தமிழ் இலக்கியத்தில் இன்றையச்சுவை
தமிழ் இலக்கியத்தில்
இன்றையச்சுவை
மனித நேயம் பற்றி புறநானுற்று பாடல் ஒன்று
வறுமையுற்ற நிலையில் பெருஞ்சித்திரனார் என்ற புலவன் பொருள் தேடி பரிசில் பெற செல்கிறார். அவர் குடும்பச் சூழலோ மிகவும் பரிதாபத்திற்குரியதாக உள்ளது. குமணனிடம் சென்று தன் குடும்ப வறுமையை எடுத்துரைக்கிறார். மன்னனும் பொன்னும் பொருளும் பரிசாகத் தந்து அனுப்பி வைக்கின்றான். வந்தவன் தான் மட்டும் அப்பரிசுப் பொருளை அனுபவிக்காமல் தன் மனைவியிடம் கூறும் பாங்கு உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் உரைக்கும் அறக் கொள்கையாக குறிப்பிடுகிறார்.
நின்னயந் துறைநர்க்கும் நீநயந் துறைநர்க்கும் பன்மாண் கற்பினின் கினைமுத லோர்க்கும் கடும்பின் கடும்பசி தீர யாடி நின் நெடுங்குறி யெதிர்ப்பை நல்கி லோர்க்கும் இன்னோர்க் கென்னது என்னேடுஞ் சூடியது வல்லாங்கு வாழ்து மென்னது நீயும் கொடுமதி மனைகிழ
வோயே...’ (புறம், 173)
என்று உண்ண விரும்பியவர்க்கும், நீ விரும்பியவருக்கும், உன் உற்றார், உறவினர்களுக்கும், பிறகு வாங்கிக் கொள்ளலாம் என்று முன்பு உனக்குக் கொடுத்தவருக்கும், கொடுமையான கொடும் பசி தீர எல்லோருக்கும் இன்னார்க்கும் என்று இல்லாமல் என்னிடமும் கேளாமல் இப்பொருளை வைத்துக் கொண்டு வளமாக வாழ்வோம் என்று எண்ணாமல் மன்னர் கொடுத்த பரிசிலை எல்லோருக்கும் கொடு என்று தன் மனைவியிடம் கூறும் பெருஞ்சித்திரனாரின் கருத்து உலக மக்களுக்குச் சொல்லப்பட்டவையாக அமைந்துள்ளது.
ஒருவன் சேர்த்து வைத்த அல்லது சம்பாதித்த பொருள்களையோ, செல்வத்தையோ மற்றவர்களுக்குக் கொடுத்து உதவும் பாங்கே அறக்கொள்கைகள் ஆகும். இன்று உலகில் பலர் ஒருவேளை உணவு இல்லாமல் வாழ்கிறார்கள் என்று ஐ. நா. கணக்கெடுப்புக் கூறுகிறது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் புறநானூற்றுப் புலவர்களும், மன்னர்களும் பாடல்களாக உலக மக்களுக்குக் கருத்தை வழங்கியுள்ளனரொ என்ற வினா எழும்புகிறது.
Comments