சோதனைகளைப் போக்கும் சோமவார பிரதோஷம்!

 சோதனைகளைப் போக்கும் சோமவார பிரதோஷம்!





🌿🌹 🌹🌿தீராத வினையெல்லாம் தீர்த்துவைப்பவன் வேதநாயகன், பரமேஸ்வரன். அதிலும், பிரதோஷ காலத்தில், அந்த விடமுண்ட கண்டனை வழிபட்டால், அத்தனை தோஷங்களும் நீங்கும் என்கின்றன ஞானநூல்கள். நம்பிக்கையோடு ’நமசிவாய’ எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உளமார ஜபித்து, பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனையிலும், ஈஸ்வர பூஜையிலும் கலந்துகொண்டு இறைவனை வழிபட்டால் நினைத்தது நடக்கும்; தீவினை விலகும்; நன்மையெல்லாம் பெருகும். அதிலும், `சோமவாரம்’ எனப்படும் திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உகந்த தினம். அன்றைக்கு வரும் பிரதோஷம் மிக விசேஷம். சோமவார பிரதோஷத்தில் ஈசனை வணங்கினால், நம்முடைய தோஷங்கள் நீங்கும்; சோதனைகள் எல்லாம் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போகும். 🌹 🌿 இன்று (24.5.21) சிவாலயங்களில் சோமவார பிரதோஷம். 🌹 🌿 பிரதோஷ வரலாறு ******************* 🌹 🌿 என்றும் பிறப்பிறப்பில்லா பெருவாழ்வுக்கு அசுரர்கள், தேவர்கள் இருவரும் ஆசைப்பட்டார்கள். அதற்குத் தேவை அமிர்தம். அதைப் பெற, மேரு மலையை மத்தாக்கி, வாசுகி நாகத்தை கயிறாக்கி, பாற்கடலைக் கடைந்தார்கள். அப்படிக் கடைந்தபோது வாசுகி விஷத்தைக் கக்க, பாற்கடலிலும் ஒருவகை விஷம் தோன்றியது. இரண்டும் கலந்து ஆலகால விஷமானது. அதன் கடுமை தாங்க முடியாமல், தேவர்கள் கயிலாய மலைக்கு ஓடினார்கள். எம்பெருமான் ஈசன், தேவர்களை ஆற்றுப்படுத்தினார். தன் பிரியத்துக்கு உரிய தொண்டரான சுந்தரரை அழைத்து, ஆலகாலத்தை திரட்டி எடுத்துவரச் சொன்னார். சுந்தரரும் அத்தனை விஷத்தையும் ஒரு நாவற்பழம் போலத் திரட்டி, பாத்திரத்தில் வைத்து எடுத்து வந்தார். ஈசன் அதை வாங்கினார். ஆலகாலத்திலிருந்து தேவர்களைக் காப்பதற்காக, அதை அப்படியே விழுங்கினார். விஷம், ஈசனுக்கு ஏதாவது துன்பம் விளைவித்துவிடுமோ என்கிற அச்சத்தில் அன்னை பார்வதி, ஈசனின் தொண்டையைப் பிடித்தார். ஆலகாலம், ஈசனின் உள்ளே இறங்காமல், கண்டத்திலேயே தங்கிவிட்டது. விஷம் உண்ட அயர்ச்சியில் அப்படியே படுத்துவிட்டார் இறைவன். பார்வதியும் தேவர்களும் பதைபதைத்துப் போனார்கள். ஈசன் தன் திருவிளையாடலைத் தொடர்ந்தார். களைப்பு நீங்கி எழுந்தார். டமருகம் ஒலிக்க, சூலாயுதத்தைச் சுழற்றி ஆடத் தொடங்கினார்.. தேவர்கள் மட்டுமல்லாது, உலகின் அனைத்து ஜீவராசிகளும் காணத் துடிக்கும் அற்புதத் தாண்டவம் அது! 🌹 🌿 இறைவனின் தாண்டவம் பலவிதம், ஊழிக்காலம் முடியும்போது நடைபெறும் ஊழிக்கூத்து; அந்தி நேரத்தில் ஆடும் ஆட்டம் என எத்தனையோ வகை. ஈசனின் தாண்டவம் என்பது சூட்சுமமானது. அதை நுட்பமாக உணரத்தான் முடியும். சூட்சுமமாக நிகழும் ஆண்டவனின் இந்தக் கூத்தை தரிசித்து பலன்பெறவே பிரதோஷ வழிபாடும் பூஜைகளும்! பிரதோஷ தரிசனம்... பாவ விமோசனம்! பரமேஸ்வரன் விஷம் உண்டது, ஏகாதசி தினத்தில்; அயர்ச்சியில் படுத்து, கண்ணுறங்கியது துவாதசியில்; உலகமெலாம் உய்வுற தாண்டவம் ஆடியது திரயோதசி நாளில், அந்தி சாயும் நேரத்தில்... இந்தக் காலத்தைத்தான் பிரதோஷ காலம் என்கிறோம். 14 ஆண்டுகாலம் பிரதோஷ நாளில் முறையாக சிவாலய தரிசனம் செய்பவர்கள், சாரூப்ய பதவி பெற்று, சிவகணங்களாகிவிடுவார்கள். 🌹 🌿 சிவபெருமான் தாண்டவமாடியதைப் பார்த்த நந்திதேவர், ஆனந்த மிகுதியால் உடல் பருத்தாராம். அதன் காரணமாக, கயிலாயமே மறைந்ததாம். அதனால்தான், பிரதோஷ காலத்தில் நந்தி பகவானின் கொம்புகளின் ஊடாக சிவதரிசனம் செய்ய வேண்டும் என்கிறார்கள். பிரதோஷ தினத்தன்று நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடலாம். மல்லிகை, வில்வம், மருக்கொழுந்து மலர்களை ஈசனுக்கு சூடக் கொடுக்கலாம். பச்சரிசி, பயத்தம் பருப்பு ஆகியவற்றை ஊறவைத்து, அதோடு வெல்லம் சேர்த்து, காப்பரிசியாக்கி நந்திக்கு நிவேதனம் செய்யலாம். ஈஸ்வரனுக்கு சர்க்கரைப் பொங்கல், பாயசம், பானகம் ஆகியவற்றை நைவேத்தியம் செய்யலாம். 🌹 🌿 இந்த சோமவார பிரதோஷ தினத்தில் ஈஸ்வரனை வழிபட்டால் அவர் உள்ளம் குளிரும். நம் சோதனைகளைத் தவிடுபொடியாக்குவார்; நாம் தொட்டதெல்லாம் துலங்கும்படி வரம் அருளுவார். ஈசனின் பாதத்தை சிக்கெனப் பற்றுவோம். வேண்டியன எல்லாம் பெறுவோம்!

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி