில் 'நேரு கபே மை காபி பார்' என்ற பெயரில் புகழ் பெற்ற சைவ ஓட்டல் இருந்தது. வாழைக்காய், கத்தரிக்காய், குடை மிளகாய், பெல்லாரி வெங்காயம் முதலியவற்றை கச்சிதமாக நறுக்கி பெருங்காயம் கரைத்த கெட்டியான கடலை மாவுக் கலவையில் முக்கி எடுத்து, சுத்தமான எண்ணெயில் இட்டுப் பக்குவமாக வேக வைத்த 'பஜ்ஜி' வகையறாக்கள் சுவையாகவும், சுடச்சுடவும் மாலை வேளைகளில் அங்கு கிடைக்கும்.

அவற்றை வகைக்கு ஒன்றாக (அண்ணன் மட்டும் இரண்டு இரண்டாக) தின்று தீர்த்து வழக்கம்போல அவருக்கு இரண்டும் எனக்கு ஒன்றுமாக மூன்று கப் காபி அருந்தி முடிப்போம். பின்னர் அருகில் இருக்கும் தமிழ்ப்படங்கள் மட்டும் ஓடுகின்ற தியேட்டர்களில் ஏதேனும் ஒன்றில், ஏற்கனவே நாங்கள் தேர்ந்தெடுத்து வைத்திருக்கும் இரண்டு தமிழ்ப்படங்களில் ஒன்றை 'ஈவினிங் ஷோ' பார்ப்போம். படம் முடிந்ததும் மீண்டும் மவுண்ட் ரோடு மையத்திற்கு கார் வந்து சேரும். அங்கு'புகாரி' அல்லது அதை அடுத்து சற்றுத்தள்ளி மேற்புறத்தில் அன்றைக்கு இருந்த 'நேஷனல் இ.ராணி' ஓட்டலில் நுழைவோம். அங்கு அசல் நாட்டுக்கோழி, முட்டை, மட்டன் மசாலாவுடன் கூடிய முழு பிளேட் பிரியாணியை அண்ணனும், அதில் அரை பிளேட் நானும் சாப்பிட்டு அதற்கு மேலே ஸ்பெஷல் டீ அருந்துவோம்.

இன்றைக்கு 150-லிருந்து 200 ரூபாய் வரையில் விற்கப்படும் ஒரு முழு பிரியாணியின் அளவு ,அன்றைக்கு அரை பிளேட்தான்! அதன் விலை எவ்வளவு தெரியுமா?. பத்தே பத்து ரூபாய்தான்! அன்றைய நாளில் 5 ரூபாய்க்கு கால் பிளேட் பிரியாணியும் கொடுப்பார்கள்!

பிரியாணி டின்னர் முடிந்ததும் இரண்டாவது தமிழ்ப்படத்தை 'நைட்ஷோ' பார்த்துவிட்டு நள்ளிரவில் காரில் வந்து அமர்வோம். 'ரிமோட் கண்ட்ரோல்' இயக்கம் போல, டிரைவர் விசுவநாதன் காரை அன்றைய சைனா பஜாரைச் சார்ந்த சவுகார்பேட்டைச் சந்திப்பில் கொண்டு போய் நிறுத்துவார்.

அங்கு 'சீனிவாசா பவன்' என்ற பெயரில் புகழ் பெற்ற ஒரு திறந்தவெளி சைவ உணவு விடுதி இருந்தது. அங்கு விடியும் வரையில் வியாபாரம் நடக்கும். நடுத்தெருவை அடைத்து விசுப் பலகைகளும் அவற்றின் எதிரே விட்டுவிட்டு மடக்கு மரப்பலகையினால் ஆன சிறுசிறு மேஜைகளும் போட்டு வைத்திருப்பார்கள். பெரும்பாலும் 'மார்வாரி' இனத்தவர்தான் அமர்ந்தபடியும், ஆங்காங்கே நின்றபடியும் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்.

பெரிய பெரிய இரும்புக் கொப்பரைகளில் சொட்டுத் தண்ணீர் கலக்காத சுத்தமான பசும்பால், தள தளவென்று கொதித்துக் கொதித்துப் பாலாடையுடன் கூடி 'பாஸந்தி'யாகத் திரண்டு புரண்டு கொண்டிருக்கும். அதை அப்படியே பெரிய பெரிய பீங்கான் கிண்ணங்களில் அள்ளி, அதில் பன்னீர் தெளித்து அதனுடன் சர்க்கரை, ஏலக்காய், பாதாம், முந்திரி, திராட்சை கலந்து சுடச்சுட தருவார்கள். கூடவே பூரி அல்லது சப்பாத்தியும் உண்டு.

பெரும் செல்வந்தர்களான சவுக்கார்கள் நிறைய சப்பாத்திகளை ஒரு தட்டில் அடுக்கி வைத்துக்கொண்டு, ஒவ்வொன்றாக எடுத்து அதை இரண்டு இரண்டாகப் பிய்த்துக்கொண்டு ஒரு பாதியை பாஸந்தியில் அழுத்தி, முடிந்த மட்டும் வாயை அகலமாகத் திறந்து கொண்டு அதன் உள்ளே வைத்து சிறிதும் சிந்தாமல் கொள்ளாமல் சுவைத்து மகிழ்வார்கள்.

இது போதாமல் இன்னொரு கொப்பரையில் பொன் மஞ்சள் வண்ணத்தில் 'தேன் ஜிலேபி' வெந்து பளபளவென்று சவரன் காசு போல மின்னிக்கொண்டிருக்கும். அதில் ஒரு டஜன் ஜிலேபியை வாங்கி வைத்துக்கொண்டு அதன் ருசியை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். இவை மட்டும் அல்லாமல் கெட்டியான 'பால்கோவா', வெண் பஞ்சு வண்ண 'ரசகுல்லா', 'மில்க் அல்வா' என பாலில் உருவான பல்வகை அயிட்டங்களுக்கும் அங்கு பஞ்சமில்லை.

எனது அன்பிற்கினிய தேவரண்ணன் சிறிதும் வஞ்சகம் இல்லாமல் அரை டஜன் சப்பாத்திகளைத் தட்டில் அடுக்கி வைத்துக்கொண்டு, அதன் மீது இரண்டு கப் பாஸந்தியை தோசை மீது சாம்பார் ஊற்றுவதைப்போல ஊற்றி ஊற வைத்துப் பிட்டுப்பிட்டுச் சாப்பிடுவார். வயிறு நிறையவில்லை என்று மனதிற்குத் தோன்றினால், மீண்டும் கால் டஜன் சப்பாத்தியுடன் ஒரு கப் பாஸந்தி!.

ஒரு காலத்தில் 'எலிபண்ட்கேட்' என்னும் 'யானைக்கவுனி'ப் பகுதியில் வசித்த எம்.ஜி.ஆருக்கு இந்த சீனிவாசா பவன் விடுதியைப்பற்றி நன்கு தெரியும். அவர் சொல்லித்தான் எங்களுக்கு இந்த இடம் தெரிந்தது. இரவு நேரப் படப்பிடிப்பு நாட்களில் எம்.ஜி.ஆர். இங்கிருந்து வேண்டிய அயிட்டங்களை வாங்கி வரச்செய்வார். அதை அண்ணனும், அவரும் போட்டிப் போட்டுக்கொண்டு உண்டு மகிழ்வார்கள். இந்தப் பூரி சப்பாத்தி பாஸந்தி 'காம்பினேஷன்' எம்.ஜி.ஆரின் விருப்ப உணவு!

