காந்தி அனுப்பிய பாராட்டுத் தந்தி;
காந்தி அனுப்பிய பாராட்டுத் தந்தி; பொக்கிஷமாய் பாதுகாக்கும் குடும்பம்
மகாத்மா காந்தி கோவையைச் சேர்ந்த அபைச்சந்த் வேந்த்ரவன் என்பவருக்கு அனுப்பிய தந்தியை அவரது குடும்பத்தினர் இன்றுவரை பொக்கிஷமாய் பாதுகாத்து வருகின்றனர்.
கோயில்களில் உயிர் பலி கொடுப்பதைத் தவிர்த்ததற்காக காந்தி அவரைப் பாராட்டி அனுப்பிய தந்திதான் அது.
கோவையின் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான கோனியம்மன் கோயிலில் நடைபெறும் தேர் திருவிழாவின் துவக்க நிகழ்வாக ஆடு, கோழிகளை பலிகொடுக்கும் சம்பிரதாயம் நடைமுறையில் இருந்து வந்தது.
1941ஆம் ஆண்டு நடைபெற்ற கோனியம்மன் தேர் திருவிழாவின்போது உயிர்களை பலிகொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து Southern India Humanitarian League எனும் தன்னார்வ அமைப்பினரோடு இணைந்து அபைச்சந்த் வேந்த்ரவன் என்பவர் கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர்மக்களிடம் வாதாடியுள்ளார்.
உயிர் பலி கொடுத்தால் மட்டுமே தேர் திருவிழா விபத்துகளின்றி நடக்கும் எனக் கூறிய மக்கள், அபைச்சந்தின் கோரிக்கையை ஏற்க மறுத்தனர்.
இதனால், 11 வயதான தனது மகன் கனக்லால் அபைச்சந்தை பலியிட்டு தேர் திருவிழாவை துவங்குமாறு கூறினார் அபைச்சந்த். அபைச்சந்தின் எதிர்ப்பினால் அந்த ஆண்டு பலி கொடுக்கப்படாமல் தேர் திருவிழா நடைபெற்றது. அன்றிலிருந்து கோனியம்மன் தேர் திருவிழாவின்போது உயிர் பலி கொடுக்கும் பழக்கம் கைவிடப்பட்டது.
இச்சம்பவம் குறித்து தெரியவந்ததும் காந்தி, 13 மார்ச், 1941 அன்று அபைச்சந்தை பாராட்டி ஒரு தந்தி அனுப்பினார். காந்தி அனுப்பிய தந்தியை இன்றுவரை பாதுகாத்து வருகின்றனர் அவரது குடும்பத்தினர். அபைச்சந்த் 1964ஆம் ஆண்டு மரணமடைந்தார்.
'நாங்கள் காந்தி பிறந்த போர்பந்தர் பகுதியை சேர்ந்தவர்கள். எங்களது முன்னோர்கள் இந்தியா முழுவதும் பயணம் செய்து வணிகம் செய்தவர்கள். கடலில் ஏற்பட்ட புயலால் வணிகம் பாதிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் வாழத்தொடங்கினோம். அப்படித்தான் எனது தாத்தா திருபவந்தாஸ் வேந்த்ரவன் கோவையில் குடிபெயர்ந்தார். அவருக்கு ஐந்து மகன்கள். என்னுடைய தந்தை அபைச்சந்த் வேந்த்ரவன் இளையவர், மிகவும் தேசபக்தி மிக்கவர். சுதந்திரத்திற்காக போராடிய பல தலைவர்களுடன் அவர் நட்பில் இருந்தார். 1936ஆம் ஆண்டு காந்தியடிகள் கோவைக்கு வந்திருந்தபோது அவரை பலரும் தங்களது வீட்டில் தங்குமாறு கேட்டுக்கொண்டனர்.
''ஆனால், அவரோ என் ஊர்க்காரர் வீட்டில் தான் தங்குவேன் எனக் கூறி எங்களைப் பற்றி கேள்விப்பட்டு எங்கள் வீட்டிற்கு வந்து இரண்டு நாட்கள் தங்கினார். அப்போது சிறுவனாக இருந்த என்னை காந்தியடிகள் சிறிதுநேரம் மடியில் வைத்து இறக்கிவிட்டார். அவரை வரவேற்கச் சென்ற என் அன்னை கைநிறைய தங்க வளையல்களை அணிந்திருந்தார்.''
''அப்போது காந்தியடிகள் ஒரு வளையலை மட்டும் அணிந்து கொண்டு மற்றவைகளை சுதந்திரப் போராட்டத்திற்கான நிதியாக கொடுக்குமாறு கேட்டு பெற்றுக்கொண்டார். காந்தியோடு உடன் வந்திருந்த கஸ்தூர்பாயோடு, இங்கிருந்த பெண்கள் அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதுவே காந்தியடிகளோடு எங்களுக்கு ஏற்பட்ட முதல் தொடர்பு.''
''ஐந்து வருடங்களுக்கு பின்னர் கோனியம்மன் தேர் திருவிழாவில் உயிர் பலி கொடுக்கப்படுவதை தடுத்து நிறுத்திய சம்பவம் குறித்து காந்தியடிகளிடம் தெரியப்படுத்தினோம்.
அதை பாராட்டி அவர் என் தந்தைக்கு ஒரு தந்தி அனுப்பினார். அதை ஒரு வரலாற்று நிகழ்வாகவே நாங்கள் பார்க்கிறோம். என் தந்தையின் முயற்சிக்கு கிடைத்த அரிதான பாராட்டாக காந்தியடிகள் அனுப்பிய தந்தி இருந்தது. அது ஒரு விலைமதிப்பில்லாத பொக்கிஷம்,'' என பெருமிதத்தோடு கூறுகிறார் அபைச்சந்தின் மகன் கனக்லால்.
நன்றி: பிபிசி தமிழ்
Comments