பிரியாணி சாம்ராஜ்யத்தின் தலைவன்

 

அன்று டீ கிளாஸ் கழுவிய சிறுவன்... இன்று பிரியாணி சாம்ராஜ்யத்தின் தலைவன்! 


தமிழ்ச்செல்வன் எனும் பெயர் கொண்ட அந்தச் சிறுவனுக்கு நான்கு வயது இருக்கும்போது அம்மா இறந்துவிடுகிறார். மனைவியின் மறைவு தந்த துக்கத்திற்குள் மூழ்கிய அவன் அப்பா, இறுதியில் மதுவிற்குள் மூழ்கிவிடுகிறார். பின், தன் அம்மாவின் அக்கா கவனிப்பில் வளர்க்கப்படுகிறான் தமிழ்ச்செல்வன். பெரியம்மா குடும்பத்தின் வறுமைச் சூழல் காரணமாக பள்ளிப்படிப்பை நான்காம் வகுப்பிற்குமேல் தொடர முடியவில்லை. பின், உள்ளூரில் இருந்த ஒரு டீக்கடைக்கு வேலைக்குச் செல்கிறான். டீ கிளாஸ் கழுவும் வேலை செய்து வந்த அந்தச் சிறுவனுக்கு ஒரு கட்டத்தில் தன்னுடைய உறவினர்கள் முன் அந்த வேலையைச் செய்வதற்குக் கூச்சமாக இருந்தது. டீக்கடை இருந்த தெருவில் உறவினர்கள் யாராவது வருவது தெரிந்தால் உடனே ஓடிச்சென்று கடைக்குள் ஒளிந்துகொள்கிறான்

ஒளிந்து ஒளிந்து வேலை பார்த்த அந்தச் சிறுவன், இதற்கு மேலும் இந்த வேலையைச் செய்ய வேண்டாம் என 13 வயதில் தீர்மானமாக முடிவெடுத்து சென்னை நோக்கி கிளம்புகிறான். கூலிக்கு மூட்டை தூக்கி பிழைத்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையுடன் வந்த அந்தச் சிறுவனை 20க்கும் மேற்பட்ட கிளைகளுடன் பிரியாணி ரசிகர்களின் முதன்மைத் தேர்வாக இருக்கும் சேலம் ஆர்.ஆர்.பிரியாணி உணவகத்தின் உரிமையாளராக்கி அழகு பார்த்தது சென்னை. வாழ்வாதாரத்திற்கு வழியில்லை என்று சொந்த ஊரிலிருந்து வெளியேறி வந்த தமிழ்ச்செல்வனுக்கு சரியான களம் ஏற்படுத்திக்கொடுத்தது சென்னையாக இருந்தாலும் அந்தக் களம் அத்தனை எளிதாக இருந்துவிடவில்லை. பல ஆண்டுகால போராட்டம்... நம்பிக்கை கலந்த கடின உழைப்பு... பல வலிகள் ஆகியவற்றிற்குப் பிறகே இந்த வெற்றி தமிழ்ச்செல்வனுக்கு வசப்பட்டது.   

 

"நான் சிறுவனாக இருக்கும்போதே அம்மா இறந்துவிட்டார். என்னுடைய பெரியம்மா வீட்டில்தான் வளர்ந்தேன். வறுமையான சூழல்களுக்கு இடையேதான் அவர் எங்களை வளர்த்தார். படிப்பு மீது ஆர்வம் இருந்ததால் நிறைய படிக்க வேண்டும் என ஆசை இருந்தது. நான் நன்றாகவும் படிப்பேன். ஆனால், அதற்கான சூழல் அமையவில்லை. வீட்டில் மண்ணெண்ணெய் குறைவாக இருந்தால் என் பெரியம்மா இரவு சீக்கிரமே விளக்கை அணைத்துவிடுவார். மண்ணெண்ணெய் தீர்ந்துவிட்டால் அதை வாங்குவதற்கு அவரிடம் பணம் இருக்காது. அத்தகைய நாட்களில் தெருவிளக்கு வெளிச்சத்தில் உட்கார்ந்து படிப்பேன். நான்காம் வகுப்பு படிக்கும்போது என்னிடம் உடைந்த சிலேடுதான் இருந்தது. புது சிலேடு வாங்கச் சொல்லி ஆசிரியர் கூறினார். என்னிடம் பணமில்லாதக் காரணத்தால் புது சிலேடு வாங்கமுடியவில்லை. அதற்காக ஒருநாள் ஆசிரியர் அடித்துவிட்டார். அன்றோடு பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டேன். எங்கள் ஊரில் இருந்த ஒரு டீக்கடையில் டீ கிளாஸ் கழுவும் வேலைக்குச் சேர்ந்தேன். அப்போது எனக்கு 10 வயதுதான் என்பதால் அந்த மேசை எட்டாது. ஆற்றில் இருந்து ஒரு கல்லைத் தூக்கிக்கொண்டு வந்து அது மேல் ஏறி நின்று டீ கிளாஸ் கழுவியது இன்றும் எனக்கு நினைவில் உள்ளது. ஒரு கட்டத்திற்குமேல் சொந்தக்காரர்கள் முன் டீ கிளாஸ் கழுவ எனக்குக் கூச்சமாக இருந்தது. இனி இந்த ஊரில் இருக்கவேண்டாம் என முடிவெடுத்து, சென்னை வந்தேன். சென்னையில் கூலிக்கு மூட்டை தூக்கினேன். அதற்கு கிடைத்த சம்பளத்தை வைத்து என் வயிற்றைக்கூட நிரப்ப முடியவில்லை.


