இந்த உணவுகளை வெறும் வயிற்றில் பருகினால்
இந்த உணவுகளை வெறும் வயிற்றில் பருகினால்.
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சில வகை பானங்களை பருகும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். இரவில் சாப்பிட்ட பிறகு 8-9 மணி நேரம் கழித்து வெறும் வயிற்றில் எழுந்திருக்கும்போது முதலில் சாப்பிடுவதை வயிறு, குடல் சட்டென்று உறிஞ்சிவிடும். வெறும் வயிற்றில் திரவ உணவுகளை பருகுவது நச்சுக்களை வெளியேற்றவும், பசியை அதிகரிக்கவும், எடையை குறைக்கவும், சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும்.
வெறும் வயிற்றில் என்னென்ன பானங்களை பருகலாம்? அதனால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
மஞ்சள் பால்: இந்திய உணவுகளில் மஞ்சள் சிறந்த ஆன்டி ஆக்சிடென்டுகளை கொண்டது. இது அனைத்து விதமான அழற்சியையும் போக்கும். குறிப்பாக சுவாச பிரச்சினைகளுக்கு சிறந்த நிவாரணியாக செயல்படக்கூடியது. சளி, இருமல் போன்ற பல்வேறு பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
ஒரு கப் சூடான பாலில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து கலக்க வேண்டும். சுவைக்கு தேன் அல்லது சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளலாம். தினமும் காலையில் எழுந்ததும் இந்த மஞ்சள் பாலை பருகலாம். இரவில் தூங்க செல்வதற்கு முன்பும் பருகலாம். மஞ்சள் பாலுடன் மிளகு, கிராம்பு சேர்த்தும் பருகலாம். இது தொண்டை புண்களையும் ஆற்றும்.
சீரக நீர்: வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் பருகுவது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும். எடை குறைப்புக்கும் வழிவகுக்கும். எடையை குறைப்பதன் மூலம் வளர்சிதை மாற்ற விகிதத்தை மேம்படுத்தலாம். இரண்டு கப் தண்ணீரில் இரண்டு தேக்கரண்டி சீரகத்தை போட்டு கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை அணைத்து விட்டு அந்த நீரை வடிகட்டி பருகலாம். தேவைப்பட்டால் சிறிதளவு உப்பு சேர்த்துக்கொள்ளலாம்.
துளசி டீ: காலையில் எழுந்ததும் துளசி சாறு அல்லது துளசி டீ பருகுவது செரிமான செயல்முறையை எளிமையாக்க உதவும். குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். ஒரு கப் சூடான நீரில் சிறிதளவு துளசி சாறு கலந்தும் பருகலாம். சுவைக்கு சிறிதளவு தேன் சேர்த்துக்கொள்ளலாம்.
இஞ்சி பானம்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் பானம் இது. ஒரு கப் சூடான நீரில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து ஆற விடவும். பின்னர் உலர்ந்த சாமந்தி பூ, இஞ்சி, ஆரஞ்சு தோல், லவங்கப்பட்டை, ஏலக்காய் போன்றவற்றை சிறிதளவு சேர்ந்து கொதிக்கவிடவும். கொதிக்க தொடங்கியதும் இறக்கி ஆறவைத்து பருகலாம். இந்த இஞ்சி பானம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது.
கொத்தமல்லி பானம்: கொத்த மல்லி விதையில் இருந்து தயாரிக்கப்படும் நீரை பருகுவது ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும். ஒரு டம்ளர் நீரில் ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதைகளை போட்டு இரவில் ஊறவைக்கவும். காலையில் அந்த நீரை வடிகட்டி பருகிவிடலாம். பின்பு கொத்தமல்லி விதைகளை சமையலுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
வேப்ப இலை டீ: வேப்ப இலையில் பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை சரும ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. 2 வேப்ப இலைகள், 4 துளசி இலைகள், ஒரு துண்டு இஞ்சி ஆகியவற்றை ஒரு கப் தண்ணீரில் ஊற விடவும். அதில் 2 மிளகு, 2 கிராம்புகளை பொடித்து சேர்த்துக்கொள்ளவும். இந்த கலவையை இரண்டு நிமிடங்கள் கொதிக்க விட்டு வடிகட்டிக்கொள்ளவும். ஓரளவு ஆறியதும் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து பருகலாம். இந்த டீயை ஒரு வாரம் தொடர்ந்து பருகி வந்தால் சருமம் பொலிவு பெறும்.
காலையில் டீ, காபிக்கு மாற்றாக மேற்கூறியவற்றுள் ஏதாவது ஒன்றை பருகுவது உள் உறுப்புகளின் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும். இதனை பருக விரும்பாதவர்கள் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை பருகலாம்.
Comments