தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் பற்றி தொடர் பகுதி (5)
தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் பற்றி தொடர் பகுதி (5)
தில்லானா படத்திற்கு சிவாஜிக்கு எப்படி நாதஸ்வர பயிற்சி கொடுக்கப்பட்டதோ, அதேபோல பாலையாவிற்கு தனி டிவிஷன் ஒதுக்கப்பட்டது..
தவில் வித்வான் பயிற்சி முடிந்தாலும் பாலையா சும்மா இருக்கமாட்டார். ஒரு தவிலை வாங்கி வைத்துக்கொண்டு நேரம் கிடைக்கும்போதெல்லாம் வீட்டில் அடித்துநொறுக்கினார்.
அவர் குடியிருந்த தெருவழியாக சென்றவர்கள் தவில் வாசிப்பு சத்தத்தை கேட்டுகேட்டு மிரண்டு போனகாலமெல்லாம் உண்டு..
பாலையா வீட்டருகே குடியிருந்த அப்போதைய முன்னணி நடிகை வசந்தா ( ஜெய்சங்கரின் முதல் கதாநாயாகி,,, நானே ராஜா நானே மந்திரி படத்தில் விஜயகாந்தின் தாயாக வருவார்) தூங்கி எழுந்தா பாலையா வீட்டு தவில் தொல்லை தாளமுடியலை என்பார்.
சின்ன பாத்திரம் என்றாலும் பாலையா அதற்காக தன்னை தயார் செய்துகொள்ளும் விதம் எப்போதும் அப்படித்தான் இருக்கும் பாலையாவுக்காக தவில் வாசித்தவர்கள் இருவர்.
ஒருவர், திருவிடைமருதூர் வெங்கடேசன்.. இன்னொருவர் பாலையாவுக்கு பயிற்சி அளித்த, மதுரை டி. சீனுவாசன் என்கிற சீனா குட்டி அவர்கள்.
திருவிளையாடல் படத்தில், பாட்டும் நானே, பாவமும் நானே.. சிவாஜிக்காக தவிலில் கைவிளையாடிது இவருடையதுதான். பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை பாடத்தில் ஆயிரம் தாமரை மொட்டுக்களே பாட்டின் ஆரம்பத்தில் அமர்க்களப்படுத்தும் அந்த தவில் பிட்டுகூட சீனு குட்டி அவர்களின் கைவண்ணமே..
இத்தகைய திறமைமிக்க தவில் வித்வான்களின் விரல்கள் பேசிய பாஷையை அப்படியே தில்லானா மோகனாம்பாள் படத்தில் பாலையா ஒரு அருவிபோல் பாயவிட்டார்.
அதனால்தான்,தில்லானாவில் ஆரம்ப காட்சியில் வரும் அந்த ஐந்து நிமிட நகுமோ கானலேனிக்கு சிவாஜி எப்படி நாதஸ்வரத்தை அப்படியொரு முகபாவனைகளோடு வாசித்தாரே அதற்கு குறைவில்லாமல் அட்சர சுத்தமாக பாலையாவின் கைகள் தவுலில் கைகள் பேசிய விதத்தைத் கண்டு தவில் கலைஞர்களே வியந்து போனார்கள்.
தில்லானா மோகனாம்பாள் நாவலாக வெளிவந்தபோதே அதில் பெரிதும் பேசப்பட்ட பாத்திரம் சவடால் வைத்தி. கார்ட்டூனிஸ்ட் கோபுலு வரைந்த சித்திரங்கள் அச்சு ஒருத்தரை அப்படியே பிரதிபலிப்பதுபோல் இருந்தன. அதுவேறு யாருமல்ல.. நாகேஷ்தான்.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால் ஆனந்த விகடனில் தில்லானா தொடர்கதை வந்தபோது நாகேஷ் அவர்கள் திரை உலகில் அறிமுகமாகவேயில்லை என்பதுதான்.
நாட்டியபெண்மணி மோகனாம்பாளை பெரிய மனிதர்களுடன் எப்படியாவது சேர்த்துவிடத்துடிக்கும் ஒரு மோசமான பிம்ப் கேரக்டர்.. கொஞ்சம் பிசகினாலும், பெண்ணைக்கூட்டிகொடுக்கும் கேரக்டர் மிகவும் ஆபாசமாகப்போய்விடும்.
ஆனால் திரைக்கதை மற்றும் நாகேஷின் நடிப்பாற்றலால் சவடால் வைத்தி கேரக்டர், படம் முழுக்க ரசிகர்களை சிரிக்க வைத்தபடியே இருந்தது. ஒரு பிம்ப் கேரக்டரைக்கூட இப்படி விரசமே இல்லாமல் செய்யமுடியும் என்றால் அது நாகேசைத்தவிர வேறு யாரால் முடியும்?
அதிலும் மோகனாவின் தாயாராக வடிவாம்பாள் கேரக்டரில் வரும் சி.கே. சரஸ்வதியும் நாகேஷும் ஒன்றாக தோன்றும் காட்சிகளெல்லாம் அவ்வளவு ஜாக்கிரதையாக, நேர்த்தியாக இருக்கும்படி அமைத்திருந்தார் இயக்குநர் ஏபிஎன் அவர்கள்.
ஒவ்வொரு கட்டத்திலும் மோகனாவை வளைக்க துடிக்கும் மிட்டாதாரர் நாகலிங்கமான ஈ.ஆர் சகாதேவன்,, சிங்கபுரம் மைனரான பாலாஜி, மதன்பூர் மகாராஜாவான நம்பியார் ஆகிய மூவரிடமும் மோகனாவை கொண்டுசொல்ல வைத்தி போடும் திட்டங்களும் அதற்கு தோதாக மோகனாவின் தாயை ஆடம்பர வாழ்க்கை ஆசைகாட்டி எல்லாவற்றிற்கும் உடன்பட வைப்பதற்காக பேசும் வசனங்களும்..
‘’ஐயோ சிங்கபுரம் மைனர் நிக்கறாரே..என் கால் வலிக்குதே வைத்தி’’… என்று சிகே. சரஸ்வதி சொல்வதும், ‘’பாருங்க. நீங்க நிக்கறீங்க..அவா கால் வலிக்குதுன்றா’’ என்று நாகேஷ் நக்கலடிப்பதும் எத்தனையெத்தனை காட்சிகள்.
மற்ற கேரக்டர்களிடம் டாமினேட் எப்படி செய்யவேண்டும், மாட்டிக்கொண்டால் வெட்கமேபடாமல் தரைரேஞ்சக்கு எப்படி இறங்கிவிடவேண்டும் என்பதற்கெல்லாம் இந்த படத்தின் வைத்தி கேரக்டர்தான் ஒரு பல்கலைக்கழகம் மாதிரி,
ஏண்டாப்பா என்று ஷண்முகசுந்தரத்தை ஒருமையில் அழைத்துவிட்டு சிவாஜி முறைத்ததும் பின்வாங்குவதும், முன்பின் அறிமுகமே இல்லாமல் வடிவாம்பாளை முதன் முறையாக சந்திக்கும்போதே சிங்கபுரம் மைனரின் செல்வாக்கை சொல்லி அவரின் தோளைத்தொட்டு பேசும் அளவுக்குபோவதும் எவ்வளவு ஸ்பீடான மூவ்மெண்ட்ஸ் நாகேஷிடம்..
நாகேஷ் இப்படி என்றால் ஆச்சி மனோரமா சும்மாவிடுவாரா? ஜில் ஜில் ரமாமணி என்ற பாத்திரத்தை அவர் திரையுலக பயணத்தில் முக்கியமான மைல்கல்லாவே மாற்றிவிட்டார். இத்தனைக்கும் தில்லானா மோகனாம்பாள் படத்தில் நடிக்க முதலில் மறுத்துவிட்டார் என்பதுதான் அதிர்ச்சியான விஷயம்.
புக் செய்தவற்காக டைரக்டர் ஏபிஎன் அணுகியபோது, சிவாஜி, பத்மினி பாலையா நாகேஷ், சிகே சரஸ்வதி அதற்கப்புறம் பெரிய பட்டாளமே இருக்கும்போது, படத்தில் எனக்கென்ன முக்கியத்துவம் வந்துவிடப்போகிறது என்று சொல்லி தவிர்த்தார்.
ஆனால் ஏபிஎன் விடவில்லை. ‘’மோகனாவுக்கு ஆடத்தெரியும், சண்முக சுந்தரத்திற்கு வாசிக்க தெரியும். ஆனால் படத்தில் நடனம், பாட்டு, நாடகம் என சகலமும் தெரிந்த கேரக்டர் என்றால், அது உன்னுடைய ஜில்ஜில் ரமாமணிமட்டுந்தான். இந்த கேரக்டர் உன்னை காலாகாலத்திற்கும் பேசவைக்கும் என்று சொல்லி சம்மதமும் வாங்கிவிட்டார்.
