பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் மணிப்பூர் ஆளுநராக நியமனம்
பாஜக மூத்த தலைவர் இல.கணேசனை மணிப்பூர் ஆளுநராக நியமித்து இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூரில், 16.2.1945-ல் இலக்குமி ராகவன் - அலமேலு தம்பதியின் ஒன்பது குழந்தைகளில் ஏழாவது பிள்ளையாகப் பிறந்தவர் இல.கணேசன். தந்தை பலசரக்குக் கடைக்காரர், பத்திரிகை முகவராகவும் இருந்தவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்துவிட்டதால், அண்ணன்களின் அரவணைப்பிலேயே வளர்ந்தார் கணேசன்.
1991-ல் பாஜகவில் தேசிய செயற்குழு உறுப்பினரான கணேசன் விரைவிலேயே மாநில அமைப்புச் செயலாளர் ஆனார். பாஜகவில் மாநிலத் தலைவருக்கு நிகரான அதிகாரம் கொண்ட முக்கியமான பதவி இது. ஆர்எஸ்எஸ்தான் அப்பதவியை நிரப்பும். அந்தப் பதவியிலிருந்தபடிதான் தமிழ்நாட்டில் கட்சியை வளர்த்தார் கணேசன்.
பாஜக செயற்குழு உறுப்பினராக 31 ஆண்டுகளாக இருக்கும் கணேசன், இடையில் தேசியச் செயலாளர், தேசிய துணைத் தலைவர், மாநிலத் தலைவர் பதவிகளிலும் இருந்தார். தென்சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாலும், மாநிலங்களவை உறுப்பினராக்கி இவரை அழகுபார்த்தது பாஜக.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் இல.கணேசனை மணிப்பூர் ஆளுநராக நியமித்து இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கெனவே தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தர்ராஜன், தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி: இந்து தமிழ்திசை
Comments