கத்தரிக்காய் மொச்சை பொரியல்
கத்தரிக்காய் மொச்சை பொரியல்
மனதில் நிற்கும் கிராமத்து சுவையில் செய்யக்கூடிய கத்தரிக்காய் மொச்சை பொரியலை எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் – கால் கிலோ, பச்சை மொச்சை – 100 கிராம், பூண்டு – 4 பல், இஞ்சி – சிறிய துண்டு, சின்ன வெங்காயம் – 10, தக்காளி – 4, நல்லெண்ணெய் – 4 ஸ்பூன், சோம்பு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், மிளகாய்த் தூள் – ஒன்றரை ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன்.
செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் மொச்சை பயறை சேர்த்து அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் மற்றும் கால் ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும். பின்னர் வெங்காயம், தக்காளியை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதேபோல் கத்தரிக்காயையும் சொத்தை இல்லாமல் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் நன்றாக காய்ந்ததும் சோம்பு போட்டு தாளித்து அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். இவை பொன்னிறமாக வதங்கியவுடன் இவற்றுடன் கத்தரிக்காயை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி கொண்டு, அதன் பின் வேக வைத்த மொச்சை பயிறையும் இவற்றுடன் சேர்த்து நன்றாக கலந்து விட்டு வதக்கிக் கொள்ள வேண்டும்.
இவை அனைத்தும் எண்ணெயில் சிறிது நேரம் வதங்கியதும் மஞ்சள்தூள் மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து ஒரு முறை நன்றாக வதக்கி, அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும். அடுப்பினை சிறிய தீயில் வைத்து, கடாயை மூடி, ஏழு நிமிடங்கள் அப்படியே வேக வைக்க வேண்டும். பிறகு ஒரு தாளிப்பு கரண்டியில் மீதமுள்ள எண்ணெயை சேர்த்து எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, சீரகம் போட்டு தாளிக்க வேண்டும். பின்னர் அதனுடன் இஞ்சி மற்றும் பூண்டினை நன்றாக நசுக்கி சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த தாளிப்பை கத்தரிக்காய் மொச்சை பயறுடன் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும். இறுதியாக கொத்தமல்லி இழைகளை தூவி அடுப்பிலிருந்து இறக்க வேண்டும்
இந்த கத்தரிக்காய் மொச்சைப் பயறு பொரியலை செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு சாப்பிடக் கொடுத்தால் உங்களுக்கு பாராட்டு கிடைப்பது உறுதி.
Comments