தேவரண்ணனும், நானும் நள்ளிரவு உணவை, சவுகார் பேட்டை சீனிவாசா பவனில் முடித்துக்கொண்டு, அங்கிருந்து சற்றுத் தொலைவில் இருந்த 'ஐகோர்ட் பீச்'சுக்கு வருவோம். அந்நாட்களில் இன்றைய 'மெரினா பீச்' உயர்நீதிமன்றத்தின் பின்புறம் வரையில் நீண்டிருந்தது. பின்நாளில் துறைமுகத்தின் விரிவாக்கத்தின்போது அந்த அழகிய கடற்கரையைக் கட்டிடங்கள் ஆக்கிரமித்துக்கொண்டு விட்டன.

அண்ணனும் நானும் கடற்கரை மணலைச் சேர்த்துக் குவித்துத் தலையணைபோல் ஆக்கி அதன் மீது துண்டை விரித்துப் படுப்போம். பழைய குளிர் தென்றல் மயில் இறகால் தடவுவதுபோல மெதுவாக மேனியைத் தடவித் தவழும். ஒரே நாளில் நான்கு படங்களைப் பார்த்துச் சோர்ந்து போன விழிகளை உறக்கம் தழுவி ஆட்கொண்டு விடும்.

எங்களைப்போன்று ஆங்காங்கே வடசென்னைவாசிகள் பாய் தலையணை சகிதம் படுத்து குறட்டை விட்டு உறங்குவார்கள். கேட்பார் கிடையாது; இப்பொழுது போல வழிப்பறி, திருட்டு கிடையாது. காவல் துறையினரின் கண்காணிப்பு சட்ட திட்டங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டு, அனைத்துக் கடற்கரைகளும் அழுக்கும் இழுக்கும் இல்லாமல் அழகாகவும், அமைதியாகவும் திகழ்ந்தன!

வைகறைப் பொழுதில் உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள அடர்ந்த மரக்கிளைகளில் கட்டப்பெற்ற கூடுகளில் இருந்து பல்வேறு 'பட்சிகள்' எழுப்பும் இன்னொலி கேட்டு அண்ணனும், நானும் விழித்தெழுவோம். கீழ்த்திசை தங்கவானம் பிரசவிக்கும் குங்குமக் குழந்தையைக் கண்டு கைகுவித்துக் கும்பிட்டு விட்டு தியாகராய நகருக்குத் திரும்புவோம்.

படப்பிடிப்பின்போது எம்.ஜி.ஆரிடம் இந்த விவரங்களைத் தெரிவிப்பேன். "கொடுத்து வச்சிருக்கீங்க. கோடி கோடியா சம்பாதிச்சுக் கொடிகட்டிப் பறந்தாலும், எல்லாருக்கும் இந்தப் பாக்கியம் கிடைக்காது" என்று கூறி தனக்குத்தானே ஆதங்கம் கொள்வார்.

1960-களில் நான் ஏவி.எம். படங்களுக்கு எழுதிக் கொண்டிருந்தேன். அப்போது படப்பிடிப்பு இல்லாத நாட்களில், 'முருகன் பிரதர்ஸ்' என்று அழைக்கப்பெற்ற செட்டியாரின் பிள்ளைகளான மூத்தவர் முருகன், அவரை அடுத்த குமரன் மற்றும் சரவணன் ஆகியோருடன் இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் - நான் எல்லோருமாகச் சேர்ந்து வெளியில் செல்வோம். பாரிஸ் கார்னரின் கீழ்த்திசை முனையில் இருந்து தொடங்கி, கடற்கரை ரெயில் நிலைய வாயில் வரையில் நடைபாதையில் புதிதாகத் தோன்றியிருந்த பர்மா பஜாரைச் சுற்றுவோம். அங்கு தேவையான வெளிநாட்டுப் பொருட்களை வாங்கிக்கொண்டு , அங்கிருந்து மவுண்ட் ரோடு மையத்திற்கு - இப்பொழுது அண்ணா சிலை அமைந்திருக்கும் அந்தப்பகுதிக்கு வருவோம்.

