தமிழறிஞா் புலவா் இரா. இளங்குமரனார்
தமிழறிஞா் புலவா் இரா. இளங்குமரனார் வயோதிகம் காரணமாக தனது 94வது வயதில் மதுரை திருநகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
மறைந்த இளங்குமரனார் தமிழாசிரியர், நூலாசிரியா், பதிப்பாசிரியா், தொகுப்பாசிரியா் மற்றும் இதழாசிரியா் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டவர். திருநெல்வேலி மாவட்டம் வாழவந்தாள்புரம் கிராமத்தில் 1927ஆம் ஆண்டு பிறந்த இளங்குமரனார், திருநகரில் உள்ள அரசுப் பள்ளியில் 1946ஆம் ஆணடு தமிழ் ஆசிரியராக தமது தமிழ் பணியை தொடங்கினார். சென்னை பல்கலைக்கழகத்தில் 1951ஆம் ஆண்டு புலவா் தேர்வில் முதல் வகுப்பில் தோச்சி பெற்றார்.
இளங்குமரனார் எழுதிய ‘திருக்கு கட்டுரைத் தொகுப்பு’ எனும் நூலை 1963ஆம் ஆண்டு முன்னாள் பிரதமா் நேரு வெளியிட்டார். ‘சங்க இலக்கிய வரிசையில் புானூறு’ எனும் நூலை 2003ஆம் ஆண்டு குடியரசு முன்னாள் தலைவா் அப்துல்கலாம் வெளியிட்டார். இளங்குமரனார் 500க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். தமிழகமெங்கும் பல்வேறு ஆராய்ச்சி படிப்பு பயின்று வரும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் உதவிகளையும், தமிழ்வழி திருமணங்களையும் நடத்தி வைத்தவர்.
இளங்குமரனார் மறைவிற்கு, தமிழறிஞர்கள் அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், மதுரை எம்.பி, சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “செந்தமிழந்தணர், என் ஆசான் திருமிகு இரா.இளங்குமரனார் முதுமையால் மதுரையில் மறைந்தார். இளம்வயதிலேயே தொடக்கப்பள்ளி ஆசிரியராக வாழ்க்கைத் தொடங்கி, தானே பயின்று புலவர் பட்டம் பெற்று, உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரியராக, மேல்நிலைப்பள்ளி பொறுப்புத் தலைமையாசிரியராக, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆய்வறிஞராக, தமிழ்ச் சொற்பிறப்பு அகரமுதலித் திட்டத்தில் மொழியறிஞராகச் சிறக்கப்பணியாற்றிய செம்மல் அவர்.
பாவலர், சொற்பொழிவாளர், சொல்லாய்வறிஞர், எழுத்தாளர், தமிழாய்வாளர், தமிழிய வரலாற்று வரைவாளர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தமிழியக்கச் செயற்பாட்டாளர், தமிழ்நெறி பரப்புநர் எனப் பன்முகங்கொண்டவர் இளங்குமரனார். திருநகரில் பாவாணர் நூலகத்தையும் திருச்சிக்கு அருகில் திருவள்ளுவர் தவச்சாலையையும் அமைத்தவர்
Comments