இட்டலி இட்லி /விவேகானந்தன் கவிதை
ஊட்டம் தருவது இட்லி என்று
நாட்டம் கொண்டார் அனைவரும்
இட்லி தினம் என்று அயல் நாட்டவரும்
இட்டமுடன் கொண்டாடி மகிழ்கின்றார்
இட்டு அவித்த பண்டம்
இட்டலி இட்லி என்று
மருவி வந்தது என்றார்
நெருங்கிய நண்பர் ஒருவர் -
எனக்கோ
மரு விருந்து நினைவு வந்தது.
இரு மணம் இணைந்து
திருமணம் நிகழ்ந்து
மருவிருந்ததில் மகிழ
கருத்தாய் அழைத்தார் மாமி.
விடி வெள்ளி ஒளியிலே
விடியலில் எழுப்பினார் மாமா
தடி தடியாய் இருவர் வந்து
பிடி பிடி என்றே உடம்பை
பிடித்து விட்டார் நன்றே
அருவியெனக் கங்கை குளியல்
அணிவதற்குப் புது ஆடைகள்
ஆடை கட்டும் ஆவின் பால்
மேடை கட்டும் பட்சணங்கள்.
அரிசியும் உளுந்தும் மசிய
ஆட்டி வைத்தார் மாமா
அட்டியின்றி நெய் இட்டு
இட்டு அவித்த இட்லி
சுட்டு வைத்தாள் மாமி!
தட்டில்லா மகிழ்வுடன்
தட்டத்தில் வைத்துச் சாப்பிட
அட்டியின்றி மனையாளும்
மெட்டி ஒலி எழுப்பிட
ஊட்டமான குஷ்பு இட்லி
வட்ட வட்டமான வடிவத்தில்
தொட்டால் பஞ்சுபோலே
தொடுத்த மல்லிப் பூபோலே
அட்டி இட்டு எடுத்து வந்தாள்
வட்டில் நிறைய இட்லி
கலர் கலராய் சட்டினி
பலவித பெயரில் வைத்தாள்
மல்லி புதினா பச்சை
கொள் எள்ளு சந்தனம்
தேங்காய் சென்னா வெள்ளை
தெலுங்கர் சட்டினி சிகப்பு
சொல்ல முடியா நிறைவுடன்
மெல்ல மெல்லச் சுவைத்தேன்.
அடுத்து வந்தது சாம்பார்
தடுக்க மனம் வருமோ
துடுக்காய் ஊற்றிட மிதந்தது
படுத்துக் கிடந்த இட்லி
மெல்லுதற்கு மிருதான உளுந்துவடை மெதுவடை இடையில் சேர்த்தாள்
நல்லெண்ணெய் இரு கரண்டி
மேலுக்கு ஊற்றிட கரைந்தது மல்லிப்பூ இட்லி வடையுடன் சேர்ந்து.
மல்லுக்கு அழைத்தது என்னை
கலந்து உள்ளுக்குள் தள்ளினேன்
மேலுக்கு வந்தது ஏப்பம்
சாலும் என மகிழ்ந்து துள்ளினேன்
இட்டு அவித்த இட்லி உண்டு
மட்டுப்பட்டது என் பசியும்
கட்டுக்கடங்கா மன ஆவலை
இட்டமுடன் வந்து என் கண்ணே
தொட்டு அவி என்றேன்!.
எட்ட நின்று முத்தம் ஒன்று தந்தாள். 💐😘🙏
விவேகானந்தன்
Comments