நமது சுதந்திரம் இப்படியாக தான் இருக்கிறது.

 நமது சுதந்திரம் இப்படியாக தான் இருக்கிறது.






ஒரு நட்சத்திர ஹோட்டலில் இரவு முழுக்கக் குடித்து, கும்மாளமிட்டு நிலை தடுமாறி இரண்டு பேர் துணையுடன் தவழ்ந்து காரில் ஏறிப்போகிற மனிதர், மறுநாள் காலை டாஸ்மாக் வாசலில் கால் இரண்டையும் பரப்பிக் கொண்டு தலைதொங்கி, போதையில் கிடக்கும் ஒருவரைப் பார்த்து 'நாஸ்ட்டி பீப்பிள்’ என்கிறார். நேற்று இரவு அவரும் 'நாஸ்ட்டி பீப்பிள்’ ஆகத்தான்இருந்தார்!
சவாரிக்காக அல்லாடி நிற்கும் ஆட்டோ மீது சர்ரென்று லத்தியை வீசி, 'எடு வண்டியை’ என்று அதட்டும் போலீஸ்காரர், சிக்னல் முனை ஷாப்பிங் மால் வாசலில் காரை நிறுத்திவிட்டுப் போனவரிடம், 'ஏன் சார் இப்படிப் பண்றீங்க?’ என்று குசலம் விசாரித்து, சலாம் அடித்து அனுப்பி வைக்கிறார். லத்தியால் ஆட்டோவில் அடித்ததைப் போல கார் டிக்கியில் அடிக்க அவருக்கு மனம் வருவது இல்லை.
'போன மாசம் வரை 550 ரூபாய்தான் டிக்கெட். இப்போ 750 ரூபாய் ஆக்கிட்டானுவலே!’ என்ற அங்கலாய்ப்புடன் ஏ.சி. பேருந்தில் ஏறுகிறவர்கள் கோயம்பேட்டில் இறங்கும் போது, 'அண்ணே மொத சவாரிண்ணே... 150 ரூபாய் குடுங்க போதும்’ என்று இறைஞ்சும் ஆட்டோக்காரரிடம், 'ஏம்ப்பா... இப்படிக் கொள்ளையடிக்கிறீங்க...’ என்று கரித்துக் கொட்டுவார்கள்.
இந்த வருடம் 5,000 ரூபாயாவது சம்பள உயர்வு இருக்கும் என்ற நம்பிக்கை பொய்த்து, '4,000 ரூபாய்தான் அதிகமாக்கியுள்ளோம்’ என்று மேலதிகாரி சொல்லும்போது இடிந்துபோகும் நமக்கு, வேலைக்கார அம்மா 200 ரூபாய் சம்பளத்தை ஏற்றிக் கேட்டால் கோபம் உள்ளுக்குள் உலை கலனாகக் கொதிக்கிறது!
சர்வீஸ் சென்டரில் காரை டெலிவரி எடுக்கும் போது, ஒரு அடி நீளத்துக்கு அவர்கள் தரும் பில்லில், ஒன்றிரண்டு விளக்கங்கள் கேட்டுப் பணம் செலுத்தும் நாம், தெருமுனை மெக்கானிக்கிடம் 'அநியாயம் பண்றப்பா!’ என்று அலுத்துக் கொள்கிறோம்.
இல்லாதவர்களிடமும் இயலாதவர்களிடமும், அதிகாரத்தையும் புத்திசாலித்தனத்தையும் காட்டுகிற மனநிலை ஒரு சுய திருப்தியாகவும், பல்லைக் கடித்துக் கொண்டு நாம் பொறுத்துக் கொண்ட பல விஷயங்களுக்கான வடிகாலாகவும் நமக்கு அமைந்து விடுகிறது.
'அதிகாரத்தில் இருப்பவனிடம் அடங்கிப் போக வேண்டும்... இல்லாதவனை அதிகாரம் செய்ய வேண்டும்’ என்பதை எனக்கு, உங்களுக்கு, நமக்கு யார் சொல்லிக்கொடுத்தது?
மேலதிகாரியின் மகனிடம் 'சொல்லுங்க தம்பி...’ என்று மரியாதை பேசும் நாம், இஸ்திரி வண்டிக்காரர், ஆட்டோக்காரர், துணிக் கடை விற்பனையாளர், ஹோட்டல் சிப்பந்திகளை வயது வித்தியாசம் இல்லாமல் ஒருமையில் விளிக்கிறோம்.
