சமையல் என்பது சிறந்த உளவளத்துணை
சமையல் என்பது கலை அல்லது இயலுமை என்பதை தாண்டி மிச்சிறந்ததொரு மருந்து.
எவ்வளவு பெரிய மனக்குழப்பமாக இருந்தாலும் , வேதனையாக இருந்தாலும் தாங்கவே முடியாத துயரங்களாக இருந்தாலும் எல்லை மீறத் துடிக்கும் கோபமாக இருந்தாலும் அடுப்பங்கரைக்குள் புகுந்து
மொத்த உணர்ச்சிகளையும் அந்த மெல்லிய வெம்மையில் , கதகதப்பில் பொசுக்கி விட முடியும்.
அம்மாவின் மடி தொலைவாக உள்ள நேரங்களில் எல்லாம் அவளது கைப்பக்குவத்திலிருந்து கடன் வாங்கி கொண்டதை அசை மீட்டி உயிர் கொடுக்கும் போது எழுகிற சுகந்தத்தில் அம்மாவின் வாசமும் சாயையும் கசிந்து கிடக்கும்.
ஒரு ஓவியம் வரைவதை போல, கவிதை எழுதுவதை போல, பிடித்த பாடலை ஹம் செய்வதை போல மனதுக்கு பிடித்த ஒருவரின் கை கோர்த்து நடக்கும் அந்திநேர நடைகளை போல ஒரு உணவை சரியாக செய்வதென்பது பேரின்பம்.
ஒரு உணவு தயாராகிற வாசனையில், சட்டிக்குள் கொதிக்கும் எண்ணெயில் , காய்கறி அரிகிற ஓசையில் மனம் அத்தனை எளிதாக ஒரு நிலைக்கு வந்து தொலைத்து விட்ட சுயத்தை காலடியில் தந்து விடும்.
எவ்வளவு பெரிய மகிழ்ச்சியாக இருந்தாலும் , மொழியின் விபரணங்களை கடந்த அன்பாக இருந்தாலும் அதை உணவு வழி வெளிப்படுத்தி விட முடியும்.
உதவிக்கு யாரையும் வைத்து கொள்ளாமல் கரண்டியை கையில் பிடித்து கொண்டு ஒரு உணவை புதிதாக முயற்சிக்கும் ஒவ்வொரு தடவையும் ஒரு புதிய உலகத்தின் ஏகாதிபதியாகி விடுகிற பேரின்பம் சொல்லி விட முடியாதது.
Comments