ஏ.பி. நாகராஜன் சொன்னபடியே ஜில்ஜில் ரமாமணி கேரக்டர்.. அதை விவரிப்பது என்பது தங்கக்குடத்திற்கு பொட்டு வைத்துதான் அழகு பார்க்கவேண்டுமா என்பது மாதிரி.. நொந்துபோன பாத்திரமாய் சிரிக்கவைத்துக்கொண்டே வரும் மனோரமா, தவறான தகவல் அடிப்படையில் பிரிந்து நிற்கும் காதலர்களான மோகனாவையும் சண்முகசுந்தரத்தையும் சேர்த்துவைக்கும்போது, அவர்கள் இருவரையும் மட்டும் அல்ல ரசிகர்களையும் உருகவைத்துவிடுவார். அதுதான் ஆச்சி மனோரமா..
தில்லானா நாயகன் சண்முக சுந்தரம் என்றதும் இங்கே இன்னொரு விஷயத்தை குறிப்பிட்டாகவேண்டும், படத்தில் சிவாஜிக்கு உற்ற தம்பியாக வந்து எப்போதும் பக்கத்தில் அமர்ந்து தங்கரத்தினமாய் நாதஸ்வரம் வாசிக்கும் நடிகர் ஏவிஎம் ராஜனின் சொந்தப்பெயர்தான் சண்முகசுந்தரம்.
தில்லானா மோகனாம்பாள் படத்தை பொறுத்தவரை பல ஆச்சர்யங்கள் அதில் உண்டு. மதன்பூர் மகாராஜா எம்என் நம்பியாரின் மகாராணியாக வரும் அம்பிகா, 50களிலும் 60களிலும் மலையாள உலகில் கொடிகட்டி பறந்த முன்னணி கதாநாயகி. மலையாளத்தின் முதல் வண்ணப்பட நாயகி. நடிகை பத்மினி, ராகினி, லலிதாவின் தாயாரான சரஸ்வதியை உடன்பிறந்த சகோதரியின் மகள்தான் இந்த அம்பிகா. இயக்குநர் பீம்சிங்கை மணந்துகொண்ட நடிகை சுகுமாரிக்கும் சகோதரி.
தனுஷின் யாரடி நீ மோகினி படத்தில் தனுஷை படாதபாடு படுத்தும் அந்த பாட்டிதான் சுகுமாரி என்று சொன்னால்தான் இப்போதைய தலைமுறைக் தெரியும். பாசமலர் படத்தில் வாராயோ என் தோழி வாராயோ பாடலில் நடனமாடி அதன் பின் புகழ்பெற்ற சுகுமாரி என்றால் தெரியாது. சுகுமாரியும் அம்பிகாவும் ஒரு மலையாள படத்தில் போட்டிபோட்டுக்கொண்டு ஆடிய பாம்பு நடனம் அந்தக்கால கேரள ரசிகர்கள் மத்தியில் அவ்வளவு வரவேற்பை பெற்ற ஒன்று என்பார்கள்.
தில்லானா மோகனாம்பாள் படத்தை பொறுத்தவரை பல ஆச்சர்யங்களை உள்ளடக்கியிருக்கும். படத்தின் உயிர்நாடியான கதையை எழுதிய கொத்தமங்கலம் சுப்புவின் மனைவியான நடிகை எம்எஸ் சுந்தரிபாய்க்கு வாய்ப்பு கொடுக்காமல் ஏன் விட்டார் ஏபிஎன் என்பதுதான் புரியவில்லை.. வில்லியாகவும் குணச்சித்திரமாகவும் அடித்து நொறுக்குவதில் கில்லாடி எம்.எஸ். சுந்தரிபாய்.
சிவாஜி,பாலையா, டி.ஆர் ராமச்சந்திரன், நாகையா சாரங்கபாணி, ஏவிஎம்ராஜன், தங்கவேலு, பாலாஜி, நாகேஷ் ஏகப்பட்டபேர் கதாநாயகன் அந்தஸ்த்து கொண்டவர்கள். அத்தனைபேருக்கும் மனசு கோணாதபடி முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைத்திருக்கிறார் என்றால் ஏபி நாகராஜன் என்பவர் எவ்வளவு பெரிய ஜாம்பவானாக இருந்திருக்கவேண்டும்.,
(நிறைவு)
விவேகானந்தன்
Comments