உங்கள் எழுத்துக்கு ஏதாவது எதிர்ப்பு கிளம்பியது உண்டா

 சாருநிவேதிதா பதில்

கேள்வி: பெருமாள் முருகனின் மாதொரு பாகன் நாவலுக்கு எதிர்ப்பு கிளம்பியது போல் உங்கள் எழுத்துக்கு ஏதாவது எதிர்ப்பு கிளம்பியது உண்டா? தற்போதைய விவகாரத்தைக் கவனித்தீர்களா? நீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?


பதில்: என்னுடைய எழுத்துக்கு எதிர்ப்பு கிளம்பினால் ‘அப்பாடா, இப்போதாவது நம்மை இவர்கள் கவனிக்கிறார்களே, நம்மையும் ஒரு எழுத்தாளன் என்று அங்கீகரித்து எதிர்க்கிறார்களே!’ என நினைத்து சந்தோஷப்படுவேன். ஏனென்றால், தமிழக புத்திஜீவிகள், பிரமுகர்கள், சக எழுத்தாளர்கள் யாவருமே என் பெயரை உச்சரிப்பது கூட இல்லை. தொட்டாலே பாவம் என்ற தீண்டாமை இருந்தது அல்லவா? அது போன்ற நவீன தீண்டாமையை 35 வருட காலமாக அனுபவித்து வருபவன் நான். எனக்குப் பிடித்த நாவல்கள் என்று பிரமுகர்களின் பட்டியல் வெளிவருவதை நீங்கள் அறிவீர்கள். அந்தப் பட்டியலில் எப்போதுமே என் பெயர் இருந்ததில்லை. (சமீபத்தில் மனுஷ்ய புத்திரன் குறிப்பிட்டது மட்டுமே விதிவிலக்கு! அதுவும் 35 ஆண்டுகளாக எழுதி வரும் என் வாழ்க்கையின் 61-ஆவது வயதில் கிடைத்த அங்கீகாரம்!) அதுவாவது போகட்டும். தமிழ் எழுத்தாளர்களின் பட்டியல் போடுவார்கள். தேவன் பெயர் இருக்கும். கல்கி பெயர் இருக்கும். இந்திரா சௌந்தர்ராஜன் பெயர் கூட இருக்கும். ஜெயமோகன், எஸ்.ரா.விலிருந்து துவங்கி முந்தாநாள் வந்த உயிர்மையில் தன் முதல் சிறுகதையை எழுதிய ஒரு 25 வயதுப் பையனின் பெயர் கூட இருக்கும். ஆனால் என் பெயர் மட்டும் பட்டியலில் இருக்கவே இருக்காது.
1987-88இல் நான் கிரணம் என்ற பத்திரிகையை நான்கு இதழ்கள் கொண்டு வந்தேன். என் கைக்காசைப் போட்டு. அதை என்னுடைய மூத்த எழுத்தாளர் என்ற முறையில் அம்பைக்கு அனுப்பி வைத்தேன். அவர் மும்பையில் வசிப்பவர். என்ன செய்தார் தெரியுமா? நான் தபாலில் அனுப்பி வைத்த நான்கு இதழ்களையும் கவரைக் கூட பிரிக்காமல் அப்படியே இன்னொரு பெரிய கவரில் போட்டு பதிவுத் தபாலில் எனக்குத் திருப்பி அனுப்பினார். வெறுமனே redirect செய்யவில்லை. மீண்டும் சென்ற வாக்கியத்தை இன்னொரு முறை படியுங்கள். அதில் எனக்கு அவர் ஒரு கடிதமும் எழுதியிருந்தார். ”உங்களைப் போன்றவர்கள் ஸ்பானிஷிலோ ஃப்ரெஞ்சிலோ எழுதுவதே உத்தமம். தமிழை விட்டு விடுங்கள், பாவம்.” எனக்கு வார்த்தைகள் அப்படியே நினைவில் இல்லை. இதே அர்த்தம்தான். இலக்கிய தாதாக்களுக்கு 28 ஆண்டுகளுக்கு முன்பே என் மீது எத்தனை வன்மம் இருந்தது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு உதாரணம். இந்த அம்மாள் (ஜெ.வுக்கு நன்றி) தமிழ் இலக்கிய உலகின் அதிகார பீடங்களில் ஒருவர் என்பது இங்கே முக்கியமானது.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இன்னொரு சம்பவம். என் நண்பனின் அலுவலக அறை. அவனும் நானும் எதிர் எதிரே. அப்போது ஒரு மூத்த எழுத்தாளர் வந்தார். மூவரும் சுமார் மூன்று மணி நேரம் அந்த அறையில் இருந்தோம். அந்த மூத்த எழுத்தாளர் அந்த மூன்று மணி நேரமும் என் பக்கம் கூட தன் முகத்தைத் திருப்பவில்லை. அவரும் தமிழ் இலக்கிய உலகின் தாதாக்களில் ஒருவர்.
