டாக்டர் முத்துலட்சுமி

 டாக்டர் முத்துலட்சுமி பிறந்த தினம் இன்று ஜூலை, 30.




‘‘பெண்கள் தங்களுக்கான கொடுமையை முறியடிக்க பெண்கள்தான் முயற்சிக்க வேண்டும். என்னைப் போன்ற ஆண்கள் அதை ஒழிக்க முயல்வதுகூட வீண்தான்’’ என்றார் காந்தி. ‘‘ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்காது. பூனைகளால் எலிகளுக்கு விடுதலை கிடைக்குமா?’’ என்று கேட்டார் பெரியார்.
பெண்ணுக்கான விடுதலை என்பது பெண்களின் கையிலேயே இருக்கிறது. அதில்தான் பெண்ணின் பெருமை இருக்கிறது. ஆண் அமைச்சர்களுக்கு இணையாக பெண் அமைச்சர் கமிஷன் வாங்குகிறார். பட்டுச்சேலைகளைப் பணம் கொடுக்காமலேயே அள்ளிக்கொள்கிறார்கள். லத்திகள் உடைய உடைய பெண் போலீஸார் அடித்து நொறுக்குகிறார்கள். கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் வேறுபாடு இல்லை என்றும், லாலுவுக்கும் மாயாவதிக்கும் மாறுபாடு இல்லை என்றும் பெயர் எடுப்பதா பெருமை? இல்லை, மிகமிக வலிமையற்ற உடல்நிலையில்... தனது வாதத்திறமையால் அதிகார வர்க்கத்திடம் தான் நினைத்ததை எல்லாம் சாதித்த முத்துலட்சுமி அம்மையார்களால் பெருமை அடைகிறது பெண் இனம். எல்லோருமே தன்னிடம் காலில் விழ வேண்டும் நினைப்பவர்களால் அல்ல!




மனிதகுலத்துக்குச் சேவை செய்ய கட்சி நடத்த வேண்டுமா? டாக்டர் முத்துலட்சுமி எந்தக் கட்சியும் நடத்தவில்லை. ஊருக்கு உழைக்க உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, பல்வேறு நோய்களின் தாக்குதலுக்கு ஆளானவர். நான்கு பேருக்கு நல்லது செய்ய பணபலம் படைத்தவராக இருக்க வேண்டுமா? தனக்கும் தனது கணவருக்கும் கிடைத்த சொற்ப ஊதியத்தை வைத்தே சிறுசிறு காரியங்களைத் தொடர்ந்தார். சமூகத்துக்காக உழைக்க நினைப்பவர்கள் சொந்த பந்தங்களை உதறிவிட்டு குடும்பத்தைவிட்டு வெளியேறிவிட வேண்டுமா? தன்னுடைய பெற்றோர், கணவன், இரண்டு குழந்தைகள், இரண்டு தங்கைகள், ஒரு தம்பி, உறவுத் தங்கையின் குடும்பம்... மொத்தப் பேருக்கும் மையமாக இருந்துகொண்டே சமூக சேவையிலும் இறங்கினார். தான் வேலை பார்த்துக்கொண்டே தங்கை நல்லமுத்துவை படிக்க வைத்தார். அவர்தான் பிற்காலத்தில் ராணிமேரிக் கல்லூரியின் முதல் இந்தியப் பெண் முதல்வர் ஆனார். அரசியலுக்கு வந்தால் தனது தொழிலை மறந்துவிடவேண்டுமா? ‘மாட்டேன், அரசியலுக்காக எனது மருத்துவத் தொழிலையும் மருத்துவ ஆராய்ச்சியையும் விட்டுவிட மாட்டேன்’ என்று சொன்னவர் அவர்.

முத்துலட்சுமி பிறந்து வளர்ந்த காலம், வீட்டுக்குள் மட்டும்தான் பெண்ணைப் பார்க்க முடியும் என்ற காலம். வீட்டுப் படியைத் தாண்டினால் திரும்பிய பக்கம் எல்லாம் ஆண்கள் மட்டுமே இருப்பார்கள். சென்னை மருத்துவக் கல்லூரி ஆண்களால் நிரம்பி இருந்தது. இருந்த பெண்களும் ஐரோப்பியர்களாக இருப்பார்கள். ‘திரை போட்டு மூடிய வாகனத்தில் நான் போவேன்’ என்கிறார் முத்துலட்சுமி. அந்தக் காலத்தில் படிக்கச் செல்லும் பெண்களைத் தெருவில் நின்று கிண்டல் செய்வார்களாம். கல்லூரிப் பேராசிரியர் கர்னல் ஜிப்போர்டு, தனது வகுப்பில் மாணவிகளை உட்காரவே விட மாட்டார். அறுவைச் சிகிச்சை பாடத்தில் முழு மதிப்பெண்ணை முத்துலட்சுமி பெற்ற பிறகுதான் பெண்களும் தனது வகுப்புக்குள் வரலாம், உட்காரலாம் என்று மனம் மாறி இருக்கிறார். முத்துலட்சுமி மருத்துவப் பட்டம் பெற்றபோது, ‘சென்னை மருத்துவக் கல்லூரியின் வரலாற்றில் இது பொன்னான நாள்’ என்று எழுதினார் கர்னல் ஜிப்போர்டு. எழும்பூர் மருத்துவ மனையில் அதுவரை பெண் மருத்துவரே இல்லை. முதல் பெண் மருத்துவராக முத்துலட்சுமி உள்ளே நுழைந்தார்.
- திருமாவேலன்
நன்றி: விகடன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி