ஷெனாய் இசை மேதை
ஷெனாய் இசை மேதை
‘பாரத ரத்னா’ உஸ்தாத் பிஸ்மில்லா கான் (Ustad Bismillah Khan) நினைவு தினம் இன்று.
பிஹார் மாநிலம் தும்ரான் கிராமத்தில் (1916) பிறந்தார். பெற் றோர் வைத்த பெயர் கமருதீன். குழந்தை யைப் பார்க்க வந்த தாத்தா ‘பிஸ்மில்லா’ என்று அழைத்தார். அந்த பெயரே நிலைத்து விட்டது.
இவரது மாமா அலி பக் ஷ், காசி விசுவநாதர் ஆலயத்தில் இசைச் சேவை செய்தவர். 3 வயது குழந்தையாக இருந்தபோதே அதை மெய்மறந்து கேட்டார் பிஸ்மில்லா. பிறகு மாமாவே குருவானார். கங்கைக் கரையோரம் உள்ள பாலாஜி ஆலயத்தில் இவருக்கு ஷெனாய் பயிற்றுவித்தார்.
மாமா இறந்த பிறகு தானாகவே பயிற்சி செய்து தும்ரி, சைத்தி, கஜ்ரி, ஸவானி ஆகிய இசை வடிவங்களில் நிபுணத்துவம் பெற்றார். கயால் (Khayal) இசையிலும் வல்லுநர் ஆனார். கொல்கத்தாவில் 1937-ல் நடந்த தேசிய இசை மாநாட்டில் தனது அற்புத இசையால் அனைவரையும் கவர்ந்தார்.
1938-ல் லக்னோ அகில இந்திய வானொலியில் ஷெனாய் இசைத்தார். அதன் பிறகு வானொலியில் அடிக்கடி இவரது இசை உலா வந்தது. அனைத்துக்கும் பாலாஜியின் அருளே காரணம் என்பார்.
கல்யாண வீடுகளில் மட்டுமே இசைக்கப்பட்ட ஷெனாய் இசைக் கருவியை சாஸ்திரீய கச்சேரி மேடைக்கு கொண்டுவந்து உலகப்புகழ் பெறவைத்தார். உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். ஆப்கானிஸ்தான், ஐரோப்பிய நாடுகள், வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் என்று உலகம் முழுவதும் இவருக்கு மாபெரும் ரசிகர் கூட்டம் உண்டு. இந்தியாவிலும் இவரது கால்படாத முக்கிய நகரங்களே இல்லை.
கூஞ்ச் உடீ ஷெனாய் உள்ளிட்ட சில திரைப்படங்களில் ஷெனாய் வாசித்துள்ளார். ஜல்சாகர் என்ற படத்தில் நடித்துள்ளார்.
பனாரஸ், சாந்தி நிகேதன் உள்ளிட்ட பல பல்கலைக் கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கின. சங்கீத நாடக அகாடமி விருது முதல் பத்மபூஷண் வரை ஏராளமான விருதுகளைப் பெற்றவர். 2001-ல் நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ வழங்கப்பட்டது.
1947-ல் இந்திய சுதந்திரம் செங்கோட்டையில் இவரது இசையுடன்தான் பிறந்தது. 1950-ல் நாட்டின் முதல் குடியரசு தின விழாவிலும் இவரது இசை இடம்பெற்றது. தேசிய அளவிலான முக்கிய விழாக்கள் எதுவும் இவரது இசை இல்லாமல் நடந்ததில்லை.
கங்கா மாயி (அன்னை கங்கா) என்று கங்கையைப் போற்றியபடி தன் வாழ்நாள் முழுவதும் காசியில் கழித்தவர். எளிமையாக வாழ்ந்தவர். காசி நகர தெருக்களில் சைக்கிள் ரிக் ஷாவில்தான் போய்வருவார். இவரைத் தேடி வருபவர்களுக்கு வீட்டில் எந்நேரத்திலும் உணவு இருக்கும்.
Comments