இன்னொரு அதிகார பீடம் க்ரியா ராமகிருஷ்ணன். 35 ஆண்டுகளாக இவரை எனக்குத் தெரியும். நான் க்ரியா அலுவலகத்துக்குச் செல்லும் போதெல்லாம் என்னைப் பார்க்க நேர்ந்தால் ஒரு மில்லிமீட்டர் அளவுக்குப் புன்னகை செய்வார். வாய் விட்டுக் கூட ஹலோ சொன்னதில்லை. முந்தாநாள் சென்னை புத்தக விழாவில் அவரது க்ரியா அரங்குக்குச் சென்று நிறைய புத்தகங்கள் வாங்கினேன். என் பக்கத்தில் நின்ற நண்பரை அவருக்கு அறிமுகம் செய்தேன். உடனே ராமகிருஷ்ணன் “He is a notorious wirter in Tamil” என்று என்னைப் பற்றிக் குறிப்பிட்டார். 35 ஆண்டுகளில் அவர் என்னிடம் அல்லது என்னைப் பற்றிப் பேசிய முதல் வாக்கியம். சந்தனக் கடத்தல் வீரப்பன், ஆட்டோ ஷங்கர், பில்லா ரங்கா போன்றவர்களைத்தான் notorious என்று குறிப்பிடுவார்கள். ஏழு நாவல்களும் 50 பிற நூல்களும் எழுதிய நான், க்ரியா ராமகிருஷ்ணனுக்கு notorious writer! (ராமகிருஷ்ணன் ஆங்கிலத்தில் விற்பன்னர். Controversial writer என்று என்னைப் பற்றி அவர் குறிப்பிட்டிருந்தால் அது பாராட்டு. அதனால்தான் notorious என்று குறிப்பிட்டார்!)
நேற்று நடந்த இன்னொரு சம்பவம். கிழக்கு அரங்கில் அமர்ந்திருந்தேன். அப்போது அங்கே ஒரு சீனியர் பத்திரிகையாளர் வந்தார். அதிகார பீடங்களில் ஒருவர். என்னைப் பார்த்ததும் ஒரு மில்லிமீட்டர் அளவுக்கு – கவனிக்கவும், உதடுகளை அல்ல – கண்களுக்கு மேலே இருக்கும் அல்லவா கொஞ்சம் மயிர் – அந்த மயிர்களை ஒரு மில்லிமீட்டர் அளவுக்கு உயர்த்தினார். எனக்கு செருப்பால் அடி வாங்கியது போல் இருந்தது. மயிரைக் காண்பித்து அவமானப்படுத்துகிறான்களே என்று உள்ளுக்குள் நொந்து போனேன். முன்பு போல் இருந்தேன் என்றால், அவரைத் தனியாக அழைத்து, “நீர் கண்களுக்கு மேலே உள்ள மயிரை ஆட்டிக் காண்பிக்கிறீர். நான் வேறிடத்தில் உள்ள மயிரை ஆட்டிக் காண்பிக்கவா?” என்று கேட்டிருப்பேன். ஆனால் இப்போது தியானம், யோகா எல்லாம் செய்து நான் முதிர்ந்து விட்டதால் (அதிஷா கவனிக்கவும்) அப்படி எதுவும் சொல்லவில்லை.
ஏன் இவர்களையெல்லாம் அதிகார பீடங்கள் என்கிறேன் என்றால், இவர்கள் தான் சாகித்ய அகாதமி போன்ற நிறுவனங்களுக்கு எழுத்தாளர்களைப் பரிந்துரை செய்பவர்கள். ஆங்கில இலக்கிய உலகுக்குத் தமிழ் எழுத்தாளர்களை அறிமுகம் செய்பவர்கள். இன்னொரு அதிகார பீடம் இருக்கிறது. அந்த பீடத்துக்கு என் பெயரே தெரியாது என்று நினைக்கிறேன். அந்த பீடத்தின் பெயர் சர்வதேச அளவில் தமிழ் ஸ்காலர் என்று பெயர் பெற்ற வெங்கடாசலபதி.
இந்த அதிகார பீடங்களுக்கும் இப்போது பிரபலமாகியிருக்கும் பெ. முருகனுக்கும் என்ன சம்பந்தம் தெரியுமா? பெ. முருகன் எழுத ஆரம்பித்த நாளிலிருந்து அவர் இந்த அதிகார பீடங்களின் செல்லப்பிள்ளை!
இந்த நிலையில் என் பெயரைக் குறிப்பிடாமல் புறக்கணிப்பதே 35 ஆண்டு காலமாக இங்கே நடக்கும் நியதி. மற்றபடி தனிப்பட்ட மிரட்டல் குறைவில்லாமல் வந்து கொண்டே இருக்கும். முந்தைய ஆட்சி பற்றி மிகக் கடுமையாக எழுதிய ஒன்றிரண்டு பேரில் நானும் ஒருவன். அப்போது எனக்குக் கொலை மிரட்டல் வந்தது. ”அவன் அவன் விக்கல் எடுத்துச் சாகிறான். விபத்தில் சாகிறான். உங்கள் கையால் மரணம் வந்தால் அதை மகிழ்ச்சியோடு வரவேற்பேன்” என்று மரண ஓலை கொண்டு வந்தவரிடம் சொல்லி அனுப்பினேன். நாகேஸ்வர ராவ் பூங்காவில் வைத்து அந்தச் சம்பவம் நடந்தது. உயிருக்கு அஞ்சாதவன் என்று தெரிந்து கொண்டதும் நான் சாப்பிடும் சாப்பாட்டில் கை வைத்தார்கள். கடவுளிடம் மட்டுமே போய் முறையிட்டேன். தேர்தலுக்குப் பிறகும் அதே ஆட்சி தொடர்ந்தால் என்னை சிறையில் தள்ளி விடுவார்கள் என்று எதிர்பார்த்து, தரையில் படுத்து, இந்தியப் பாணி கக்கூஸில் மலஜலம் கழித்து ட்ரெய்னிங் எடுத்துக் கொண்டேன்.
ஏன் தெரியுமா? எழுத்து என்பது எனக்கு என் உயிரை விட மேலானது. இது சத்தியமான வார்த்தை. என் எழுத்துக்காக நான் எந்தவித சமரசத்தையும் செய்ய மாட்டேன். ஒரு சாமியாரை எதிர்த்து ஒரு பத்திரிகையில் 25 வாரம் எழுதிய தொடர் கட்டுரைக்காக அவர் என் மீது எக்கச்சக்கமான கிரிமினல் வழக்குகளைத் தொடுத்தார். அவர் மட்டும் அல்ல; அவரது பெண் சீடர்களை வைத்தும் வழக்குகள் வந்தன. பெங்களூருக்கும் சென்னைக்கும் நாயைப் போல் அலைந்தேன். வழக்காடுவதற்குக் கூட பணம் இல்லை. என் நண்பர் ஒருவர்தான் வழக்காட ஏற்பாடு செய்தார். இதை ஒரு செய்தியாகப் போடுங்கள் என்று பத்திரிகைகளிடம் கேட்டேன். நீங்கள் யார் என்று கேட்டார்கள். இப்போது பெ. முருகனுக்கு ஊடகங்களில் கிடைத்துக் கொண்டிருக்கும் ஆதரவை நினைத்துப் பார்க்கிறேன். காரணம், பெ. முருகன் இலக்கிய தாதாக்களின் செல்லப் பிள்ளை.