ஏதாவது ஓட்டலில் வேலை பார்த்தால் மூன்று வேளை உணவு கிடைக்கும் என நினைக்கையில், ஓட்டலில் தட்டு கழுவும் வேலை கிடைத்தது. அந்தக் காலகட்டத்தை என் வாழ்க்கையில் மறக்கமுடியாது. நாள் முழுக்க பாத்திரம் கழுவிக்கொண்டே இருந்ததால் கையெல்லாம் புண்ணாகி, கையிலிருந்த நகமெல்லாம் கொட்டிவிட்டது; காலில் சேற்றுப்புண் வந்துவிட்டது. கையில் ஏதாவது பேப்பரைச் சுற்றிக்கொண்டுதான் உணவு சாப்பிடவே முடியும். பின், அந்த ஓட்டலில் சர்வரானேன். சர்வராக வேலை பார்த்த நான், சில ஆண்டுகள் கழித்து என் நண்பனுடன் இணைந்து தள்ளுவண்டிக் கடைபோட்டேன். முதன்முதலில் தள்ளுவண்டிக் கடையில் பாசுமதி அரிசி பிரியாணியை நான்தான் அறிமுகம் செய்தேன். எங்கள் சுவை பிடித்து நிறைய பேர் தேடிவர ஆரம்பித்தார்கள். எம்.எல்.ஏ, அரசியல் பிரமுகர்கள் என நிறைய விஐபிக்கள் எங்கள் கடைக்கு வாடிக்கையாளர்கள் ஆனார்கள். ரோட்டில் நின்று கொண்டு சாப்பிட அவர்களுக்கு கூச்சமாக இருப்பதாகக் கூறி அவர்கள்தான் கடைபோடும்படி என்னைத் தொடர்ந்து வற்புறுத்தினார்கள். ஓர் இடத்தில் சீட்டு போட்டு பணத்தைச் சேர்த்து என்னுடைய முதல் கடையைச் சென்னை தாம்பரத்தில் தொடங்கினேன்".


அங்கிருந்து தமிழ்ச்செல்வனின் லட்சியப்பயணத்தின் இரண்டாம் அத்தியாயம் தொடங்குகிறது. கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து நல்ல பெயரும் புகழும் அவரது கடையை வந்தடைகின்றன. இன்று 20க்கும் மேற்பட்ட கிளைகளுடன் கொடிகட்டிப்பறந்து கொண்டிருக்கும் ஓர் உணவகத்தின் அதிபதியாக உயர்ந்துள்ள தமிழ்ச்செல்வன் தன்னுடைய வெற்றிக்கான காரணம் குறித்து கூறுகையில், "கடவுளுக்கு நான் பயப்பட்டதில்லை; ஆனால், வாடிக்கையாளர்களைப் பார்த்து பயப்படுவேன். நம்முடைய கடை உணவை சாப்பிட்டுவிட்டு உணவு சரியில்லை என்று வாடிக்கையாளர்கள் யாராவது கூறிவிடுவார்களோ என்ற பயம் எனக்கு அதிகம். அதனால், ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்வேன். நான் வாழ்க்கையில் வெற்றிபெற்றேன் என்றால் என் மீது எனக்கு இருந்த நம்பிக்கைதான். என் கடையில் முதலீடுகளை விட என்னுடைய உழைப்பைத்தான் அதிகம் போட்டுள்ளேன். அந்த உழைப்புதான் இந்த இடத்திற்கு என்னை உயர்த்தியுள்ளது" என்றார்.

 

வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற உறுதியான லட்சியமும், ஆயிரம் தடைகள் வந்தாலும் அதைப் புறந்தள்ளிவிட்டு அந்த லட்சியத்தை நோக்கி பயணிப்பதற்கான உறுதியும் இருந்தால் வாழ்க்கையில் எவரும் வெற்றிபெறலாம் என்பதற்கு தமிழ்ச்செல்வனின் வாழ்க்கை உதாரணம்.

https://www.nakkheeran.in/360-new

news couresy:


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி