எலும்பு பலவீனம்: ஏன்?

 எலும்பு பலவீனம்: ஏன்? எப்படி?




மூளை, இதயம் போன்ற உடலின் முக்கியமான உள் உறுப்புகள் எலும்புகளால் பாதுகாக்கப்படுகின்றன. உடலின் கடினமான உறுப்பாக கருதப்படும் எலும்பு, முழு உடல் கட்டமைப்புக்கும் பாதுகாப்பு கேடயமாக விளங்குகிறது. கடுமையான காயங்கள் ஏற்படாமலும் பாதுகாக்கிறது. உடலின் ஒட்டுமொத்த இயக்கத்திற்கும் துணைபுரிகிறது. எலும்புகள் இல்லாமல் மனிதர்களால் செயல்பட முடியாது.


எலும்புகள் பலவீனமாக இருந்தால் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படும். முதுமையில் உடல்நல குறைபாடுகள் ஏற்படுவதற்கு எலும்புகள் பலவீனமடைவதும் ஒரு காரணம். வைட்டமின் டி, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள்தான் எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவுகின்றன. அந்த சத்துக்கள் உடலில் குறையும்போது எலும்புகள் பலவீனமடையும். ஆனால் எலும்புகள் பலவீனமடைவதற்கு அவை மட்டுமே காரணமில்லை. வேறு பல காரணங்களும் இருக்கின்றன. அவற்றுள் முக்கியமானவற்றை பார்ப்போம்.


புகைப்பழக்கம்:


பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு புகைப்பழக்கம் முக்கிய காரணமாக இருக்கிறது. புகையிலை பொருட்களும் எலும்பு அடர்த்தியின் அளவை குறைக்கும் தன்மை கொண்டவை. எலும்புகளுக்கு கிடைக்கும் ஊட்டச்சத்துக்களை சிதைக்கக்கூடிய தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை உருவாக்கவும் புகைப்பழக்கம் காரணமாக இருக்கிறது. மெலிந்த தோற்றம் கொண்டவர்கள், உடற்பயிற்சி செய்யாதவர்கள் எளிதில் பாதிப்புக்குள்ளாகிவிடுவார்கள்.


மதுப்பழக்கம்:


எலும்புகள் பலவீனமடைவதற்கு மது அருந்துவதும் காரணமாக இருக்கிறது. அதிகமாக ஆல்ஹகால் உட்கொள்வது உடலில் கால்சியம் உறிஞ்சப்படும் அளவை குறைத்துவிடும். தொடர்ந்து மது அருந்துவது எலும்புகளில் உள்ள கால்சியத்தின் அளவையும் குறைத்துவிடும். இதன் விளைவாக எலும்புகளின் ஆரோக்கியம் நாளுக்கு நாள் பலவீனமடையும். எனவே எலும்புகளின் நலனை பாதுகாக்க மது அருந்துவதை தவிர்ப்பது நல்லது.


உப்பு:


அதிக உப்பு உட்கொள்வது எலும்புகளின் அடர்த்தியை குறைக்கும் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. உப்பில் உள்ள சோடியத்தின் அளவு அதிகரிக்கும்போது அது சிறுநீர் மூலம் அதிக கால்சியத்தை வெளியேற்ற தொடங்கும். இந்த செயல்பாடு எலும்புகளை பலவீனப்படுத்தும். வைட்டமின் டி, கால்சியம் கொண்ட ஊட்டச்சத்து உணவுகளை உட்கொள்வதோடு மேற்கண்ட பழக்கவழக்கங்களை தவிர்ப்பது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும்.


மருந்துகள்:


உடல்நலக்குறைவு ஏற்படும்போது சுயமாக சாப்பிடும் மருந்துகள் சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. அதுவும் எலும்புகள் பலவீனமடைய காரணமாக அமையலாம். ஆகையால் சுய மருத்துவத்தை ஒருபோதும் நாடா தீர்கள். அவை தேவையற்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடும். எந்தவொரு மருந்துகளையும் டாக்டர்களின் பரிந்துரை இல்லாமல் உட்கொள்ளாதீர்கள்.


உடற்பயிற்சியின்மை:


நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, ஓடுதல், நீச்சல், நடனம் போன்ற உடல் செயல்பாடுகளும் எலும்புகளின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எந்தவொரு உடல் இயக்க செயல்பாடும் இல்லாமல் தசைகள், எலும்புகளின் நலனை பேண முடியாது. எலும்புகள் பலவீனமடையும் அபாயத்தை தவிர்க்க சுறுசுறுப்பாக இயங்கவேண்டும். உடற்பயிற்சி மட்டுமின்றி யோகா போன்றவையும் எலும்புகளின் வலிமையை மேம்படுத்தும்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி