கவிஞரது நெஞ்சத்தில் நீங்காத இடம் பிடித்த தேவிகா
கண்ணதாசனின் நட்புக் களஞ்சியத்தில் கடைசிவரை நம்பகமான தோழியாக உலா வந்து, கவிஞரது நெஞ்சத்தில் நீங்காத இடம் பிடித்தவர் தேவிகா.
கண்ணதாசனின் நட்புக் களஞ்சியத்தில் கடைசிவரை நம்பகமான தோழியாக உலா வந்து, கவிஞரது நெஞ்சத்தில் நீங்காத இடம் பிடித்தவர் தேவிகா.
குமுதம் வார இதழில் வெளியானது கவிஞர் கண்ணதாசனின் ‘இந்த வாரம் சந்தித்தேன்’ தொடர். அதில் ஓர் அத்தியாயத்தில், தனக்கும் தேவிகாவுக்கும் இடையே நிலவிய தோழமை குறித்தும் விரிவாக எழுதியுள்ளார் கவிஞர்.
‘சினிமா நடிகைகள் எல்லாருமே ஒரே மாதிரி குணங்கெட்டவர்களோ, நடத்தை கெட்டவர்களோ அல்ல; அவர்களிலே உன்னதமான குணம் கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள்.
சுற்றம் காத்தல், விருந்தோம்பல், மரியாதை அனைத்தும் தெரிந்தவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். தயாரிப்பாளர்களின் கழுத்தை நெரித்த நடிகைகளும் உண்டு. கை கொடுத்து உதவிய உத்தமிகளும் உண்டு. அதில் இரண்டாம் வகையைச் சேர்ந்தவர் தேவிகா!
அவர் கதாநாயகியாக நடித்த போது இன்றைய பல நடிகைகளை விட, நன்றாகவே நடித்தார். அழகாகவே இருந்தார். வாழ்க்கையை தேர்ந்தெடுக்கத் தெரியாத காரணத்தால் தோல்வி அடைந்தார். இல்லையென்றால் தேவிகாவின் குணத்துக்கும், நடத்தைக்கும், எவ்வளவோ நிம்மதியான வாழ்க்கை அமைந்திருக்கும்.
‘என்ன, உங்கள் படங்களில் தேவிகாவை விட்டால் வேறு யாரும் கிடைக்க வி வில்லையா?’ என்று நண்பர்கள் பலர் என்னைக் கேட்பார்கள்.
‘எந்தக் குடை என்னை மழையிலிருந்தும் வெயிலிலிருந்தும் காப்பாற்றுகிறதோ - அந்தக் குடையைத்தானே நான் தேர்ந்தெடுக்க முடியும்’ என்பேன் நான்.
தேவிகா படப்பிடிப்புக்கு நேரத்தில் வருவார். பணம் கொடுத்தால் தான் வருவேன் என்று பிடிவாதம் செய்ய மாட்டார். தயாரிப்பாளர்களின் கஷ்ட நஷ்டங்களில் முழுக்கப் பங்கு கொள்வார்.
என்னைப் பொறுத்தவரை, சில நேரங்களில் நான் திட்டிவிட்டாலும், அழுது விடுவாரே தவிர, முறைத்துக் கொள்ள மாட்டார்.
தமிழ் நாட்டிலேயே அதிகம் வளர்ந்த ஆந்திரப் பெண்மணியான தேவிகா, தெலுங்கை விடத் தமிழைத்தான் அழகாக உச்சரிப்பார்.
குடும்பப் பெண்ணாக நடித்தால், மயக்கம் தரக்கூடிய உருவங்களில் இவரது உருவமும் ஒன்று. இந்த வாரம், ஒரு தெலுங்குப் படம் எடுப்பது பற்றிப் பேச அவர் என்னைச் சந்தித்தார்.
குடும்பத்துக்காகவே வாழும் சினிமா நடிகைகளில் தேவிகாவும் ஒருவர். எந்தக் காலத்திலும் சொந்த ஆசைகளுக்காக, குடும்பத்தின் நலனை அவர் தியாகம் செய்ததில்லை.
‘அப்பா ’ என்றொரு தமிழ் சொல் தமிழில் உண்டு. இது ’பா ’ என்பதன் எதிர்மறை. ’பிரதட்சிணம் அப்பிரதட்சிணம்’ என்பது போல், ‘ஒரு பாவமும் அறியாதவர்’ என்பதே அதற்குப் பொருள்.
மனமறிந்து அல்ல தற்செயலாகக் கூட யாருக்கும் தீங்கு செய்தறியாதவர் தேவிகா.
‘ஆண்டவன் நல்லவர்களை சோதிப்பான்’ என்றபடி, அவருக்குச் சில சோதனைகள் வந்தன. ஆண் துணை இல்லாத தேவிகா, அந்தச் சோதனைகளிலிருந்து தம்மைத் தாமே காத்துக் கொள்ள வேண்டியவரானார்.
‘நந்தன் படைத்த பண்டம், நாய்பாதி, பேய்பாதி’ என்பார்கள் என் தாயார்.
அது போல், தேவிகாவின் பணத்தையும் சிலர் சாப்பிட்டு விட்டுப் போனார்கள். அதனை எண்ணி தேவிகா துன்புறவில்லை.
எப்போது அவருக்கு எந்தத் துன்பம் வந்தாலும், எனக்குத்தான் டெலிபோன் செய்வார். என்னவோ ஆண்டவன் அவருக்கும் எனக்கும் ஓர் ஒற்றுமையைக் கொடுத்தான். எனக்கு இருப்பது போலவே தேவிகாவுக்கும் ரத்தக் கொதிப்பு இருக்கிறது.
சினிமா உலகில், ஒவ்வொரு நாளும் சோதனைகளைத் தாங்கிக் கொண்டு மற்றவர்களுக்காகவே வாழும் உயர்ந்த பெண்களில் ஒருத்தி தேவிகா.
துரதிர்ஷ்டவசமாக எனது மங்கல மங்கை படம் பாதியிலேயே நின்று விட்டது. அதில் ஒரு விரகதாபப் பாடலுக்கு தேவிகா நடித்ததைப் போல அதற்கு முன்னாலும் பின்னாலும் எவரும் நடித்ததில்லை.
லால்பகதூர் சாஸ்திரி காலத்தில் பாகிஸ்தான் யுத்தத்தின் போது, சினிமா நடிகர் நடிகைகள் பெரும்பாலோரோடு, நானும் பஞ்சாப் முழுவதும் சுற்றுப் பிரயாணம் செய்தேன்.
இரண்டு விமானப் படை வானூர்திகளில் பயணம். விமானம் உயரமாக இருக்கும். அதற்கும் ஏணிக்கும் உள்ள தூரம் மூன்றடி உயரம் இருக்கும்.
எல்லாரும் மளமளவென்று ஏறி விடுவார்கள். எனக்கு மட்டும் கால்கள் நடுங்கும். அந்நேரம் எனக்குக் கை கொடுத்து விமானத்துக்குள், இழுத்துக் கொள்வார் தேவிகா.
வாழும் போது உலகம் கூட வரும். தாழும் போது ஓடி விடும். இது வாடிக்கை. இதை நன்றாக உணர்ந்தவர் தேவிகா.
சினிமா படப்பிடிப்பு, இப்போது தெருக்கூத்து மாதிரி ஆகிவிட்டது. அந்தக் காலங்களில் அது ஒரு தெய்வீக அம்சமாக இருந்தது.
கதை, வசனம், பாட்டு, இயக்கம், நடிப்பு எல்லாமே பொறுப்போடு இயங்கிய காலம் அது.
சமயங்களில் தனியாக உட்கார்ந்திருக்கும் போது அந்தக் காலங்களை நினைத்துப் பார்ப்பேன்.
சில உன்னதமான உருவங்கள் படம் படமாகத் தோன்றும். அவற்றில் தேவிகாவின் வடிவமும் உண்டு.
தேவிகா - ஒரு நாள் கூடப் படப்பிடிப்பை ரத்து செய்து என் தூக்கத்தைக் கலைக்காத தேவிகா.
என் முகம் கொஞ்சம் வாடியிருந்தால் கூட, ‘அண்ணனுக்கு என்ன கவலை?’ என்று கேட்டு, என்னைப் புகழ்ந்தாவது ஒரு நிம்மதியை உண்டாக்கி விடும் தேவிகா.
அவர் ஒரு சினிமா நடிகைதான்.
ஆனால் பல குடும்பப் பெண்களை விட உயர்ந்த குணம் படைத்தவர்.
‘பிரமீளா’ என்ற தேவிகாவை நான் நினைக்கும் அளவுக்கு யார் நினைக்கப் போகிறார்கள்?’
--கண்ணதாசன்.
நன்றி: yari.com
Comments