போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு!
கிசான் விகாஸ் பத்திரம் திட்டத்தில் சேமித்தே விரைவில் லட்சாதிபதி ஆகிவிட முடியும். இந்தத் திட்டத்தில் எப்படி இணைவது, என்ன பயன், முதலீடு எவ்வளவு போன்ற தகவல்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்...
போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு!
இந்திய தபால் துறை சார்பாக, தபால் நிலையங்களில் பல்வேறு சிறு சேமிப்புத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. நீண்ட கால அடிப்படையில் பொதுமக்களுக்கு நல்ல லாபத்தைத் தரக்கூடிய இந்த சேமிப்புத் திட்டங்கள் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன. அபாயம் இல்லாத முதலீடுகள் செய்யும் முதலீட்டாளர்களுக்கு இவை நல்ல தேர்வாக இருக்கும். அவர்களின் முதலீட்டுக்கு உத்தரவாதமான லாபமும் கிடைக்கிறது.
இந்திய தபால் துறை வாயிலாக மத்திய அரசு செயல்படுத்தி வரும் ஒன்பது சிறு சேமிப்புத் திட்டங்களில் கிசான் விகாஸ் பத்திரம் திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் தொகை 10 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்களில் இரட்டிப்பாகி விடும். நீங்கள் பத்திரம் வாங்கிய பின்னர் இரண்டரை ஆண்டுகள் கழித்து உங்களால் பணத்தை எடுக்க முடியும்.
கிசான் விகாஸ் பத்திரத்தைத் தனிநபரோ அல்லது மூன்று பேர் வரையில் கூட்டாகவோ வாங்க முடியும். 10 வயதுக்கு மேற்பட்ட மைனர் கூட இந்த பத்திரத்தை வாங்கலாம். அவரது பெயரில் வயது வந்த பாதுகாவலர் அல்லது உறவினர் வாங்க முடியும். நாட்டிலுள்ள எந்தவொரு அஞ்சல் நிலையத்திலும் இந்த கிசான் விகாஸ் பத்திரத்தை நீங்கள் வாங்க முடியும். ஒரு நபரின் பெயரில் இருந்து மற்றொரு நபரின் பெயருக்கு இந்தப் பத்திரத்தை மாற்ற முடியும். அதேபோல, ஒரு அஞ்சல் அலுவலகத்திலிருந்து மற்றொரு அஞ்சல் அலுவலகத்துக்கும் நீங்கள் பத்திரக் கணக்கை மாற்றிக்கொள்ளலாம்.
கிசான் விகாஸ் பத்ரா திட்டத்துக்கான வட்டி விகிதத்தை ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒரு முறை மத்திய அரசு நிர்ணயம் செய்கிறது. தற்போதைய நிலவரப்படி 6.9 சதவீத வட்டி கிடைக்கிறது. இதன்படிப் பார்த்தால் நீங்கள் முதலீடு செய்யும் தொகை 10 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்களில் இரட்டிப்பாகி விடும்.
இத்திட்டத்தில் நீங்கள் குறைந்தது 1,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்ச வரம்பு எதுவும் கிடையாது. நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்ய முடியும். ரூ.1,000, ரூ.5,000, ரூ.10,000, ரூ.50,000 என வெவ்வேறு மதிப்பில் இத்திட்டத்தின் கீழ் பத்திரங்கள் கிடைக்கின்றன.
இத்திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், உங்களுக்கு ஆபத்தே இல்லாமல் உறுதியான பணம் கிடைக்கும். கொரோனா போன்ற சமயங்களில் சந்தையில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதால் இதுபோன்ற உத்தரவாதம் தரும் திட்டங்கள் உங்களுக்கு சிறந்த தேர்வாக அமையும். சந்தை நிலவரங்களால் இத்திட்டத்தில் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது. எனவே இது ஒரு பாதுகாப்பான சேமிப்பாகும். வருமான வரிச் சட்டம் 80சி-இன் கீழ் வரிச் சலுகை கிடைப்பது இத்திட்டத்தின் கூடுதல் அம்சமாகும்.
Comments