மாதொரு பாகன் விவகாரத்தில் நானாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன்? உயிரையும் கொடுத்திருப்பேன். ஏனென்றால், உலகம் முழுவதும் எழுத்தாளர்கள் அதைத்தான் செய்து வந்திருக்கிகிறார்கள். லத்தீன் அமெரிக்க நாடுகளின் இலக்கியத்தைப் படித்து வளர்ந்தவன் நான். அங்கே எழுத்தாளன் என்றால், ஒன்று, கொன்று விடுவார்கள். அல்லது, நாடு கடத்தி விடுவார்கள். கலைஞர்களுக்கு ஆதரவான அதிபராக இருந்தால் வெளிநாடுகளில் தூதராக அனுப்பி விடுவார்கள். லத்தீன் அமெரிக்காவில் தன் வாழ்நாளில் நாடு கடத்தப்படாத ஒரு எழுத்தாளனைக் கூட நீங்கள் பார்க்க முடியாது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஓரான் பாமுக் ”பத்து லட்சம் ஆர்மீனியர்களும் 30000 குர்தியர்களும் இந்த நாட்டில் (துருக்கி) கொல்லப்பட்டார்கள்” என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டதற்காக அவர் மீது தேசத் துரோகக் குற்றத்தைச் சுமத்தியது துருக்கி அரசு. கடைசி வரை அவர் தன் கருத்தை மாற்றிக் கொள்ளவோ மன்னிப்புக் கேட்கவோ இல்லை. பிறகு பாமுக் மீதான குற்றச்சாட்டைத் திரும்பப் பெற்றுக் கொள்ளாவிட்டால் துருக்கியை ஐரோப்பிய யூனியனில் சேர்த்துக் கொள்ள மாட்டோம் என்று ஐ.யூ. நாடுகள் மிரட்டியதால் அதற்குப் பயந்து பணிந்தது துருக்கி அரசு. அவன் தான் எழுத்தாளன். ஆனால் நம் பெ. முருகன் என்ன செய்தார்? மாவட்ட வருவாய் அலுவலரின் அலுவகத்தில் போய் மன்னிப்புக் கேட்டார். அது மட்டும் அல்லாமல் தனது படைப்புகள் அனைத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும், தன் நூல்களை வெளியிட்ட பதிப்பகங்கள் அந்த நூல்களை இனி விற்க வேண்டாம் என்றும், அதற்கான நஷ்ட ஈட்டை தான் பதிப்பகங்களுக்குக் கொடுத்து விடுவதாககவும், அதேபோல் தன் புத்தகங்களை இதுவரை வாங்கியவர்கள் அவற்றை எரித்துவிடலாம் என்றும் அதற்கான நஷ்ட ஈட்டை தான் கொடுத்து விடுவதாகவும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
துருக்கியை, லத்தீன் அமெரிக்க நாடுகளை விடுங்கள். நம் இந்தியாவில் சுதந்திரப் போராட்ட காலத்தில் தன் கல்லூரிப் படிப்பையே நிறுத்திக் கொண்டு எத்தனை ஆயிரம் மாணவர்கள் சிறைக்குச் சென்றார்கள் என்று நாம் அறிந்திருக்கிறோம். தாங்கள் நம்பிய ஒரு கோட்பாட்டுக்காகத் தங்கள் வாழ்க்கையையே துறந்தார்கள். ஆனால் இங்கே ஒருவர் தன்னை எழுத்தாளர் என்று இத்தனைக் காலம் சொல்லிக் கொண்டவர் – ஒரு பேராசிரியர் – தமிழ் இலக்கிய தாதாக்களின் செல்லப்பிள்ளை – எல்லா ஊடகங்களின் வீரகதா நாயகன் – இன்று நான் எழுத்தாளனே இல்லை என்கிறார். ஒரு எழுத்தாளனாக இது எனக்கு அவமானம் என்று கருதுகிறேன்.
காவல்நிலையங்களில் writer என்று ஒரு பதவி உண்டு என்பது உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். இன்ஸ்பெக்டர் அந்த எழுத்தரை ஏதேனும் திட்டிவிட்டால், ஐயோ சார் மன்னித்து விடுங்கள் என்று எழுந்து நின்று கைகூப்பி கூழைக் கும்பிடு போடுவார் அல்லவா எழுத்தர்? அந்த எழுத்தரைப் போன்றவரே இந்தப் பெ. முருகன் என்பதை இப்போது அவரது அறிக்கையின் மூலம் நிரூபித்து விட்டார்.
நான் எதைப் பற்றி எழுதினாலும் அதற்கு முன் அது பற்றிய அனைத்துத் தரவுகளையும் வாசித்து விட்டே செய்வது வழக்கம். அதன்படி மாதொரு பாகனைப் படித்தேன். பெ. முருகனுக்காக இன்று கண்ணீர் வடிக்கும் பெரும்பாலானவர்கள் அந்த நாவலைப் படிக்கவில்லை என்றே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு வணிக மசாலா சினிமாவில் கூட தப்பித் தவறி ஏதேனும் ஒரு கலை நுணுக்கம் (nuance) இருந்து விடக் கூடும். ஆனால் மாதொரு பாகனில் அப்படி எதுவுமே இல்லாமல் மிகத் தட்டையாக எழுதப்பட்டிருக்கிறது. முழுக்க முழுக்க ஒரு மூன்றாம் தரமான தமிழ் சினிமாக் கதை. ஆனால் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் பெ. முருகன் விஷமம் காட்டியிருக்கிறார். அந்த விஷமத்தனத்துக்காக அவர் மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதாது. திருச்செங்கோடு பகுதியில் வசிக்கும் ஒவ்வொரு குறிப்பிட்ட சாதிப் பெண்ணின் காலிலும் விழுந்து மன்னிப்புக் கேட்க வேண்டும்.
ஏனென்றால்,
நூறு ஆண்டுகளுக்கு முன்பு திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலின் பதினான்காம் நாள் திருவிழாவின் போது அந்தப் பகுதியில் வசிக்கும் குறிப்பிட்ட சாதிப் பெண்களில் குழந்தை இல்லாதவர்கள் விழாவுக்கு வந்து அங்கே தென்படும் ஆண்களில் தனக்குப் பிடித்தவரைத் தேர்ந்தெடுத்து அவரோடு உடல் உறவு கொண்டு கருத்தரிப்பார்கள்; அதுவே அங்கே பல நூற்றாண்டுகளாக இருந்து வந்த பழக்கம் என்று எழுதியிருக்கிறார். கதையின் கருவே அதுதான். கதை முழுக்கவே அதுதான். காளி, பொன்னா இருவரும் ஜோடி. திருச்செங்கோடு பக்கத்தில் உள்ள கிராமம். பொன்னாவுக்குக் குழந்தை இல்லை. ஊர் அவளைக் கேலி பேசுகிறது. நாவலின் 190 பக்கத்தில் 180 பக்கம் அந்தக் கேலி தான் தமிழ் சினிமா பாணியில் விவரிக்கப்படுகிறது. சுகன்யாவை நினைத்துக் கொள்க. கடைசி பத்து பக்கத்தில் பொன்னாவை அவளுடைய தாயும், மாமியாரும் பதினான்காம் நாள் திருவிழாவில் யாரோ ஒருத்தனுக்குக் கூட்டிக் கொடுக்கிறார்கள். நான் சொல்லவில்லை சாமி. பெ. முருகனின் கதாநாயகன் காளிதான் அப்படிச் சொல்லி விட்டுத் தற்கொலை செய்து கொள்கிறான். சுபம்.
இப்படி ஒரு கயவாளித்தனமான கற்பனையை பெ. முருகன் பிற சாதிகளை வைத்து எழுத முடியுமா? பிற மதத்துப் பெண்களை வைத்து இப்படி எழுத முடியுமா? அப்படியிருக்க ஒரு சாதி பற்றி மட்டும் இவர் எப்படி எழுதலாம்? கவுண்டர் சாதியில் இப்படி ஒரு பழக்கம் இருந்தது என்பதற்கு என்னய்யா ஆதாரம் என்று கேட்டால் அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று கதை அளக்கிறார் முருகன். மானுடவியல் ஆதாரம் இருந்தது என்றால் அதையும் கொடுக்க முடியவில்லை. ஏனென்றால், இது ஒரு கட்டுக்கதை. எல்லா சாதிப் பெண்களைப் பற்றியுமே அந்தந்தப் பகுதிகளில் இப்படிப்பட்ட கட்டுக்கதைகள் உண்டு. பெண்களை மலினப்படுத்துவதற்காக, பெண்களை செக்ஸ் வெறி கொண்டவர்களாகச் சித்தரிக்கும் பல கட்டுக்கதைகள் எப்போதுமே ஆண் வர்க்கத்தினரால் உருவாக்கி உலவவிடப் படுவது உண்டு. பெண்கள் கல்லூரி இருக்கும் பகுதிகளில் இது போல் பல washerman கதைகளும் உண்டு. அந்தக் கதைகளைக் கேட்காத ஆண்கள் கிடையாது. ஆண்களின் பாலியல் வக்கிரக் கதைகள் எல்லாம் உண்மையா? குடும்பத்துக்கு வெளியே பாலுறவு கொள்வது எல்லா தேசங்களிலும் எல்லாக் காலங்களிலுமே உள்ள ஒரு விஷயம். பெண்கள் மீதான குடும்ப ஒடுக்குமுறை காரணமாக இதில் அதிகம் ஈடுபடுவது ஆண்களே என்பதும் நமக்குத் தெரியும். இந்த வரம்பு மீறலை ஒரு சாதிக்கு மட்டும், அதுவும் ஒரு ஊரில் நூற்றாண்டுகளாக இருந்தது; அதுவும் கோவில் திருவிழாவில் என்று எழுதுவதற்குப் பெயர் கருத்துச் சுதந்திரம் அல்ல; அயோக்கியத்தனம். ஒரு இனக்குழுவின் மீதான வன்முறை. இந்த வன்முறையைத் தட்டிக் கேட்காமல், தமிழ் எழுத்தாளர்களும் ஊடகங்களும், கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபட்ட நபருக்குச் சார்பாக எழுதுவதும் பேசுவதும் தமிழ்நாட்டில் மட்டுமே காணக்கூடிய அவலங்களில் ஒன்று.
நன்றி: அந்திமழை.காம்

-ருத்ரா

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி