தமிழ் இலக்கியம் (துன்பக்கேணி" )(தமிழ்ப் புத்தாண்டு சித்திரை மலர் 2021)

 தமிழ் இலக்கியம்




துன்பக்கேணி" (மனிதனுக்கு துன்பம் வரும் முறை. பட்ட காலிலே படும் என்பது போல)


இராமச்சந்திர கவிராயர் என்றொரு கவிஞர் மிகச்சுவையான பாடல்களை எழுதியிருக்கிறார். நகைச்சுவையும் அவலமும் ஒருங்கே அமையப்பெற்ற பாடல்களாய் அவை இருக்கின்றன.   ஒருவனுக்குத் துன்பம் எப்படி அடுக்கடுக்காய் வரமுடியும் என்பதற்கு இவர் எழுதிய



“ஆவீன மழைபொழிய இல்லம் வீழ

அகத்தடியாள் மெய்நோக அடிமை சாக

மாவீரம் போகுதென்று விதைகொண் டோட

வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ள

சாவோலை கொண்டொருவன் எதிரே தோன்ற

தள்ளொண்ணா விருந்துவர சர்ப்பம் தீண்ட

கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்க

குருக்கள்வந்து தட்சணைதான் கொடு என்றாரே “


எனும் பாடல் கண்ணதாசனுக்கு மிகவும் பிடித்த பாடல். பிரசித்தமானதும் கூட. 


அது அக்கம் பக்கம் யாருமற்ற வயல்வெளி சூழ அமைந்த பண்ணை வீடு. பசு கன்றை ஈன்ற ஒரு பொழுது.( ஆவீன )ஆண்டு முழுக்க எதிர்பார்த்துக் காத்திருந்த மழை. மழை என்றால் ஒரே நாளில் வானம் அப்படியே கொட்டித் தீர்த்து விடுவது போன்ற ஆவேசப் பெருமழை.    ( மழை பொழிய )தொழுவத்தில் ஈரம் நிறைந்து கன்றினையும் பசுவினையும் பேணும் முயற்சிக்கிடையிலே, இடி விழுந்தது போல் ஒரு சப்தம்.


அவன் பதறியடித்துக் கொண்டு வெளியே வந்து பார்த்தால் வீடு இடிந்து கிடக்கிறது. ( இல்லம் வீழ ) அலறித் துடித்து உள்ளே நுழைந்து பார்த்தால் மனைவி படுகாயமுற்றுக் கிடக்கிறாள்( அகத்தடியாள் மெய் நோக ). இடிபாடுகளிடையே அவளை மீட்க உதவி செய்ய வேலைக்காரனை அழைக்கிறான். வேலைக்காரன் வரவில்லை. அவனுதவியின்றி தனியாளாய் மனைவியை மீட்க முடியாது. அவனைத் தேடிய பொழுது, மற்றொரு அறையில் இடிபாடுகளுக்கிடையில் பிணமாகக் கிடக்கிறான் அவன்.( அடிமை சாக )


இவனுக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. அது வரை வராத மழை. மழைக்கு மகிழ்வதா ? தன் நிலையை எண்ணி அழுவதா?


சரி ! இம்மழைக்கு நெடுநாள் காய்ந்திருந்த மண் ஈரமுற்றிருக்கும். இப்பொழுதே கையிலிருக்கும் விதை நெல்லைக் கொண்டு போய்த் தெளித்துவிட்டால்தான் வரும் ஆண்டிற்கு வயிற்றுப்பாட்டிற்கு வரும் !


விதையைத் தெளித்து விட்டு , அடுத்த பண்ணையில் உள்ளவர்களின் உதவியுடன் தன் மனைவியைக் காப்பாற்றி விடலாம் என்ற எண்ணத்தில் தலைமேல் விதைநெல்லை வைத்து எடுத்துக் கொண்டு வயலுக்குப் புறப்படுகிறான். ( மா ஈரம் போகுது என்று விதை கொண்டு ஓட )


வழியில் இவன் கடன்வாங்கிக் கட்டமுடியாமல் பலமுறை அவகாசம் கேட்ட ஒருவன் வழிமறிக்கிறான். “ என்னிடம் வாங்கிய கடனுக்குப் பதில் சொல்லி விட்டுப் போ! “ 


என்ன சொல்ல...


“என் வீடு இடிந்து விட்டது. வேலைக்காரன் இறந்து விட்டான். மனைவி காயமுற்றுக் கிடக்கிறாள். இந்த நெல்லை  விதைத்தால் தான் இந்த ஆண்டிற்கு நாங்கள் பட்டினி கிடக்காமல் இருக்க முடியும். இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கொடு..”


“கடனைக் கட்ட வக்கில்லை நீ பட்டினியே கிட..வாங்கிய கடனுக்கு வட்டியாக இதை எடுத்துக் கொள்கிறேன் “ என்றவாறு விதை நெல்லைப் பறித்துக் கொண்டு போகிறான் கடன்காரன். ( வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ள )


என்னடா செய்வது.... என்று தலையில் கைவைத்துக் கொண்டு திரும்ப முற்பட்டவனை யாரோ அழைக்கிறார்கள்.


பார்த்தால் இவனது நெருங்கிய உறவினன் ஒருவன் பக்கத்து ஊரில் இறந்து விட்டான். வர வேண்டும் என்ற சாவுச் செய்தியைக் கொண்டு வந்து ஒருவன் கொடுத்துவிட்டுப் போகிறான். ( சாவு ஓலை  கொண்டு ஒருவன் எதிரே தோன்ற )


வரப்பிலேயே தலையில் கைவைத்து உட்காரும் அவனை நோக்கி வருகிறது ஒரு கூட்டம்.

தலையுயர்த்தி யாரென்று பார்த்தால் நெடுநாட்களாக வருந்தி வாருங்கள் வாருங்கள் என்று அழைத்தும் வராத விருந்தினர் கூட்டம் அப்போது வந்து கொண்டிருக்கிறது.


“வீடும் இல்லை மனையும் இல்லை“ எப்படி விருந்தோம்புவது,


வந்தவரை வரவேற்க கால்களை எடுத்து வைக்கிறான். ( தள்ள ஒண்ணா விருந்து வர ) 


கால் கீழிருந்த பாம்பு கொத்தி விடுகிறது. ( சர்ப்பம் தீண்ட ) 


கண்கள் இருள்கின்றன. கால் தடுமாறுகிறது. 


நினைவுகள் தப்பச் சோர்ந்து விழும் அவனைத் தாங்குவது போல் வரும் ஒருவன் அவ்வாண்டு அரசனுக்குக் கொடுக்க வேண்டிய வரியை அப்போதே செலுத்த வேண்டும் என்று அவன் காதில் மெல்ல வந்து சொல்கிறான். ( கோ வேந்தர் உழுது உண்ட கடமை கேட்க ) அவனுக்குப் பின்னால் நிற்கும் குருக்கள் அரசிற்கு வரி செலுத்தும் போதே தனக்கும்   அவன் அந்த ஆண்டிற்குத் தரவேண்டிய தட்சணைப் பாக்கியை வாங்கிச் செல்லாம் என்று வந்ததாய்க் கூறுகிறார். (குருக்கள் வந்து தட்சணைதாம் கொடு என்றாரே )


வாயில் நுரைதள்ளக் கண்களை மூடுகிறான் அவன். அவலத்தின் உச்சமாய் இப்படி ஒரு பாடலைப் படைத்துக் காட்டுகிறார் இராமச்சந்திர கவிராயர்.


இப்படி ஒரு சம்பவம் நடக்க முடியுமா என்பதை எல்லாம் தாண்டி இது போலச் சில பாடல்களால் தமிழில் நின்ற புலவர்கள் இருக்கிறார்கள் என்பதே நாம் மனதில் இருத்த வேண்டியது.


(லோகு நாகேஷ் -)

கொழும்பு ஸ்ரீலங்கா)


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி