தமிழக சட்டசபை கூட்டத்தொடர்
: தமிழக சட்டசபை கூட்டத்தொடர், நாளை மறுதினம் துவங்கி, செப்., 21 வரை நடக்கும்,'' என, சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
தமிழக சட்டசபையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்வதற்காக, சட்டசபை அலுவல் ஆய்வு கூட்டம் நேற்று காலை 11:00 மணிக்கு, சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்தது.
கூட்டம் முடிந்த பின், அப்பாவு அளித்த பேட்டி:
சட்டசபை அலுவல் ஆய்வு கூட்டத்தில், எந்தெந்த துறை மானிய கோரிக்கையை என்று நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 13ம் தேதி, நிதி அமைச்சர் தியாகராஜன், பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார்.
கையடக்க கணினி
முதன் முதலாக, காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அனைத்து எம்.எல்.ஏ.,க்கள் இருக்கை முன், கணினி பொருத்தப்பட்டுள்ளது.
அதில், நிதி அமைச்சர் வாசிக்கும் பக்கம் ஒளிரும். இது தவிர, அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும், கையடக்க கணினியும் வழங்கப்படும்.
இதில் பட்ஜெட் புத்தகத்தை புரட்டுவது போல், பக்கங்களை இடது, வலது புறமாக, மேலும் கீழும் நகர்த்தி பார்க்கலாம்.
அடுத்து கவர்னர் உரையில் குறிப்பிட்டது போல, தமிழகத்தில் முதல் முறையாக, வேளாண்மை துறைக்கு, தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இது தொடர்பாக, அரசு அளித்த அறிக்கை ஏற்கப்பட்டு, வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய, கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. வரும் 14ம் தேதி வேளாண் பட்ஜெட்டை, வேளாண் துறை அமைச்சர் தாக்கல் செய்வார்.
அதைத் தொடர்ந்து, பட்ஜெட்டுகள் மீதான விவாதம், நான்கு நாட்கள் நடக்கும். நான்காம் நாள் முடிவில், நிதி அமைச்சர் தியாகராஜன், வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் பதிலுரை வழங்குவர்.
அதன்பின், ஆக., 23 முதல் செப்., 21 வரை 23 நாட்கள் பொது மானிய கோரிக்கைகள், அமைச்சர்களால் சட்டசபையில் தாக்கல் செய்யப்படும். அதன் மீது விவாதம் நடந்து, அமைச்சர்கள் பதில் அளிப்பர்.
கேள்வி நேரம்
எம்.எல்.ஏ.,க்கள் அனைவருக்கும், கையடக்க கணினி மற்றும் கணினி இயக்குவது குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
கொரோனா காரணமாக, கேள்விகளுக்கு சரியான அளவு பதில் வந்து சேரவில்லை.எனவே, போதுமான கேள்வி, பதில் வந்த பின்னரே, கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.துணை சபாநாயகர்பிச்சாண்டி, அரசு தலைமை கொறடா கோவி.செழியன், சட்டசபை செயலர் சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.
அ.தி.மு.க., புறக்கணிப்பு!
சட்டசபை அலுவல் ஆய்வுக் கூட்டம், நேற்று காலை 11:00 மணிக்கு நடந்த நிலையில், காலை முதல் சட்டசபை எதிர்க்கட்சி கொறடாவும், முன்னாள் அமைச்சருமான வேலுமணி வீட்டில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
இதன் காரணமாக, அ.தி.மு.க., தரப்பில், அலுவல் ஆய்வுக் கூட்டத்திற்கு யாரும் வரவில்லை.
#TNAssembly
Comments