உடற்பயிற்சிகள் நம் நினைவாற்றலை கூர்மையாக வைத்திருக்க உதவுமா.?
உடற்பயிற்சிகள் நம் நினைவாற்றலை கூர்மையாக வைத்திருக்க உதவுமா.?
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சுவாரஸியமான புதிய ஆய்வில் வழக்கமான உடற்பயிற்சிகள் மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வாய்ப்புகள் இருப்பது தெரிய வந்துள்ளது. உடற்பயிற்சியின் போது தசைகளால் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன் ஒன்று மூளைக்குள் சென்று நியூரான்களின் ஆரோக்கியத்தையும் செயல்பாட்டையும் மேம்படுத்துவதால் சிந்தனை மற்றும் நினைவாற்றலை கூர்மையாக இருக்கும் என்பது இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வுக்கு எலிகள் பயன்படுத்தப்பட்டன.
இதற்கு முந்தைய ஆய்வில் உடற்பயிற்சிகளை செய்யும் போது மனிதர்களும் எலிகள் உற்பத்தி செய்த அதே ஹார்மோன்களை உற்பத்தி செய்தது கண்டறியப்பட்டது. ஐரிசின் (Irisin) என்ற ஹார்மோன்களே நாம் உடற்பயிற்சி செய்யும் போது நம் உடலில் உற்பத்தி ஆகிறது. மேலும் இதனுடன் கூடிய கண்டுபிடிப்புகள் வயதான மற்றும் டிமென்ஷியாவால் ஏற்படும் நினைவாற்றல் பாதிப்பை தினசரி நடைபயிற்சி மாற்றக்கூடும் என்றும் கூறுகின்றன.
உடற்பயிற்சி மூளைக்கு நல்லது என்பதற்கு ஏற்கனவே ஏராளமான சான்றுகள் உள்ளன. உடற்பயிற்சிகள் மூளையின் நினைவு மையத்தில் புதிய நியூரான்கள் உருவாவதை தூண்டுகின்றன. இந்த புதிய நியூரான்கள் அந்த புதிய செல்கள் உயிர்வாழவும், முதிர்ச்சியடையவும், மூளையின் நரம்பியல் நெட்வொர்க்குகளுடன் ஒருங்கிணைக்கவும் உதவுகின்றன. உடற்பயிற்சிகள் செய்வதால் உருவாகும் புதிய நியூரான்கள் சிந்திக்கவும், நினைவு திறனுக்கும் உதவுகின்றன. இதுவரை நடத்தப்பட்ட பெரிய அளவிலான தொற்றுநோயியல் ஆய்வுகள் (epidemiological studies) அரிதாக உடற்பயிற்சி செய்பவர்களை விட, வழக்கமாக உடற்பயிற்சியில் ஈடுபடும் சுறுசுறுப்பான மக்கள் அல்சைமர் நோய் மற்றும் பிற வகையான டிமென்ஷியாவை உருவாக்கும் வாய்ப்பு மிக குறைவு என்பதை காட்டுகின்றன.
கடந்த 2012-ஆம் ஆண்டில், டானா-ஃபார்பர் புற்றுநோய் நிறுவனம் மற்றும் ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியை சேர்ந்த (Dana-Farber Cancer Institute and Harvard Medical School) சில ஆராய்ச்சியாளர்கள, ஆய்வகத்தில் இருக்கும் கொறித்துண்ணிகளை தொடர் பரிசோதனையில் ஈடுபடுத்திய போது இதுவரை அறியப்படாத ஹார்மோன் அடையாளம் காணப்பட்டது. இந்த ஹார்மோனுக்கு தான் ஐரிசின் பெயரிடப்பட்டது. மேலும் ஐரிசின் ஹார்மோன், brown fat-ஐ உருவாக்க உதவுவதன் மூலம், நமது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுவதும் தொடர்ந்து கண்டறியப்பட்டது. இதனிடையே டாக்டர் ஸ்பீகல்மேன் மற்றும் அவரது சக ஆராய்ச்சியாளர்களுக்கு மூளை ஆரோக்கியத்தில் ஐரிசின் ஹார்மோனின் பங்கு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.
2019-ல் மற்ற ஆராய்ச்சியாளர்களின் ஆய்வில் உடற்பயிற்சிக்கு பின்னர் எலிகளின் மூளையில் ஐரிசின் உற்பத்தியாவது தெரிய வந்தது. மூளை வங்கிக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பெரும்பாலான மனித மூளையில் ஆய்வுகள் செய்யப்பட்டன. இதில் அல்சைமர் நோய் இல்லாமல் மரணமடைந்தவர்களின் மூளையில் குறிப்பிட்ட ஹார்மோன் இருப்பதும் கண்டறியப்பட்டது. எனவே இந்த ஆய்வு முடிவு ஐரிசின் ஹார்மோன்கள், டிமென்ஷியா அபாயத்தை குறைப்பதாக கூறியது.
இதனிடையே சமீபத்தில் டாக்டர் ஸ்பீகல்மேன் மற்றும் அவரது சக ஆய்வாளர்கள் தங்களது புதிய ஆய்வை, ஐரிசின் ஹார்மோனை உற்பத்தி செய்ய இயலாத எலிகளை இனப்பெருக்கம் செய்வதன் மூலம் தொடங்கினர். பின்னர் சாதாரண பிற பெரிய எலிகளை சக்கரங்களை கட்டி சில நாட்கள் நடக்க வைத்தனர். இந்த வகை உடற்பயிற்சி பொதுவாக நினைவாற்றல் மற்றும் சிந்திக்கும் திறனை மேம்படுத்துகிறது. ஆய்வின் முடிவில் ஐரிசின் ஹார்மோனை உருவாக்க முடியாத விலங்குகள் இந்த வகை உடற்பயிற்சி காரணமாக அறிவாற்றல் முன்னேற்றத்தை பெரிதாக காட்டவில்லை. இதனை அடுத்து சிந்தனையை மேம்படுத்த உடற்பயிற்சிக்கு ஐரிசின் ஹார்மோன்கள் முக்கியம் என்று முடிவுக்கு முன்னணி ஆராய்ச்சியாளர்கள் வந்தனர்.
ஒட்டுமொத்தமாக எடுத்து கொண்டால், தங்களது புதிய பரிசோதனைகள் "உடற்பயிற்சியை அறிவாற்றலுடன் இணைப்பதில்" ஐரிசின் ஹார்மோன் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்பது உறுதியாக தெரிகிறது என டாக்டர். ஸ்பீகல்மேன் கூறியுள்ளார். எவ்வாறாயினும், இது ஒரு சிறியளவிலான ஆய்வு. கொறித்துண்ணிகளைப் போல நம் மூளை ஐரிசின் ஹார்மோனால் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துகிறதா என்பதை முழுமையாக்க இன்னும் நிறைய ஆய்வுகள் தேவை. அதே போல எந்த வகை உடற்பயிற்சிகள் நமது ஐரிசின் அளவை அதிகரிக்க முடியும் என்பது தொடர்பாகவும் இன்னும் ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன.
Comments