உடல் முழுதும் இறக்கைகளோடு/கவிதா லட்சுமி
உடல் முழுதும் இறக்கைகளோடு
முதலாம் நூற்றாண்டின் சிற்பிகள் வசிக்கும்
நகரத்திற்குள் அவள் பிரவேசித்தாள்
அவளது ஆக்கும் திறனோடு மோதி
பெருமதில்கள் உடைந்தன
ஆங்காங்கே நின்ற விருட்ச மரங்களின்
கிளைகளோடும் இலைகளோடும் அவள் பாடினாள்
நட்சத்திரங்களை சலங்கையாக்கி
சிறுமி ஆடிக்கொண்டிருந்த பொழுதில்
சிற்பிகள் வந்தார்கள்
சிறுமியின் ஆற்றலிலும்,
ஆடலிலும், வனப்பிலும்
அவளை தம் பெண்தெய்வங்கள்
வீற்றிருந்த கோவில்களில்
வாஞ்சையோடு
மீண்டும் சிலை வடிக்கத் தொடங்கினர்
பெரும் பாறைகளின்று பெயர்த்து
தன்னிலிருந்த துகள்களைத் தட்டியபடி
உங்கள் உளியை என்னிடம் தருவீர்களானால்
எனது ஆற்றலையும் சிந்தனையையும்
நான் தருகிறேன்
என அவள் பேசத்தொடங்கினாள்
கவிதா லட்சுமி
நூல்: சிகண்டி
Comments