அங்கு 'நியூ எல்பின்ஸ்டன்' தியேட்டரின் பிரதான நுழைவாயிலின் ஓரமாக, உள்ளே இடது புறத்தில் இருந்த 'ஜபார் ஐஸ் கிரீம் பார்ல'ரில் அமர்ந்து 'ஜபார் ஸ்பெஷல் ஐஸ்கிரீம்' சாப்பிடுவோம். இரண்டு இட்லிகள் மற்றும் வடை கொள்ளக்கூடிய அளவிலான நீண்ட பீங்கான் கிண்ணத்தில் 'சாக்லட்', 'பிஸ்தா' மற்றும் 'ஸ்ட்ராபரி' ஆகிய மூன்று வகையான ஐஸ்கிரீம் இருக்கும். அத்துடன் அரபு நாட்டு இறக்குமதிப் பொருளான காய்ந்த பழத்துண்டுகள் கலந்து, வஞ்சகம் இல்லாமல் கோப்பை நிறைய கொடுப்பார்கள்.

அதிலேயே பாதி வயிறு நிறைந்து விடும்!

தேவர் பிலிம்ஸ் படப்பிடிப்பில் ஒருநாள் மாலைச் சிற்றுண்டி இடைவேளையின்போது, பேச்சுவாக்கில் இந்த ஜபார் ஸ்பெஷல் ஐஸ் கிரீமின் பெருமையை எம்.ஜி.ஆரிடம் அளந்தேன். அதற்குக் காரணம் அவர் ஐஸ்கிரீம் பிரியர்!. 'எங்கிருக்கிறது' என்று கேட்டு இடத்தைத் தெரிந்து கொண்டார்.

அடுத்த நாள் மாலை சிற்றுண்டிக்கான இடைவேளை வந்ததும், எம்.ஜி.ஆர். என் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு தனது ஒப்பனை அறைக்குள் நுழைந்தார்.

கதவு உள்ளே தாளிடப்பட்டது. காரணம் முதலில் எனக்குப் புரியவில்லை.

எம்.ஜி.ஆரிடம் நீண்ட காலமாக, வீட்டோடு உதவியாளராக இருந்த சபாபதி, கீழே இருந்த இரண்டு பெரிய 'பிளாஸ்கு'களை எடுத்து டீப்பாய் மீது வைத்து ஒன்றைத் திறந்தார். இரண்டு பீங்கான் பிளேட்டுகளை ஸ்பூன் சகிதம் எங்கள் எதிரில் வைத்தார். திறந்த பிளாஸ்கில் இருந்த பொருளை கரண்டியால் எடுத்து எங்கள் தட்டில் பரிமாறினார்.

அந்தப் பொருள் வேறு எதுவுமில்லை. ஐஸ்கிரீம்தான்! அதுவும் ஏவி.எம். முருகன் பிரதர்ஸ் உடன் சேர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்து எம்.ஜி.ஆரிடம் முந்தின நாள் நான் சிலாகித்துக் கூறிய, அதே 'ஜபார் ஸ்பெஷல் ஐஸ் கிரீம்'தான். நான் திகைத்துப்போனேன்.

எம்.ஜி.ஆர். சொன்னார்:-

எம்.ஜி.ஆர்:- என்னை விட்டுட்டு நீங்க மட்டும் போய் சாப்பிட்டுட்டு வந்து எங்கிட்டேயே அளந்தீங்களே! அதை இப்போ என்னோட சேர்ந்து சாப்பிடுங்க.
நான்:- அண்ணே! இது எப்படி இங்கே வந்தது?

எம்.ஜி.ஆர்:- மத்தியானமே சபாபதிகிட்டே சொல்லி வச்சிருந்தேன். காரை எடுத்துக்கிட்டுப்போய் வாங்கிக்கிட்டு வந்திட்டான். இதுக்குன்னே அம்மாகிட்டே சொல்லி வீட்டுலேருந்து கொண்டு வந்த பிளாஸ்க் இது.

இணையத்தில் இருந்து எடுத்தது 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி