சர்வதேச முட்டாள்கள்
சர்வதேச முட்டாள்கள்
முட்டாள்கள் தினம் உருவானதற்கான பல கட்டுக்கதைகளும் கற்பனைக்கதைகளும் சொல்லப்படுவதுண்டு .. அவற்றில் சிலவற்றைப் பார்த்து விட்டு உண்மையான வரலாற்றைப் பார்ப்போம்:
ரோமர்களின் மூடநம்பிக்கையின்படி புளூட்டோ என்ற கடவுள் பிராஸர்பினா என்ற யுவதியைக் கீழ் உலகிற்கு கடத்திச் சென்றதாகவும்,அவள் அழுது தன் தாயை உதவிக்கு அழைத்தாகவும், அவள் தாயோ அவளின் அழுகை சப்தத்தைக் கேட்டு இல்லாத இடத்தில் தேடியதாகவும் இந்தத் தவறான தேடுதலே முட்டாள்கள் தினம் உருவாகக் காரணம் எனவும் சொல்லப்படுகிறது.
பைபிளின்படி நோவா தான் முதல் முட்டாள் எனச்சொல்லப்படுகிறது. காரணம் வெள்ளப் பிரளயம் ஏற்பட்டு பூமி காய்வதற்கு முன்னால் நோவா ஒரு புறாவை அனுப்பி காய்ந்த, வறண்ட நிலத்தை தேடச் சொல்கிறார். ஈரமான பூமியில் காய்ந்த நிலம் எங்கே இருக்கும்? அதனால் தான் அவர் ஒரு முட்டாள் என்றும் அதை மையமாக வைத்தே முட்டாள்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது எனவும் சொல்லப்படுகிறது.
13 ஆம் நூற்றாண்டில் பிரிட்டஷில் வாழ்ந்த ஜான் என்ற மன்னர் எங்கே படையெடுத்துச் சென்றாலும் அந்தப்பகுதி “பொதுச்சொத்தாக” ஆக்கப்பட்டுவிடும். கௌதம் என்ற பகுதியில் நாட்டிங்கம்ஷைர் என்ற ஊருக்குள் அவர் படையெடுத்து வரும்போது அவ்வூர்வாசிகள் தங்களின் ஊரை மன்னர் அபகரித்துவிடக்கூடாது என்பதற்காக அவர்களை முட்டாள்களாக ஆக்க நினைத்து தண்ணீரில் நீந்துகின்ற மீனைப்பிடித்து தரையில் விடுவதும் பிறகு மீண்டும் நீரில் விடுவதுமான பல முட்டாள்தனமான காரியங்களைச் செய்கின்றனர் அவர்களின் முட்டாள்தனங்களைக்கண்ட மன்னர் அவர்களைத் தண்டிக்கிறார் இது தான் ஏப்ரல் 1 அன்று முட்டாள்கள் தினம் உருவாகக் காரணம் எனச்சொல்லப்படுகிறது.
இன்னும் இவை போன்ற பல கற்பனைக் கதைகளும் புராணக்கதைகளும் சொல்லப்படுகிறது.
அதே சமயம் இதுதான் உண்மையான வரலாற்றுப் பின்னணி என்று சொல்லபடுவது இதுதான்:
*************
காலண்டர் மாற்றமே முட்டாள்கள் தினம் உருவாக முக்கியக் காரணம். அதாவது கி.பி. 1582 வரை ஃபிரான்ஸில் ஏப்ரல் மாதம் தான் ஆண்டின் முதல் மாதமாகவும்,மார்ச் மாதம் ஆண்டின் இறுதியாகவும், மார்ச் 25 ல் இருந்து ஏப்ரல் 1 வரை புத்தாண்டுக் கொண்டாட்டங்களும் உலகம் முழுவதும் நடைபெற்று வந்தன.
“கிரிகோரி” என்கிற போப் தான் இன்று நடைமுறையில் இருக்கின்ற ஆங்கிலக் காலண்டரை உருவாக்கியவர்.
அதாவது ஜனவரியை ஆண்டின் முதல் மாதமாகவும் டிசம்பரை ஆண்டின் இறுதி மாதமாகவும் வைத்து உருவாக்கப்பட்ட இந்தக் காலண்டரை பலர் ஏற்றுக்கொண்டனர். இன்னும் சிலர் பழைய காலண்டர் முறையையே பின்பற்றி வந்தனர்.
புதிய காலண்டர் முறைப்படி மாறியவர்கள் பழைய காலண்டர் முறையைப் பின்பற்றி நடப்பவர்களை முட்டாள்கள் என கேலி பேசவும், கிண்டலடிக்கவும் ஆரம்பித்தனர். இதுவே நாளடைவில் ஏப்ரல் 1 அன்று முட்டாள்கள் தினம் அனுசரிக்கக் காரணமாக அமைந்து விட்டது.ஃபிரான்ஸிலிருந்து லண்டன், அமெரிக்கா, மெக்ஸிகோ, ஸ்காட்லாந்து, இங்கிலாந்து, கரீபியன், ஜமைக்கா, கானா போன்ற நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்து இன்று உலகம் முழுவதிலும் உள்ள பல நாடுகளுக்கும் பரவி இருக்கிறது
Comments