ஜி.டி.நாயுடு
ஜி.டி.நாயுடு தயாரித்த பிளேடுகளைத் தானே தயாரித்துக்கொள்ள ஒரு அமெரிக்க நிறுவனம் விருப்பம் தெரிவித்து அதன் காப்புரிமையை ஒரு லட்சம் டாலருக்கு விற்கும்படி கேட்டது. ஆனால் ஜி.டி.நாயுடு சம்மதிக்கவில்லை. தமிழகத்திலேயே அவற்றைத் தயாரிக்கும் எண்ணத்தில் அதற்குத் தேவையான எஃகை நார்வே நாட்டிலிருந்து இறக்குமதி பெரும் முயற்சியெடுத்தார். ஆனால் ஆங்கிலேய அரசு இட்ட அதிக பட்ச வரியால் அவரது முயற்சி கைகூடவில்லை. அதனால் ஜி.டி.நாயுடுவின் கண்டு பிடிப்புகளுக்கு காப்புரிமம் செய்ய முடியாமலே போய்விட்டன. அன்றைய சூழலில் நாட்டிலேயே அதிக வரி செலுத்தியவர்களில் ஜி.டி.நாயுடு ஒருவர் என்ற போதும் அவர் மேல் வரி ஏய்ப்பு செய்பவர் என்ற அவப்பெயர் சுமத்தப்பட்டது.
அவரது கண்டுபிடிப்புக்கு 10 லட்சம் ரூபாய் கொடுக்க ஓர் அமெரிக்க நிறுவனம் முன்வந்த போது, பணத்தை வாங்கிக் கொள்ளாமல் தனது கண்டுபிடிப்புக்கான உரிமையை இலவசமாகவே வழங்கிய தியாகி ஜி.டி.நாயுடு. இதற்கு ‘‘அமெரிக்க நிறுவனத்திடமிருந்து 10 லட்சம் ரூபாயை வாங்கி, இங்கிருக்கும் ஆங்கிலேய அரசுக்கு ஒன்பது லட்சம் ரூபாய் வரி செலுத்துவதை விட, அதனை இலவசமாகக் கொடுப்பதே மேல்’’ என்று விளக்கம் கூறினார் ஜி.டி.நாயுடு.
ஆங்கிலேய அரசு தான் இப்படி என்றால் சுதந்திரத்துக்குப் பிறகும், மத்திய அரசு ஜி.டி.நாயுடுவின் கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கம் அளிக்கவில்லை. அவரது தொழில் முயற்சிகளுக்குக் கெடுபிடிகள் தொடர்ந்து கொண்டே தான் இருந்தன. வெறுத்துப்போன ஜி.டி.நாயுடு, 1953 ஆம் ஆண்டு சென்னைக் கடற்கரையில் மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்தி, பெரியார், அண்ணா போன்ற தலைவர்கள் முன்னிலையில் பலர் தடுத்தும் அவர் கண்டுபிடித்த ரேடியோக்களையும் பல விஞ்ஞான கருவிகளையும் உடைத்து நொறுக்கினார்.
வெறும் 2,500 ரூபாய்க்கு தயாரிக்க கூடிய சிறிய காருக்கான புளூ பிரிண்டை மத்திய அரசுக்கு அனுப்பினார் ஜி.டி.நாயுடு. அதுவும் அந்த காலத்திலேயே! ஒருவேளை அரசு அவருக்கு ஒத்துழைத்திருந்தால் இந்திய கார்கள் உலக கார் சந்தையைக் கலக்கியிருக்கும். அதே போல குறைந்த செலவில் குறுகிய நேரத்தில் வீடு கட்டும் திட்டம் ஒன்றையும் ஜி.டி.நாயுடு தயாரித்திருந்தார். இவர் மேல் திணிக்கப்பட்ட அதிகபட்ச வரி காரணமாக, இவரது பல கண்டுபிடிப்புகள் நாட்டுக்குப் பயன்படாமல் போய்விட்டன.
நன்றி: நியோ தமிழ்
Comments