மேலிருந்து கீழ் நோக்கி நகரும் அதிகாரம் ஒரு நாகரிக சமுதாயத்தின் அடையாளம்இல்லை. 'இல்லாதவர்கள் அப்படியே இருக்கட்டும் அதுதான் நமக்கு நல்லது’ என்ற யதேச்சதிகார, ஆதிக்கமனப் பான்மை நம்மையறியாமல் நமக்குள் புரையோடிக் கிடக்கிறது.
எதிர்க்கும் சக்தி இல்லாத மனிதர்களிடம் அதிகாரத்தையும் புத்திசாலித் தனத்தையும் வெளிப்படுத்துவதன் மூலம் நாம் சுய அளவில் தாழ்ந்து போகிறோம் என்ற படிப்பினை நமக்குச் சொல்லித்தரப்படாமலே போய்விட்டது.
கடையிலோ, வீட்டிலோ ஒரு பொருள் காணாமல் போனால் முதலில் நம் கண்கள்தேடுவது கடைநிலை ஊழியரைத்தான். இன்ஷூரன்ஸ் பாலிசி விஷயமாகப் பேச வருபவரை நடுவீட்டில் அமர வைத்துப் பேசும் நாம், தண்ணீர் கேன் கொண்டு வரும் பையனின் பின்னாலேயே போகிறோம். வசதியற்றவனுக்கும் சுயமரியாதை, கொள்கைகள், நற்குணங்கள் உண்டு என்பதை ஏன் இந்த மிடில்கிளாஸ் மனசு ஏற்க மறுக்கிறது?
அதிகாரம் படைத்தவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் கெட்டவர்களாக இருந்தாலும் அவர்களை அப்படியே ஏற்றுக் கொள்கிற அல்லது பொறுத்துக் கொள்கிற நம் மனம்,இல்லாதவனின் ஏழ்மையை மட்டும் சந்தேகக் கண்ணுடனேயே உற்று நோக்குகிறது!
'என்னது உன் புள்ள மெட்ரிகுலேசன் ஸ்கூல்ல படிக்கிறானா?’ என்று வீட்டைக் கூட்டிப் பெருக்க வரும் அம்மாவிடம் கேட்கும் கேள்விக்குப் பின்னால், 'இவருக்கு ஏது இவ்வளவு காசு?’ என்ற குரூரம் ஒளிந்திருக்கிறது.
நலிந்த மனிதர்கள் மீது நம்பிக்கை வைக்கத் தயங்குகிற சமூகம்,
கோழைத் தனமான சமூகம்.
'வலிமையில்லாதவன் அவனுக்கான வரம்புக்குள்தான் கனவு காண வேண்டும்’ என்று உலகில் எந்தச் சட்டமும் விதிக்கப்படவில்லை.
இல்லாதவன் எப்போதும் இயலாதவனாகவே இருந்தால், நமக்கு அது சௌகர்யம் என்று எண்ணுகிறோம். அதனால்தான் எளியவர்களின் கனவுகளைச் சீண்டுகிறோம். அதைமுளையிலேயே கிள்ளிஎறிய முனைகிறோம்.
பலம் படைத்தவர் ஒருவிதமாகவும், பலமற்றவர்களை வேறுவிதமாகவும் நடத்துவதுஅடிப்படை ஜனநாயகமுறைக்கு புறம்பானதாயிற்றே!
அன்றாட வாழ்க்கையில் அப்படிச் செயல் படும் நமக்கு அரசியல் வாதிகளைக் கேள்வி கேட்க என்ன உரிமை இருக்கிறது..???
சூப்பர் மார்கெட்டில் பாலீத்தீன் உறையில் அழகாக பேக் செய்யப்பட்ட வெண்டைக் காய்களை வாங்குவதற்கு முன்னால், நுனி உடைத்துப் பார்க்க உரிமை இல்லை. அங்கே வாய் பேசாமல் வாங்கிக் கொண்டு வருகிறோம்.
ஆனால், வாங்கும் பொருள் நன்றாக இருக்கிறதா என்று பரிசோதித்து வாங்க அனுமதிக்கிற வண்டிக்கார அம்மாவிடம் ஊர், உலக நியாயம் எல்லாம் பேசுகிறோம். அடக்க விலைக்கே கட்டாத நம் பேரத்தால் ஒரு கட்டத்தில்வெறுத்துப் போய், 'வேணும்னா வாங்கிக்க... வேணாட்டி போ’ என்று சொல்லும் போது, அந்த வண்டிக்காரம்மா திமிர் பிடித்தவர் ஆகிறார்.
ஒரு உண்மையை உணர்ந்திருக்கிறீர்களா..???
எளியவர்கள் பெரும்பாலும் நம் குரலுக்கு மரியாதை கொடுக்கிறார்கள். பதிலுக்கு அவர்களின் குரலுக்கு மனசைக் கொடுக்க வேண்டியது மானுடத்தின் கடமை.
அதிகாரம் எப்போதும் மேலிருந்து கீழாகப் பாய்கிறது. அந்தப் பாய்ச்சல் ஒவ்வொரு மனிதனையும் துன்புறுத்துகிறது.
அதிகாரக் கட்டமைப்பின் கடை நிலையில் இருக்கும் எளியவன், தனக்கு மேலிருக்கும் அனைவரின் அடிகளையும் தாங்கிக் கொண்டு காயங்களோடு அழுகிறான்.
'நம்மிடம் சேரும் காசு, பணம், செல்வாக்கு எல்லாம் எளியவர்களை அதிகாரம் செய்வதற்கான வாய்ப்புகள் அல்ல...’ என்பதை நாம் எப்போது உணர்வோம்?
சமூகத்தில் நம்மைச் சுற்றி நிகழ்பவை எல்லாம், 'இயலாத மனிதர்கள்தான் அதிகாரம் செய்யத் தோதானவர்கள்’ என்ற தோற்றத்தை முன்வைக்கின்றன.
லட்சக்கணக்கில் ஊழல் மோசடி புரிந்தவனுக்கு ஏ.சி. அறையில் விசாரணை நடக்கிறது. பிக்பாக்கெட் அடித்தவனைக் குத்த வைத்துக் கும்முகிறார்கள்.
பீரோவைத் திறந்து அப்பா பணத்தில் 5,000 ரூபாயைத் திருடுகிறவனை, 'பணக்கார வீட்டுப் புள்ள அப்படி இப்படித்தான் இருப்பான்’ என்று சாதாரணமாகச் சொல்லும் சமூகம், இஸ்திரி துணியைக் கொடுக்கவந்த சிறுவன் கரடி பொம்மையைக் கையில் எடுத்து ஆசையாகப் பார்த்தால், முன்னெச்சரிக்கையுடன் அந்த பொம்மையை எடுத்து உள்ளே வைக்கிறது.
இந்த உலகத்தில் எல்லா மனிதர்களும் கெட்டவர்கள் என்று சித்தரிப்பதைப் போல இந்தக் கட்டுரை சிலருக்குப் படலாம். ஆனால் நான், நீங்கள் என நம் எல்லோருக்குள்ளும் ஊறிப் போயிருக்கும் நாம் கவனிக்காத மன உணர்வின்விவரணைகள் தான் இவை.
நியாயப்படி, அதிகாரம் என்பது இல்லாதவர்களின் ஏக்கங்களைத் தீர்க்கவும், அவர்களின் சுயமரியாதைக்கு எதிராக அநீதி நடக்கும்போது அதைத் தட்டிக் கேட்கவும் பயன்பட வேண்டும்.
இருக்கிறவன், இல்லாதவன் என அனைவரின் மனமும் கனவுகளாலும், உணர்வுகளாலும் நிரம்பியிருக்கிறது என்று நாம் ஒவ்வொருவரும் உண்மையாக உணரும்வரை அது சாத்தியமில்லை.
இங்கு எல்லா மனிதரும் ஒன்றுதான். மூச்சுக்கு முந்நூறு தடவை ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தை பேசுகிற அதிகாரம் படைத்த அதிகாரி பேசுவது சரி என்றால், டீக்கடை முக்கில் தமிழில் கெட்ட வார்த்தை பேசுகிற மனிதரின் பேச்சும் சரிதான்.
'3,500 ரூபாய்க்கு வாங்கின செருப்பைத் தைக்க 30 ரூபாய் கூலி கேட்கிறியே... இது அடுக்குமா’ என்ற கேள்விக்குப் பின், '3,500 ரூபாய் கொடுத்து செருப்பு வாங்குன நீங்க, அதைத் தைக்க 30 ரூபாய் கொடுத்தா குறைஞ்சா போயிடுவீங்க’ என்ற பதிலும் இருக்கிறது....

-சுபாமோகன்

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி